திருக்குர்ஆன் கூறும் ஓரிறை கொள்கை
இன்று உலகத்தில் உள்ள எல்லா மார்க்கங்களையும், மதங்களையும் எடுத்துப்பார்த்தால் ஏதோ ஒரு வகையில் அங்கு பல தெய்வ வணக்கம் குடி கொண்டிருப்பதை பார்க்கலாம்.
உயிரோடு உள்ள மனிதர்களை வணங்குகிறார்கள். இறந்தவர்களை வணங்குகிறார்கள். பொருட்களை வணங்குகிறார்கள். இப்படியெல்லாம் நடப்பதை இன்றைய உலகில் பார்க்கிறோம். தெளிவாகவே பல கடவுள் கொள்கையைப் பிரகடனம் செய்யும் மதங்களையும் நாம் பார்க்கிறோம்.
ஆக்குவதற்கு ஒரு கடவுள், அழிப்பதற்கு ஒரு கடவுள், காப்பதற்கு ஒரு கடவுள், துன்பத்தை நீக்க ஒரு கடவுள், இன்பத்தை வழங்க ஒரு கடவுள், மழைக்குத் தனி கடவுள், உணவு வழங்க இன்னொரு கடவுள் கல்விக்கு என்று ஒரு கடவுள் என்று கணக்கின்றி கடவுள்கள் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.
ஓரு மனிதனை அழிக்க வேன்டுமென அழிக்கும் கடவுள் முடிவு செய்து அதற்கான முயற்சியில் இறங்கும் வேளையில் காக்கும் கடவுள் அதே மனிதனைக் காக்கும் முயற்சியில் இறங்கினால் என்ன ஏற்படும்? அந்த மனிதன் அழிக்கப்படுவானா? அல்லது காக்கப்படுவானா?
இரண்டில் எது நடந்தாலும் ஒரு கடவுள் தோற்று விடுகிறான். தோற்றவன் கடவுளாக இருக்க முடியுமா? தான் நினைத்ததைச் சாதிக்க இயலாதவன் கடவுள் என்ற தகுதிக்கு எப்படிச் சொந்தம் கொண்டாட முடியும்?
தமிழனுக்கும் மலையாளிக்கும் அல்லது இந்தியனுக்கும் அரபியனுக்கும் சன்டை ஏற்பட்டால் இருவரும் தத்தமது கடவுள்களை அழைத்து உதவி தேடினால் இரு கடவுள்களும் தத்தமது அடிமையைக் காக்க முன் வந்தால் என்னவாகும்? இருவரில் யார் தோற்றாலும் அங்கே கடவுளல்லவா தோற்றுப் போகிறான்?
இந்த பூமியையும், ஏனைய கோள்களையும் அண்ட வெளியும், அவற்றில் வாரி இறைக்கப்பட்டுள்ள அதிசயங்களையும் நாம் காண்கிறோம். இவற்றின் இயக்கங்கள் யாவும் ஒரே சீராகவும், ஒழுங்குடனும் அமைந்துள்ளதையும் பார்க்கிறோம்.
ஆயிரம் வருடத்துக்குப் பிறகு ஒரு ஜனவரி 7ம் தேதியில் சென்னையில் எத்தனை மணிக்கு சூரியன் உதிக்கும் அல்லது மறையும் என்பதை இப்போதே நம்மால் கணித்துச் சொல்ல முடிகிறது. கணித்து சொல்ல முடிகிற அளவுக்கு சூரியன் மற்றும் பூமியின் இயக்கங்கள் திட்டமிட்டபடி சீராக உள்ளன என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.
எப்போதோ ஏற்படும் சூரிய சந்திர கிரகணங்களை இன்றைக்கே கணக்கிட முடிகிறது. ஏந்தெந்தப் பகுதியில் எவ்வளவு நேரம் கிரகணம் நீடிக்கும் எந்தெந்த பகுதியில் முழமையாக இருக்கும் என்றெல்லாம் கூட அறிவிக்க முடிகிறது.
பல கடவுள்கள் இருந்தால் ஒரே சீராக இவை இயங்கவே முடியாது. ஒருவனின் ஒரே உத்தரவின் படி இயங்குவதால்தான் கோள்கள் ஒன்றுடன் ஓன்று மோதுவதில்லை. இப்படி அழுத்தம் திருத்தமான கடவுள் சொள்கையை இஸ்லாம் கொண்டிருக்கிறது.
மொத்த உலகத்திற்கும் ஓரே கடவுள் தான் இருக்க முடியும் பல கடவுள்கள் இருக்க முடியாது என்றும் இஸ்லாம் கூறுகின்றது. இதை குர்ஆன் தர்க்க ரீதியாகவே சொல்லி வாதிக்கிறது.
அவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் இரண்டும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ் தூயவன். (திருக்குர்ஆன் 21:22)
“நான் எச்சரிக்கை செய்பவனே. அடக்கியாளும் ஒரே அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை” என்று (முஹம்மதே!) கூறுவீராக! (திருக்குர்ஆன் 38:65)
இத்தகைய தெளிவான கடவுள் கொள்கை உலகில் எந்த மதத்திலும் காண முடியாததாகும். பொதுவாக கடவுள் மறுப்பாளர்கள் உருவானதற்குக் முக்கிய காரணங்களில், மதத்தின் பெயரால் நடக்கும் சுரண்டல்களும் ஒன்று.
கடவுளுக்கு காணிக்கைகள் போடப்படுகின்றன. போடப்படும் காணிக்கைகள் கடவுளுக்குப் போகவில்லை என்பதையும் கடவுளுக்கு பூஜை நடத்துபவர்களே அவற்றைப் பங்கிட்டுக்கொள்வதையும் மனிதன் நேரடியாக பார்க்கின்றான். கடவுளின் பெயரைச் சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்களே? என்ற கோபம் ஏற்படுகின்றது. இந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான் கடவுள் மறுப்புக் கொள்கை.
கடவுள் என்பவன் ஒரு தேவையும் இல்லாதவன் என்று நம்ப வேண்டும். கடவுள் என்பவனுக்குத் தேவை இருந்தால் அவன் என்ன கடவுள்? என்று இஸ்லாம் கேள்வி எழுப்புகிறது. அதனால் தான் கடவுள் எந்த விதத் தேவையுமற்றவன் என இஸ்லாம் கூறுகின்றது.
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் புகழுக்குரியவன்; தேவைகளற்றவன் (திருக்குர்ஆன் 22:64)
அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும் (திருக்குர்ஆன் 22:37)
மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வோ தேவையற்றவன். (திருக்குர்ஆன் 35:15)
கடவுளுக்கு உறவுமுறைகள் அதாவது கடவுளுக்கு அண்ணன், தம்பி, தாய், தந்தை, பாட்டன், சித்தப்பன், தங்கை என்றெல்லாம் உறவுகள் இருக்கக் கூடாது. ஓரிறைதான் உண்டு என்ற கொள்கையில் அதற்கு இடமே கிடையாது. இதை இஸ்லாம் அழுத்தம் திருத்தமாக அறிவிக்கின்றது. திருமறைக் குர்ஆனில்
‘அல்லாஹ் ஒருவன்‘ என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றன். யாரையும் அவன்; பெறவுமில்லை. அவன் யாருக்கும் பிறக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் 112:1-4)
நீங்கள் யாரைக் கடவுள் என்று நம்புகிறீர்களோ அந்தக் கடவுள் யாருக்காவது பிறந்தான் எனில் அங்கே ஒரு பலவீனம் ஏற்படுகிறது. உங்களுடைய கடவுள் கொள்கையில் உங்களுக்கே ஏற்படுகிறது. முரண்பாடு என்னவென்றால், நீங்கள் கடவுள் என்று சொல்கிறீர்கள். கடவுள் தான் அனைத்தையும் படைத்தான் என்றும் சொல்கிறீர்கள். அந்தக் கடவுளே கொஞ்ச காலத்திற்கு முன் இல்லாமல் இருந்திருக்கிறார். யாருக்கோ பிறந்தவன் என்றால் அவர் பிறப்பதற்கு முன்புள்ள கால கட்டத்தில் கடவுள் என்று ஒருவர் இல்லை. அதாவது கடவுளுக்கு முன்பே கடவுளுடைய பெற்றோர்கள் உலகில் இருந்திருக்கிறார்கள்.
கடவுளுடைய தாயும், தந்தையும் கடவுளுக்கு முன்பே உலகில் இருந்தால் அவர்கள் தான் கடவுளர்களாக இருப்பதற்குதகுதி பெற்றவர்களே தவிர, இல்லாதவனாக இருந்து பிறகு உருவாகி, அதாவது மனிதர்களின் உடற்சேர்கையினால் பிறந்தவர் எப்படி கடவுளாக முடியும்? எனவே தான் திருமறைக் குர்ஆன் உங்களைப் படைத்த, நீங்கள் வணங்கக்கூடிய ஒரு கடவுளான அல்லாஹ்வுக்கு சந்ததி கிடையாது. அவனுக்கு தாய் தகப்பனும் கிடையாது என்று கூறுகின்றது.
சந்ததியும் கடவுளுக்கு இருக்க முடியாது என்பதை ஆராய்வோம். சந்ததி யாருக்கு தேவைப்படும் என்பதை சிந்திப்போமானால் அழிந்து போகக் கூடிய ஒருவனுக்குதான் தேவைப்படும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அழிவு இருப்பதன் காரணத்தினாலேயே நாம் சந்ததிகளை விரும்புகிறோம்.
(அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். அவன் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன். (அல்குர்ஆன் 6:101)
எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ பிள்ளைகளையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை. (திருக்குர்ஆன் 72:3)
கடவுள் கொள்கை என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதை திருக்குர்ஆன் தெள்ளத்தெளிவாக சொல்கிறது இன்னும் பல கோணங்களிலும் கடவுள் கொள்கையை வர்ணிக்கிறது இவைகளின் அடிப்படையில் அந்த ஒரு இறைவனுக்கு யாரையும் இணையாகாத சமூகமாக பரிணமிப்போம்.
இந்த fileயை download செய்ய இங்கே கிளிக் செய்யவும்