மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!
அகில உலகைப் படைத்த இறைவன், மனிதப் படைப்புகளை பிற உயிரினங்களைவிட மேன்மையாக வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்களாகப் படைத்திருக்கின்றான். நீதி செலுத்துவதற்கும், சமத்துவம் பேணப்படுவதற்கும், எவ்வாறு வாழ்வியல் வழிகாட்டியாக கற்றுத் தந்திருக்கின்றானோ அதன் அடிப்படையில் மனித சமுதாயம் தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் நிச்சயமாக அனைவருக்கும் சமநீதி செலுத்தப்படும்.
இஸ்லாம், பிற மதக்கொள்கை கோட்பாடுகளைக் காட்டிலும் மிகப்பெரிய வித்தியாசத்தோடு தனித்து விளங்க காரணம் சக மனிதர்களுக்கு நீதி செலுத்துவது குறித்தும், நீதிக்கு சாட்சியாக இருப்பது குறித்தும் இஸ்லாம் ஏராளமான இடங்களின் அழுத்தந் திருத்தமாகவும், ஆழமாகவும் உள்ளங்களில் பதிய வைக்கின்றது. அநீதிக்கு சாட்சியாக இருப்பவர்களையும், அநியாயத்திற்குத் துணை போகின்றவர்களையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
சக மனிதர்களுக்கு நாம் இழைக்கின்ற அநீதி மறுமை நாளில் பூதாகரமாகக் கிளம்பி நம்மை வறுத்தெடுக்கும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அநீதியிழைப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் அநீதியானது, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும். – நூல்: முஸ்லிம் 5034.
மறுமையின் பேரிழப்பு
அநீதி இழைத்தவர்கள் மறுமையில் அதிகப்படியான இழப்பைச் சந்திப்பார்கள் என்றும், செய்த நன்மைகள் அனைத்தும் அழிந்து நாசமாகி விடும் என்றும் பயங்கரமான எச்சரிக்கையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துரைக்கின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர், தன் சகோதரனுக்கு அவனது மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும்.
ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனது அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரது தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும். – நூல்: புகாரி 2449
நாளை மறுமையில் அநீதி இழைத்தவர்கள் படும் அவல நிலையை இச்செய்தி நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றது. அநீதி இழைத்தவர்கள் இந்த உலகத்திலேயே தன்னால் பாதிக்கப்பட்டவர்களிடத்தில் கணக்குத் தீர்த்துக் கொள்ளவில்லையானால், நாளை மறுமையில் அவர்கள் செய்த நன்மையை வாங்கிக் கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் கணக்குத் தீர்த்து கொள்வார்கள். அநியாயக்காரனின் நன்மைகள் முடிந்து விட்டால், பாதிக்கப்பட்டவர்கள் தன்னுடைய தீமைகளை அவர்களின் தலையில் சுமத்தி கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள்.
இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக சக முஸ்லிம்களுக்கு துரோகத்தையும், நம்ப வைத்து ஏமாற்றுவதையும், பெரும் கூட்டத்திற்கு அநீதி இழைப்பதையும் பார்க்கின்றோம். அநீதியின் அளவுக்கு நன்மைகள் பறிக்கப்படும் நாளில் கைசேதப்பட்டு நிற்பதை அஞ்சி, பிறருக்கு அநீதி இழைப்பதிலிருந்து தவிர்ந்து வாழக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
நீர் தீர்ப்பளித்தால் அவர்களுக்கிடையே நீதியாகத் தீர்ப்பளிப்பீராக! நீதி செலுத்துவோரையே அல்லாஹ் நேசிக்கிறான். -அல்குர்ஆன்:5:42)
இறைவன் நீதிமிக்கவன் ஆனால் நாம் இறைவனிடம் நீதியாக உள்ளோமா
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராக ஆகிவிடுங்கள். உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினர்களுக்கோ பாதகமாக இருந்தாலும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுங்கள். (யாருக்காக சாட்சி சொல்கிறீர்களோ அவர்) செல்வந்தராக இருந்தாலோ அல்லது ஏழையாக இருந்தாலோ அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். எனவே, நீதி செலுத்துவதில் சுய விருப்பத்தைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் மாற்றிக் கூறினாலோ அல்லது (சாட்சி கூற) மறுத்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கிறான். -(அல்குர்ஆன்:4:135)
நம்பித் தரப்பட்ட பொருட்களை அதற்குரியோரிடம் நீங்கள் ஒப்படைக்க வேண்டும் என்றும், மக்களுக்கிடையே தீர்ப்பளித்தால் நீதியாகத் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரையே உங்களுக்கு மிகச் சிறந்தது. அல்லாஹ் செவியுறுபவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கிறான் – (அல்குர்ஆன்:4:58)
அநியாயம் செய்வது ஹராம்
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்கு சாட்சியாளர்களாக ஆகிவிடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள வெறுப்பு நீங்கள் நீதி செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்டவேண்டாம். நீதி செலுத்துங்கள்! அதுவே இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். –(அல்குர்ஆன்:5:8)
உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒட்டு மொத்த நபர்களுக்கும் இந்த வசனம் அற்புதமான பாடத்தை நடத்துகின்றது. அதாவது ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை காரணமாக, குரோதம் காரணமாக நீதி செலுத்த விடாமல், அநியாயமாக நடக்க உங்களை உங்கள் உள்ளம் தூண்டி விட வேண்டாம் என்று கூறி, நீதிக்குத்தான் சாட்சியாக இருக்க வேண்டும் என்று இறைவன் தெள்ளத் தெளிவாகப் பறைசாற்றுகின்றான்.
நீதியாளர்களுக்கு சிறந்த முன்மாதிரி
இன்றைய கால சூழ்நிலையில் நீதியாளர்கள் என்ற தகுதியிலும், அந்தஸ்திலும் இருப்பவர்கள் சகட்டு மேனிக்குத் தங்களின் மனம் போன போக்கில் நீதி வழங்கி விடுவதைப் பார்க்கின்றோம். ஆனால் நீதி செலுத்துபவர்களின் மிகச் சிறந்த முன்மாதிரியாக நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டியிருக்கின்றார்கள்.
(என் தந்தை) அபூபக்ரா (ரலி) அவர்கள் தம் புதல் (வரும் என் சகோதரருமான உபைதுல்லாஹ் என்பவருக்கு கடிதம் எழுதினார்கள். அவர் (ஈரான்-ஆப்கன் எல்லையிலிருந்த) சிஜிஸ்தான் பகுதியில் (நீதிபதியாக) இருந்தார். “நீ கோபமாக இருக்கும்போது இருவரிடையே தீர்ப்பளிக்க வேண்டாம். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், நீதிபதி எவரும் கோபமாக இருக்கும்போது இருவருக்கிடையே தீர்ப்பளிக்க வேண்டாம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்’’ (என்று அக்கடிதத்தில் எழுதினார்கள்)-அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் – புகாரி 7158
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் “ஒரு சொத்தை அபகரிப்பதற்காக யார் திட்டமிட்டு பொய்ச் சத்தியம் செய்கிறாரோ அவர் மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில் தவிர வேறுவிதமாக அவனை அவர் சந்திக்கமாட்டார்’’ என்று சொன்னார்கள். – ஆதாரம்: புகாரி 7183
அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் நீதியைப் பற்றி கூறிய அனைத்து உபதேசங்களையும் நம்முடைய அன்றாட வாழ்வில் கடைபிடிப்போமாக.! அந்த பாக்கியம் கொண்டவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக.!
வெளியீடு:-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)
இந்த துண்டு பிரசுரத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்…