ரமளானின் அருளை நமதாக்குவோம்!
மனிதனை அழகிய படைப்பாக்கிய அல்லாஹ், மனிதன் மீது அளவுகடந்த அன்பும் இரக்கமும் கருணையும் கொண்டுள்ளான். இம்மையிலும் மறுமையிலும் மனிதன் வெற்றி பெற்றிட வேண்டும் என்பதற்காக, அதற்கு தேவையான இறை நேர்வழிகாட்டலையும் வகுத்தளித்திருக்கின்றான். குறிப்பாக, ரமளான் மாதத்திற்கென்று கூடுதல் சிறப்புக்களை வழங்கி ஒவ்வொரு முஸ்லிமும் அம்மாதத்தின் முழுமையான பயனையும் அருளையும் அடைய வழி வகுத்துள்ளான்.
‘ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழி காட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை, தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப் பெற்றது’. (அல்குர்ஆன் 2:185)
நோன்புக்குரிய மாதம்.
உலகமகா அற்புதமான திருக்குர்ஆன் ரமளான் மாதத்தில் இறக்கப்பட்ட காரணத்திற்காக அந்த ரமளான் மாதத்தில் நோன்பு வைக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. இது அதற்குரிய மற்றொரு சிறப்பு.
‘ஆகவே எவர் அம்மாதத்தை அடைந்து கொள்கின்றாரோ அவர் அம்மாதம் (முழுவதும்) நோன்பு நோற்கட்டும்’. (அல்குர்ஆன் 2:185)
வானத்தின் வாயில்கள் திறக்கப்படும் மாதம் / அருளின் வாயில்கள் திறக்கப்படும் மாதம்.
‘ரமளான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன…’ – நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1899)
‘ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன’…. – நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1957)
“ரமளான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன” என்பதன் கருத்து, நாம் நரகிலிருந்து தப்பித்து இலகுவாக சொர்க்கம் செல்வதற்கான வாய்ப்புகளை இறைவன் ரமளான் மாதத்தில் வைத்துள்ளான். மனிதன் தான் செய்யும் பாவங்களால்தான் நரகத்திற்குச் செல்கிறான். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மூலம் நமக்கு இறைவன் கற்றுக்கொடுத்த சிறு வணக்கங்களை இம்மாதத்தில் செய்தால் அவற்றின் மூலம் நம் பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிக்கிறான். இதுபோன்ற வணக்கங்களுக்கு பன்மடங்கு நன்மைகளையும் சுவனத்து பாக்கியங்களையும் அல்லாஹ் வழங்குகிறான்.
நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படும் மாதம் / ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்ற மாதம்.
….நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன….’ – நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1956) ‘….ஷைத்தான்கள் சங்கிலியால் விலங்கிடப்படுகின்றனர்’. – நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1957)
ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவைக் கொண்ட மாதம்.
‘…ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புஹாரி, முஸ்லிம், திர்மிதி – 722)
லைலத்துல்கத்ரில் பிரார்த்தனை:
லைலத்துல் கத்ரில் அதிக அளவு பிரார்த்தனை புரிய நபி(ஸல்) அவர்கள் ஒரு துவாவை கற்றுதந்துள்ளார்கள்.
அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபுஅன்னீ
பொருள்: இறைவா நீ மன்னிப்பவன். மன்னிப்பையே விரும்புபவன். எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக. – அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி).
இத்தகைய புனிதமிக்க ரமளானின் கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதிக உபரியான வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வல்ல இறைவனின் அருளை அடைவோமாக!
முன் பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்.
‘நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் ரமளானில் நோன்பு நோற்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’. (நபிமொழி) (அபூஹுரைரா (ரலி), திர்மிதி – 619)
மகத்தான நற்பேறுகள் நிறைந்த புனித ரமளான் மாதத்தில் இறைவழிபாடுகளில் ஈடுபட்டு கடமையான தொழுகைகளைத் தவிர உபரித் தொழுகைகளையும் தவறாது தொழ வேண்டும்.
‘‘எவர் ரமளான் மாதத்தில் ஒரு கடமையான செயலை நிறைவேற்றினாரோ (அதற்கு) மற்ற மாதங்களில் 70 கடமைகளை நிறைவேற்றுவதற்கான நற்கூலியை இறைவன் வழங்குவான்’’ என்று நபிகளார் கூறினார்கள்.
ஹலாலான அமல்களை செய்வது சிறந்தது; அதைவிட ஹராமான செய்கைகளிலிருந்து நம்மை காத்துக் கொள்வதே மிக மிக முக்கியமானது, மேன்மையானது. எனவே புறம் பேசுவதை விட்டும், அவதூறு சொல்வதை விட்டும், பொய்யிலிருந்தும், வீண் பேச்சுக்களிலிருந்தும், நேரத்தை வீணாக்கும் செயல்களிலிருந்தும் காத்துக்கொள்ளுங்கள்.
மறுமையின் நிரந்தர சொர்க்கத்தை அடைந்து கொள்ள, அல்லாஹ்வின் அருள் நிறைந்த ரமளான் மாதத்தை, நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நாம் விளங்கிக் கொள்வோம.
வெளியீடு:-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)
இந்த துண்டு பிரசுரத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்…