நபிகளாரின் எளிமை!

உலகில் எத்தனையோ தலைவர்கள் தோன்றி மறைகிறார்கள். அவர்கள், மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் போதும், பொது மேடைகளில் பேசும் போதும் பல உதாரணங்களை சொல்லி எளிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். ஆனால் அவர்கள் தம்முடைய சொந்த வாழ்க்கையில் எளிமைக்கு முற்றிலும்  நேர்மாற்றமாக வாழ்ந்து வருவதையும் காண்கிறோம். காரணம், இவர்கள் “ஊருக்கு உபதேசம்”  நமக்கு இது ஒரு வேஷம் என்ற குறிக்கோளோடு செயல்படுவார்கள்.

பொதுவாக எளிமை என்றால் வசதிகளும் வாய்ப்புகளும் இருந்த போதிலும் ஒருவர் எளிமையை கடைப் கடைப்பிடிப்பாரானால் அதைத்தான் உண்மையில் எளிமை என்று சொல்லுவோம். எந்த வசதி வாய்ப்பும் இல்லாத ஒருவரின் ஏழ்மை நிலையைப் பார்த்து யாரும் எளிமை என்று கூறமாட்டோம். உதாரணமாக, நம்முடைய வாழ்வில் எத்தனையோ யாசகர்களையும், நடோடிகளையும், வீடின்றி சாலையோரம் தங்கி இருப்பவர்களையும், ஆடையிலும் தோற்றத்திலும் அறவே வசதி இன்றி இருப்பதை காண்கிறோம். இவர்களைப் பார்த்து யாரும் எவ்வளவு எளிமையாக வாழ்கிறார்கள்(!) என்று கூறுவதில்லை. ஏனெனில் எவ்வித வசதி வாய்ப்பும் இல்லாதவர்கள் இப்படி தான் இருந்தாக வேண்டும். ஆனால் சகல வசதி வாய்ப்பும் நிறைந்திருக்கும் ஒருவர் பெருமை, ஆணவம், ஆடம்பரம் இல்லாமல் எளிமையான வாழ்க்கை வாழ்கிறார் என்றால் அதைத்தான் உண்மையான எளிமை என்று ஒப்புக் கொள்கிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசதி வாய்ப்புகள் இன்றி எளிமையாக நடந்து கொள்ளவில்லை. மாறாக எல்லாவித வாய்ப்புகள் இருந்தும் எண்ணிப் பார்த்திராத எளிமையை கடைபிடித்து ஒப்பற்ற சிறந்த தலைவர் என்பதை நிலை நாட்டினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறு வயதிலேயே அனாதையாக இருந்த போதும் சிறிய தந்தையின் உதவியோடு வியாபாரத்தை நன்று கற்று கைத்தேர்ந்தார்கள் . யாரிடமும் கையேந்தாமல் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்று உயர்ந்தார்கள். பிறகு அவ்வூரின் செல்வ சீமாட்டியான கதீஜா (ரலி) என்ற பெண்ணை மனந்ததன் மூலம் மிகப்பெரும் செல்வந்தர்களில் ஒருவராய் உருவானார்கள்.

ஏகத்துவக் கொள்கையை எடுத்து சொன்னதன் விளைவால் அனைத்து சொத்துகளையும் சுகபோகங்களையும் தியாகம் செய்து நாடு துரத்தப்பட்டு அண்டை நாடான மதீனா சென்ற போதும், நாட்டின்  மிகப்பெரும் தலைமை செயலகத்தையே  தன்னுடைய சொந்த செல்வத்தில் வாங்கும் அளவிற்கு பொருளாதாரத்தில் மேம்பட்டு இருந்தார்கள்.

இராணுவ பயிற்சித் தளம், தொழுகை நடத்தும் இடம், நீதி மன்றம், அகதிகள் முகாம் போன்ற பல விசயங்களை செயல்படுத்த மாபெரும் நிலப்பரப்பையே தங்களுடைய சொந்த செல்வத்தில் வாங்கிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தனக்கு அமைத்து கொண்ட மாளிகை அளவைப் பார்த்தால் இப்படியும் ஒரு தலைவர் எளிமைக்கு இலக்கணமாக வாழ இயலுமா!!! என்று நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்று விடும்.

நபிகளாரின் அரண்மனையை பற்றி பார்ப்பதற்கு முன்பு அவர்களுக்கு இருந்த செல்வாக்கையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நாடு துறந்து மதீனா வந்த சில காலங்களிலேயே இன்றைய இந்தியா போன்ற மிகப்பெரும் சாம்ராஜ்ஜியத்தின் தலைவராய் உருவானார்கள்.

இன்றைக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கைப் பெற்ற தலைவர்களின் நிலை என்ன என்பதை நாம் கண்கூடாக கண்டு வருகின்றோம். பிரதமர் போன்ற பெரும் பதவிகள் கூட வேண்டாம், சாதாரண அடிமட்ட வார்டு மெம்பராக இருப்பவர் கூட பதிவிக்கு வருவதற்கு முன்னாள் அவரின் நிலையையும் பதவிக்கு வந்த பிறகு அவரின் நிலையையும் ஆய்வு செய்தால் அதுவே உணர்த்தும் அவர்களின் எளிமையின் லட்சணத்தை.

சோற்றுக்கு வழியில்லாதவர்கள் கூட அற்பப் பதவிகள் கிடைத்தவுடன் அடுக்குமாடி மாளிகைகளில்  ஆடம்பரமாய் வாழ்வதைப் பார்க்கின்றோம்.

ஆனால் எதிரிகளும் மிரளும் சாம்ராஜ்ஜியத்தின் ஒரே தலைவரும், அசைக்க முடியாத ஆன்மீகத்தின்  நிகரற்ற தலைவருமான மாமனிதர் நபிகள் நாயகத்தின் எளிமையை பார்க்கும் எவரும் வியப்பின் விளிம்பிற்குத்தான் செல்ல முடியும்.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன். எனது இரு கால்களையும் அவர்கள் ஸஜ்தாச் செய்யும் இடத்தில் நீட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது தமது விரலால் எனது காலில் குத்துவார்கள். உடனே நான் எனது காலை மடக்கிக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாச் செய்து விட்டு எழுந்து நின்று வணங்கும் போது மீண்டும் காலை நீட்டிக் கொள்வேன். இவ்வாறு நடந்ததற்குக் காரணம் அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாதுஎன நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார். நூல் : புகாரி 382, 513, 1209.

ஒருவர் படுத்துறங்கும் போது அவருக்கு இடைஞ்சல் இல்லாமல் இன்னொருவர் தொழுவது என்றால் 5×5 இடம் போதுமானதாகும். ஆனால், இந்த மாமனிதரின் வீடு அதை விடவும் சிறியதாக இருந்துள்ளது. மனைவி படுத்திருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தொழுவதற்கு இடம் போதவில்லை. மனைவி கால்களை மடக்கிக் கொண்ட பிறகே அவர்களால் தொழ முடிந்துள்ளது என்றால் என்ன ஒரு அற்புதமான எளிமையான வாழ்க்கை என்று பாருங்கள்!

அதுமட்டுமல்ல ‘அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது’ என்று அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) சொல்வதில் இருந்து இன்னும் அவர்களின் எளிமையை ஆழமாக நம்மால் உணர முடிகின்றது.

இங்கே சொல்லப்படும் விளக்குகள் என்பது, கலர் கலராக நாம் பார்க்கும் கவர்ச்சி விளக்குகளையோ, அல்லது அன்றையக் கால அரசர்களின் அரண்மனைகளில் தொங்கிக் கொண்டிருக்கும் சரவிளக்குகளைப் பற்றியதோ இல்லை. அற்பத்திலும் அற்பமான ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள உதவும் மன்சிட்டியில் எண்ணை ஊற்றி எரிக்கும் திரி விளக்கைத் தான் இங்கே குறிப்பிடுகிறார்கள். ஏதோ ஒரு நாள் இரண்டு நாள் மட்டும் தான் விளக்கு இல்லாமல் இருந்ததா என்றால் அதுவுமில்லை. ‘அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது’ என்ற ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்று அவர்கள் வீட்டில் என்றுமே விளக்கு இருந்ததில்லை என்பதைக் கூறுகிறது.

உலக மகா வல்லரசின் அதிபதியாகத் திகழ்ந்த நபிகள் நாயகத்தின் வீட்டில் விளக்கு என்பதே இருந்ததில்லை என்றால் இதற்கு மேல் ஒரு எளிமையை எவரும் காட்டிட இயலுமா?

வாழும் வீட்டில் தான் கற்பனைக் கெட்டாத எளிமை என்றால், உண்ணுவதிலும், உறங்குவதிலும், உடுத்துவதிலும் என அனைத்திலும் எளிமையைக் கடைப்பிடித்த ஒரே நிகரற்ற தலைவராக நபிகள் நாயகம் திகழ்ந்தார்கள் என்பதை பிவரும் செய்திகள் உணர்த்துகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் தயாரித்துத் தருகிறோம்; அது உங்கள் உடலைப் பாதுகாக்கும்எனக் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கும், இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழலில் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும், இவ்வுலகத்துக்கும் உள்ளதுஎனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள். இதை அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார். நூல்கள் : திர்மிதி 2299, இப்னுமாஜா 4099, அஹ்மத் 3525, 3991.

மேலே போர்த்திக் கொள்ளும் ஒரு போர்வை, கீழே அணிந்து கொள்ளும் முரட்டு வேட்டி ஆகிய இரண்டையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) எடுத்துக் காட்டி இவ்விரு ஆடைகளை அணிந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்என்று குறிப்பிட்டார். நூல் : புகாரி 3108, 5818.

எங்கள் வீடுகளில் மூன்று மாதங்கள் அடுப்புப் பற்ற வைக்கப்படாமலே கழிந்திருக்கிறதுஎன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார். என் சிறிய தாயாரே! அப்படியானால் உயிர் வாழ எதை உண்பீர்கள்?’ என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) பேரீச்சம் பழமும், தண்ணீரும் தான் எங்கள் உணவாக இருந்தன. சில நேரங்களில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தோழர்கள் கறந்த பாலை அன்பளிப்பாகத் தருவார்கள். அதை அருந்துவோம்என விடையளித்தார். அறிவிப்பவர் : உர்வா, நூல் : புகாரி 2567, 6459

நபிகள் நாயகம் நினைத்திருந்தால், மன்னர்கள் சொகுசாக வாழ்ந்ததைப் போல் வகைவகையாக உண்டும், விதவிதமாக உடுத்தியும், உயர்தரமான சொகுசு மெத்தைகளில் உறங்கியும் ஆடம்பர வாழ்கையில் திளைத்திருந்திருக்கலாம். ஆனால் அனுபவிப்பதற்கு எல்லாவித வாய்ப்புகள் இருந்தும் நேர்மையாக வாழவேண்டும் என்பதற்காக அனைத்திலும் எளிமையை கடைப்பிடித்து ஒப்பற்ற தலைவராய் திகழ்ந்தார்கள்.

நாகரீகம் வளர்ந்துவிட்ட இன்றைய காலத்தில் கூட மக்களுக்கு தலைவர்களாய் இருப்பார்களேயானால் அவர்களிடம் கண்டிப்பாக எளிமைக்கு நேர்முரணாக இருக்கும் பெருமை, பகட்டு குடிகொண்டிருப்பதைக் காண்கின்றோம். அதுவும் மன்னர் காலத்தில் என்றால் சொல்லவே வேண்டாம். அரசர்களுக்கென்று இருக்கும் தனிப்பெரும் பகட்டுடன் தான் உலா வருவார்கள். யாரும் அவ்வளவு எளிதாக‌ மன்னரை பார்த்துவிட முடியாது. மக்களுக்கும் மன்னருக்கும் மலையளவு வேறுபாடு இருக்கும். தோற்றத்திலும், இருப்பதிலும் மன்னர்களுக்கே உரிய தனி கர்வத்துடன் இருப்பார்கள். கடுகளவு எளிமையைக் கூட அவர்களிடம் நிச்சயம் காண முடியாது.

பேர், புகழ், பகட்டு என்று எளிமைக்கு எதிராக வாழும் மன்னர்களுக்கு மத்தியில் மாமன்னராக வாழ்ந்த நபிகள் நாயகத்தின் எளிமையைப் பாருங்கள்.

ஒரு மனிதர் முதன் முதலாக (மன்னர்) நபிகள் நாயகத்தைச் சந்திக்க வந்தார். பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் நடுநடுங்கிக் கொண்டு தான் மக்கள் நிற்பார்கள். நபிகள் நாயகத்தையும் அது போல் கருதிக்கொண்டு உடல் நடுங்கிட வந்தார். சாதாரணமாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்த குரைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான்என்று அவரிடம் கூறி அவரை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்கள். நூல் : இப்னு மாஜா 3303

மன்னர்கள் என்றால் கைக்கூப்பி கும்பிடு போடவேண்டும், கூனிக் குறுகித் தான் சந்திக்க வேண்டும், காலில் விழுந்து மண்டியிட வேண்டும் என்று இருந்த காலத்தில், உலகம் முழுவதும் நபிகளாரை மாபெரும் அதிகாரம் படைத்தவராகப் பார்த்தாலும் அவர்களோ, தன்னுடைய அதிகாரத்தை வைத்து பெருமையடிக்காமல் தம்மை ஏழைத்தாயின் புதல்வன் என்றே நினைக்கிறார்கள். எளிமைக்கோர் சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்கிறார்கள்.

மக்களின் செல்வாக்கையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி சொத்து சுகம் மாட மாளிகை என்றில்லை என்றாலும், அற்பமான கவுரவத்தைக் கூட விரும்பாத எளிமையைப் பேணினார்கள். நபிகள் நாயகம் மக்கள் செல்வாக்குப் பெற்ற பேரரசராக இருந்ததோடு மட்டுமின்றி, தன்னிகரற்ற ஆன்மீகத் தலைவராகவும் திகழ்ந்தார்கள்.

பொதுவாக ஆன்மீகத் தலைவர் என்றால் தங்களை கடவுளுக்கு நெருக்கமானவர்களாக காட்டிக்கொள்வார்கள். சிலர் தங்களையே கடவுள் என்று வாதிடவும் செய்வார்கள். இன்னும் கடவுளை நெருங்க வழி சொல்கின்றோம், ஆசி வழங்குகின்றோம் என்றெல்லாம் பல்வேறு புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு மக்கள் நெருங்க முடியாத உயரத்தில் இருந்துகொண்டு தங்களை தனியாக காட்டி பெருமைக்கொள்வார்கள். பாமரன் முதல் பண்டிதர் வரை  அனைவரும் இன்றைய ஆன்மீகவாதிகளின் காலில் சரணாகதி அடைவதில் இருந்து ஆன்மீகத் தலைமையின் பலம் நமக்கு கண்ணெதிரே தெரிகின்றது.

மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் தலைவர், நிகரற்ற ஆன்மீகத் தலைவர் என்று என்னதான் பலத்துக்கு மேல் பலம் தன்னிடமிருந்தாலும் எள்ளல்ல, எள்ளின் முனையளவிற்குக் கூட பெருமைக் கொள்ளாமல் தன்னடக்கத்துடனும், மக்களோடு மக்களாய் இருந்தும் எளிமையையே நபிகள் நாயகம் விரும்பினார்கள்.

நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?’ எனக் கேட்டார்கள். மாட்டேன்என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்லியிருப்பேன்என்று கூறினார்கள். அறிவிப்பவர் : கைஸ் பின் ஸஅத் (ரலி), நூல் : அபூதாவூத் 1828

உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம். நபிகள் நாயகத்துக்கு பத்தாண்டுகள் பணிவிடை செய்த அனஸ் (ரலி) இதை அறிவிக்கிறார். நூல்கள் : அஹ்மத் 12068, 11895 திர்மிதீ 2678

நபிகள் நாயகத்தை அந்த மக்கள் உயிரைவிடவும் நேசித்தது போல் எந்த மக்களும் எந்தத் தலைவரையும் நேசித்ததில்லை. இருந்தபோதும் ஒரு மனிதனுக்குச் செய்யப்படும் சாதாரண மரியாதையைக் கூட மாபெரும் ஆன்மீகத் தலைவரான நபிகள் நாயகம் (ஸல்) விரும்பவில்லை.

எளிமை எளிமை என்று பலர் பேசி கேட்டிருப்போம், ஆனால் எங்கும் எளிமை! எதிலும் எளிமை! என்று வாழ்ந்த தலைவரை வரலாற்றில் கண்டதுண்டா? கற்பனைக் கதைகளில் கூட படித்திராத எளிமையான வாழ்க்கையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்துகாட்டி உலகத்திற்கோர் முன்னுதாரணமாக திகழ்கிறார்கள்.

மிக உயர்ந்த இடத்தில் அவர்கள் இருந்தும் அவர்கள் காட்டிய அடக்கம், எளிமை உலக மக்கள் அனைவருக்கும் படிப்பினையாகவும், சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்கின்றது.

தொகுப்பு : ஜாஃப்ரின்

வெளியீடு:-

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)

இந்த துண்டு பிரசுரத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்…

Related Posts

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

மனிதனை அழகிய படைப்பாக்கிய அல்லாஹ், மனிதன் மீது அளவுகடந்த அன்பும் இரக்கமும் கருணையும் கொண்டுள்ளான். இம்மையிலும் மறுமையிலும் மனிதன் வெற்றி பெற்றிட வேண்டும் என்பதற்காக, அதற்கு தேவையான இறை நேர்வழிகாட்டலையும் வகுத்தளித்திருக்கின்றான். குறிப்பாக, ரமளான் மாதத்திற்கென்று கூடுதல்…

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

அகில உலகைப் படைத்த இறைவன், மனிதப் படைப்புகளை பிற உயிரினங்களைவிட மேன்மையாக வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்களாகப் படைத்திருக்கின்றான். நீதி செலுத்துவதற்கும், சமத்துவம் பேணப்படுவதற்கும், எவ்வாறு வாழ்வியல் வழிகாட்டியாக கற்றுத் தந்திருக்கின்றானோ அதன் அடிப்படையில் மனித சமுதாயம் தங்களின்…

பிறர் நலன் நாடுவோம்!!!

பிறர் நலன் நாடுவோம்!!!

இஸ்லாம் என்பது இறை மார்க்கம். மனிதன் அமைதியாக வாழ வேண்டும்; நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அனைத்தும் அறிந்த ஏக இறைவனால் வழிமுறைகள் வகுக்கப்பட்ட மார்க்கம். இத்தகைய இஸ்லாமிய மார்க்கம், மனித சமுதாயம் எப்போதும் சிறப்பாக இயங்குவதற்குத்…

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

நல்லொழுக்கமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவோருக்கு சுய கட்டுப்பாடு அவசியமான ஒன்றாகும். நீரில்லா உலகை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ அதுபோல சுய கட்டுப்பாடின்றி நல்லொழுக்கமுள்ள வாழ்வைக் கற்பனை செய்ய முடியாது. சுய கட்டுப்பாடு என்பது ஒருவர் அவசியமற்ற…

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ரபீஉல் அவ்வல் மாதம் பிறந்து விட்டால் மவ்லிது கச்சேரிகள் களை கட்ட ஆரம்பித்து விடுகின்றன. மஃரிப் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசல்களிலும் மற்றும் வீடுகளிலும் முதல் பத்து நாட்கள் சுப்ஹான மவ்லிதுகளை பக்திப் பரவசத்தோடு அதை நன்மை எனக்…

நபி மீது பொய்! நரகமே பரிசு!

நபி மீது பொய்! நரகமே பரிசு!

இது “ரபீஉல் அவ்வல்” மாதம்! இரவு நேரங்களில் வீடுகள் தோறும் மவ்லிதுக் கச்சேரிகள்! சந்தன வாடை; சாம்பிராணி வாசம்; நெய்ச் சோறு, கறிச் சாப்பாடு! பள்ளிவாசல்களிலும், பஜார் திடல்களிலும் பன்னிரெண்டு நாட்கள் தொடர் பயான்கள்! மீலாது மேடைகள்;…