பிறர் நலன் நாடுவோம்!!!
இஸ்லாம் என்பது இறை மார்க்கம். மனிதன் அமைதியாக வாழ வேண்டும்; நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அனைத்தும் அறிந்த ஏக இறைவனால் வழிமுறைகள் வகுக்கப்பட்ட மார்க்கம். இத்தகைய இஸ்லாமிய மார்க்கம், மனித சமுதாயம் எப்போதும் சிறப்பாக இயங்குவதற்குத் தேவையான அனைத்து விதமான அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்குகின்றது, பிறர் நலம் பேணுதல் என்பது இஸ்லாமின் அடிப்படைகளில் தலையாயதாகும். ஆரம்பகால முஸ்லிம்கள் இறைத்தூதருடன் செய்து கொண்ட வாக்குப் பிரமாணங்களில் ஒன்றாக இது இருந்தது.
ஒரு முஸ்லிம் இன்னொரு மனிதனின் தவறைக் காணும்போது அந்தத் தவறிலிருந்து அவரைத் திருத்துவதும் அவரிடம் நன்மையை ஏவுவதும் கடமையாகும். பொதுமக்கள் அனைவருக்கும் நன்மை நாடுபவராக இருக்க வேண்டும்.
உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார் ஸஹீஹ் புகாரி : 13
பிறர்நலம் நாடுவதே இஸ்லாம்!
உலகில் பல்வேறு கொள்கைகள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள் இருக்கின்றன. அவற்றை உருவாக்கியவர்கள், பின்பற்றுபவர்கள் என்று பலரும் அவை ஒவ்வொன்றுக்கும் பல்வேறு வகையில் விளக்கங்களை, வரையறைகளைக் குறிப்பிடுகிறார்கள், இஸ்லாம் என்பதற்கும் அதன் அடிப்படையை அனைவரும் விளங்கிக் கொள்ளும் வகையில் அல்லாஹ்வும், அவனது தூதரும் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அவற்றுள் முக்கியமான ஒன்று, பிறர் நலம் நாடுதல் என்பதாகும். இதன் மூலம் இஸ்லாம் எந்தளவிற்கு அடுத்தவர்களின் நலனில் அக்கறை கொள்கிறது; ஆர்வம் காட்டுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
“மார்க்கம் (தீன்) என்பதே நலம் நாடுவதுதான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: தமீமுத்தாரீ (ரலி) நூல்: முஸ்லிம் (95)
மனிதர்கள் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்ட மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 7376
பொதுநலனுக்குப் பங்கம் விளைவிக்கும் கருத்துக்களை இஸ்லாம் கூறுவதாக எவராலும் எந்தவொரு சட்டத்தையும் சுட்டிக் காட்ட இயலாது. இஸ்லாம் கூறும் பொதுநலம் சம்பந்தமான கருத்துக்களைக் குறித்து சுட்டிக் காட்டாமல் இஸ்லாத்தை ஒருவருக்கு முழுமையாக எடுத்துச் சொல்ல இயலாது எனும் அளவிற்கு இஸ்லாம் அது பற்றி அதிகம் அதிகமாகப் பேசுகிறது என்பதே உண்மை.
இறை நம்பிக்கையின் அடையாளம்!
இறை நம்பிக்கையாளராக இருக்கும் ஒருவர், இஸ்லாம் கூறும் அனைத்து செய்திகளையும் நம்பியவராக இருந்தால் மட்டும் போதாது. அந்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில் செயல்பாடுகளும் அவரிடம் அவசியம் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர், உண்மையாக நம்பிக்கை கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். அந்த வகையில் ஈமான் கொண்டவர்களிடம் இருக்க வேண்டிய பண்புகளுள் முக்கிய ஒன்றாக, பிறருக்கு நலம் நாடும் பண்பு இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. பிறர் நலத்தைக் கெடுக்கும் காரியம் எதுவாயினும் அதனைச் செய்வது இறைநம்பிக்கைக்கு எதிரானது என்பதையும் பின்வரும் ஆதாரங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
முஃமின்கள் ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டிடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்படிக் கூறும்போது) நபி (ஸல்) அவர்கள் தமது கைவிரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் காண்பித்தார்கள். – அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி), நூல்: புகாரி (2446)
சமுதாயத்தில் ஒரு சிலர் தீமையான காரியங்களைச் செய்கிறார்கள். அந்த மோசமான செயல்கள் காரணமாக மற்றவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் ஒருவர், எந்தளவிற்கு முனைப்போடு அந்தத் தீய காரியங்களைக் களைவதற்கு களத்தில் இறங்குகிறோரோ அதைப் பொறுத்து அவரது நம்பிக்கையின் வீரியம் வெளிப்படுகிறது. இவ்வாறு, மக்களுக்குத் துன்பம் தரும் காரியங்களைத் தடுத்து, அதன் தாக்கத்தில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவதும் இறை நம்பிக்கையின் அடையாளம் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது.
உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: முஸ்லிம் (78)
இறையச்சத்தின் வெளிப்பாடு!
நமக்குச் கொடுத்திருக்கும் அனைத்து அருட்கொடைகளைப் பற்றியும் இறைவன் மறுமையில் நம்மை விசாரிப்பான். அப்போது அதற்குரிய சரியான பதில் நம்மிடம் இருந்தால் மட்டுமே நாம் முழுமையாக வெற்றி பெற்றவர்களாக இருக்க முடியும். ஆகவே, அல்லாஹ்விற்குப் பயந்து அவன் அருளியிருக்கும் அருட்கொடைகளைக் கொண்டு அடுத்தவர்களுக்கு நலம் நாடுபவர்களாக, நன்மை செய்பவர்களாக நாம் இருக்க வேண்டும். இவ்வாறு பிறருக்கு நன்மை செய்யும் வகையில் நற்காரியங்களைச் செய்வது; தீய காரியங்களை விட்டும் விலகியிருப்பது என்பது இறைச்சத்தின் வெளிப்பாடு என்பதைப் பின்வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதிநாள், வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போர், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள். (திருக்குர் ஆன் 2:177)
உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் மன்னிப்பிற்கும், வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கும் விரையுங்கள்! (இறைவனை) அஞ்சுவோருக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல்வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான். – (திருக்குர்ஆன் 3:133,134)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொறாமை கொள்ளாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ, அவருக்குத் துரோகமிழைக்கவோ, அவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். இறையச்சம் (தக்வா) இங்கே இருக்கிறது. (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற முஸ்லிம்களின் உயிர், பொருள், மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும். – அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (5010)
பிறர் நலம் நாடிய நபிகளார்!
பிறருக்கு நலம் நாடுவதுதான் இஸ்லாம் என்று போதித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அதற்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள். அண்ணலாரின் சிந்தனைகள், செயல்பாடுகள் அனைத்தும் பிறருக்கு நன்மை நாடும் வகையில் அமைந்து இருந்தன. நீதி, நேர்மை, தர்மம், பெருந்தன்மை, மன்னித்தல், உதவி செய்தல், பிறருக்கு துஆ செய்தல் போன்ற மக்களுக்கு நலம் தரும் எல்லா விதமான நற்பண்புகளின் உறைவிடமாகத் திகழ்ந்தார்கள். இந்த மாபெரும் மகத்தான உண்மையை நபிகளாரின் வாழ்க்கையைப் படிப்பவர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்வார்கள். இதற்குரிய சில சான்றுகளை மட்டும் இப்போது பார்ப்போம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானில் தம்மைச் சந்திக்கின்ற வேளையில் நபியவர்கள் இன்னும் அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானின் ஒவ்வோர் இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது (அதுவரை அருளப்பெற்ற) குர்ஆனை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நினைவுபடுத்துவார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் மழைக் காற்றைவிட அதிகமாக நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி (6)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை முன்வைத்து எது கேட்கப்பட்டாலும் அவர்கள் அதைக் கொடுக்காமல் இருந்ததில்லை. இந்நிலையில் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து (கேட்டபோது), இரு மலைகளுக்கு இடையே இருக்கும் (அளவுக்கு அதிகமான) ஆடுகளை அவருக்கு வழங்கினார்கள். அந்த மனிதர் தம் சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று, “என் மக்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், முஹம்மத் வறுமையை அஞ்சாமல் தாராளமாக நன்கொடைகள் வழங்குகிறார்” என்று சொன்னார்.- அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (4629)
அனைவரும், அனைவருக்கும் நலம் நாடுதல்!
சமுதாயத்தில் இருக்கும் ஒவ்வொரு நபரும், பிறருக்கு நலம் நாடுபவராக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. நலம் நாடும் செயல்களை இவர்கள் தான் செய்ய வேண்டும்; அவர்கள் தான் நன்மையான காரியங்களைச் செய்ய வேண்டும் என்று எவரும் ஒதுங்கிக் கொள்ளாமல், அனைவரும் பிறருக்கு நலம் நாடி செயல்பட வேண்டும். இந்தப் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இதைக் கவனத்தில் கொண்டு எல்லோரும் தமது பொறுப்பின் கீழ் இருப்பவர்களுக்குக் கண்டிப்பாக நலம் நாட வேண்டும்; நன்மை செய்ய வேண்டும். இது குறித்தும் இறைவன் நம்மை விசாரிப்பான் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் (அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. அவர் (தம் குடிமக்கள் குறித்து) விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். அவன் (தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி) விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவரின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவள் (அந்தப் பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவாள். அடிமை தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் (தனக்குரிய பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவான். அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் (உங்கள்து பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி (5188)
பிறர் நலம் எனும் பட்டியலில் பெற்றோர், உடன் பிறந்தவர்கள், வாழ்க்கைத் துணை, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டினர், ஊர்மக்கள் என்று அனைத்து மக்களும் அடங்குவர். எனவே அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதோடு அதற்குரிய காரியங்களைச் செய்ய வேண்டும்.
வெளியீடு:-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)
இந்த துண்டு பிரசுரத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்…