ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ரபீஉல் அவ்வல் மாதம் பிறந்து விட்டால் மவ்லிது கச்சேரிகள் களை கட்ட ஆரம்பித்து விடுகின்றன. மஃரிப் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசல்களிலும் மற்றும் வீடுகளிலும் முதல் பத்து நாட்கள் சுப்ஹான மவ்லிதுகளை பக்திப் பரவசத்தோடு அதை நன்மை எனக் கருதி மக்களில் சிலர் ஓதி வருகிறார்கள்.
மவ்லிது என்றால் என்ன?
மவ்லிது என்றால் பிறந்த இடம் அல்லது பிறந்த நேரம் எனப் பொருள். மவ்லிது என்ற பெயரில் நபிகள் நாயகத்திற்கு புகழ்மாலை சூட்டுகிறோம் எனக்கூறி நபிகளாரை இறைவன் அளவிற்கு உயர்த்தும் கொடிய வரிகளை ராகமிட்டு ஓதி வருகின்றனர்.
பூமான் நபியைப் புகழக்கூடாதா?
மாநபியைப் புகழவே மவ்லிது ஓதுகிறோம். அது கூடாதா ? என்று மவ்லிதுகளை ஓதுவோர் நம்மிடம் வியப்புடன் கேட்கின்றனர்.
மாநபியைப் புகழாத எந்த முஸ்லிமும் உலகில் இருக்க முடியாது.
இறைவனே திருமறைக் குர்ஆனில் நபிகளாரை புகழ்ந்துரைக்கிறான்.
உமக்காக உமது புகழை நாம் உயர்த்தினோம். அல்குர்ஆன்: 94;4
நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர். அல்குர்ஆன் 68: 4
நபிகளாரை வரம்பு கடந்து புகழ்வதுதான் கூடாது
கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈஸாவை (கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியான் தான் . அல்லாஹ்வின் அடியான் என்றும் அல்லாஹ்வின் தூதர் என்றும் கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி) புஹாரி: 3445
கவிதைகள் வணக்கமாகுமா?
“மவ்லிதுகளை இறைவனோ இறைத்தூதரோ கற்றுத் தரவில்லை. மாறாக மனிதர்கள் இயற்றிய அரபிக் கவிதைகள் தான் மவ்லிதுகள்.
கவிதையைப் பற்றி திருமறைக் குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்.
கவிஞர்களை வழிகேடர்களே பின்பற்றுவார்கள். (அல்குர்ஆன் : 26: 224)
இவருக்கு (முஹம்மதுக்கு) கவிதையை நாம் கற்றுத் தரவில்லை. அது அவருக்குத் தேவையுமில்லை. அல்குர்ஆன் : 36: 69
மார்க்க முரண் மற்றும் இணைகற்பித்தல் இல்லாத கவிதைகளை இசையின்றி படித்துக் கொள்ளலாம் என்ற சிறிய அனுமதியைத் தாண்டி கவிதைகளுக்கு இஸ்லாத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை.
எனவே அடிப்படையிலேயே மவ்லிதுகள் தவறானவை என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.
அபத்தங்கள் நிறைந்த ஆபத்தான வரிகள்.
أنت غفار الخطايا
என் பாவங்களை மன்னிப்பவர் தாங்களன்றோ
كفروا عني ذنوبي
என் பாவங்களை நன்மைகளாக மாற்றுங்கள்.
பாவமன்னிப்பை நபிகளாரிடம் வேண்டும் கொடிய வரிகள் இவை.
இறைவன் கூறுகிறான்.
அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்.? அல்குர்ஆன் : 3 : 135
السلام عليك يا مبرى السقام
நோயைப் போக்குவரே தங்கள் மீது ஸலாம் உணடாகட்டுமாக.
நோயை நீக்குபவர் நபிகள் நாயகம் எனும் நச்சுக் கருத்தை மௌலித் விதைக்கிறது.
நான் நோயுற்றால் அவனே எனக்கு நிவாரணம் தருகிறான். அல்குர்ஆன்: 26 : 80
இப்ராஹீம் நபி கூறிய வார்த்தைகள் இவை . இறைவனின் உற்ற தோழர் இப்ராஹீம் நபியின் நோயைக்கூட இறைவன் தான் குணமாக்க முடியும் எனும் போது நமது பாவங்களை நபிகளார் எப்படி குணப்படுத்துவார்கள்.
இது போல இறைவனுக்கு நிகராக நபிகளாரை சித்தரிக்கும் இணைகற்பித்தல் நிறைந்த வரிகள் சுப்ஹான மவ்லிது நெடுகிலும் மிகுந்து காணப்படுகின்றது.
புதுமைகள் அனைத்தும் வழிகேடே.
நபிகள் நாயகம் வாழும் காலத்திலேயே மார்க்கம் முழுமை பெற்றுவிட்டது. அவர்களுக்கு பின் வந்த எந்த ஒன்றும் மார்க்கமாக முடியாது.
மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகக் கெட்டதாகும். அவை ஒவ்வொன்றும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகில் சேர்க்கும் என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ்
நூல்: நஸாயி 1560
எனவே இது போன்ற மார்க்கத்தில் இல்லாத மவ்லிதுகளை நாம் புறக்கணித்து இறைவனும், இறைத்தூதரும் காட்டிய வழியில் நம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட தெளிவுள்ள சமுதாயமாக இறைவன் நம்மை ஆக்கியருள்வானாக.
வெளியீடு:-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)
இந்த துண்டு பிரசுரத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்…