இஸ்லாத்தின் பார்வையில் மீலாது விழா
இஸ்லாம் என்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித் தந்த வழிமுறைகள்தான். இது நபி(ஸல்) அவர்கள் காலத்தோடு முழுமைப் படுத்தப்பட்டு விட்டது
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். (அல் குர்ஆன் 5:3)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நான் உங்களை (மார்க்கம்) வெண்மையான(தாக இருக்கும்) நிலையில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள். அறிவிப்பவர்: இர்பாள் பின் ஸாரியா(ரலி), நூல்: அஹ்மத் (16519)
இப்படிப்பட்ட தெளிவான இஸ்லாமிய மார்க்கத்தில் இன்றைக்கு நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத எத்தனையோ புதுப்புது வழிமுறைகள், வழிபாடுகள் புகுந்துவிட்டன. ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு பித்அத்(நூதனமான அனுஷ்டானங்க)களை உருவாக்கி வைத்துள்ளனர்.
ரபியுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் போதும். ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் பிறை 1 முதல் 12 வரை மௌலூதுகள் ஓதி மீலாது விழா கொண்டாடி வருகின்றனர். நபி(ஸல்) அவர்களின் புகழைப் பாடவேண்டும். அவர்களின் மீது நாம் கொண்டுள்ள நேசத்தை வெளிப்படுத்தவேண்டும். என்ற அடிப்படையில்தான் இந்த விழாக்களை கொண்டாடி வருகின்றனர்.
இந்த மீலாது விழாக்களில் ஊர்வலம் என்ற பெயரில் போதையால் மதி மயங்கியவர்களாக கேடு கெட்ட வாசகங்களைப் பயன்படுத்தி கோசமிடுவது, தெருவாரியாக வசூல் செய்து மௌலூது, பாதிஹா ஓதி நேர்ச்சை விநியோகிப்பது, அன்றை தினம் இசைக்கருவிகளுடன் பாட்டுக் கச்சேரி நடத்துவது இன்னும் பற்பல அனாச்சாரங்களை ஊருக்கு ஊர் வித்தியாசமாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
ஒரு முஸ்லிம் ஒரு காரியத்தைச் செய்கிறானென்றால், அவன் செய்யும் அக்காரியத்திற்கு உரை கல்லாக அவன் குர்ஆனையும் நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் ஒரு முன்மாதிரியையும் வைத்து செயல்படவேண்டும். அப்போதுதான் அவன் செய்யும் செயலுக்கு நன்மை பரிசாகக் கிடைக்கும். இல்லையேல், அது தீமையாகவே அமைந்துவிடும்.
நபி(ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் தன் பிறந்த நாளையோ தன் பிள்ளைகளின் பிறந்த நாளையோ தாமும் கொண்டாடியதில்லை. பிறரைக் கொண்டாடும்படி கூறவும் இல்லை. நபி (ஸல்) அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளின் பிறந்த தினத்தின் குறிப்புக்கூட ஹதீஸ்களில் இல்லை. அவர்களது மகன் இப்றாஹீடைய மரணக் குறிப்பு இருக்கிறதேயொழிய பிறப்பைப் பற்றி உள்ள செய்திகள் இல்லை.
இப்ராஹீம் (ரலி) அவர்கள் மரணமடைந்த நேரத்தில் சூரியக் கிரகணம் ஏற்படுகிறது. அதைக் கூட மக்கள் இவர் இறந்ததினால் தான் சூரியக் கிரகணம் ஏற்பட்டுவிட்டது என்று கூறினார்கள். தனது அருமை மகன் இறந்த துக்கத்தில் இருந்த அந்த நேரத்தில் கூட நபி (ஸல்) அவர்கள் அதைக் கண்டிக்கின்றார்கள்
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களது மகன்) இப்றாஹீம்(ரலி) மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்றாஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டணர். அப்போது நபி(ஸல்) அவர்கள் சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவரது பிறப்பிற்காகவும் இறப்பிற்காகவும் கிரகணம் பிடிப்பதில்லை. எனவே, நீங்கள் (கிரகணத்தை) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: முகீரா பின் ஷுஉபா (ரலி), நூல்: புகாரீ(1043)
நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாமல் நல்லதுதானே, சிறப்புத்தானே என்று நாமே நம் இஷ்டத்திற்கு உருவாக்கும் எல்லாச் செயலும் பித்அத்தான நூதன வழிகேடு என்றல்லவா மார்க்கம் கூறுகிறது. அதுவே நரகத்திற்கு கொண்டு சென்று சேர்க்கும் செயலென்று நபி(ஸல்) அவர்களுடைய சொல்லும் கூறுகிறது.
நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: நஸயீ (1560)
எல்லோரும் செய்கிறார்கள், பிற சமுதாயத்தவர்களும் செய்கிறார்கள். நாமும் செய்தால் என்ன என்று நாம் மீலாது விழா போன்ற காரியங்களைச் செய்தால் அது மாற்றுமதத்தவர்களின் வழிமுறையைப் பின்பற்றிவர்களாக ஆகிவிடுவோமல்லவா? இதற்கு நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் நடந்த சம்பவம் நமக்கு சரியான பாடத்தைப் புகட்டி, மாற்றுக் கலாச்சாரத்தை நம்மவர்கள் காப்பியடிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறது.
நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க நபி(ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணைவைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளை தொங்கவிட்டு அங்கு தங்கி(இஃதிகாஃப்) இருப்பார்கள். தாத்து, அன்வாத் என்று அதற்கு சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்றபோது நபி(ஸல்) அவர்களிடத்தில் அல்லாஹ்வின்தூதரே.. அவர்களுக்கு தாத்து, அன்வாத்து என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள் என்று கூறினோம்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் சுப்ஹானல்லாஹ்… அல்லாஹு அக்பர்.. இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும் என்று சொல்லி, என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக நீங்கள் நபி மூஸா(அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா(அலை) அவர்களிடத்தில், மூஸாவே அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள் என்று கேட்க, அதற்கு மூஸா(அலை) அவர்கள், நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள் என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையை படிப்படியாக பின்பற்றுவீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ வாக்கிதுல்லைசி (ரலீ), நூல்: திர்மிதி
இன்னும் சொன்னப்போனால், ரபியுல் அவ்வல் பிறை பன்னிரண்டில் (அதில் தான் நபி(ஸல்) அவர்கள் பிறந்தார்கள் என்று எண்ணிக்கொண்டு) விழா எடுத்துக் கொண்டாட்டம் பழக்கமும் மற்றும் சில ஊர்களில் அந்த மாதம் பிறை பன்னிரண்டில் திங்கள்கிழமை வராவிட்டால், அதற்குப் பின்வரும் திங்கட்கிழமையன்று தான் ஊர் முழுவதும் ஊர் கந்தூரி கொண்டாடி சாப்பாடு ஆக்கி மௌலூது ஓதி உண்டு மகிழ்வார்கள். இவையெல்லாம், நபி(ஸல்) அவர்களை நேசிக்கிறோம் என்று உண்டு மகிழ்வதைக் காட்டுகின்றதா அல்லது அவர்கள் மீதுள்ள பொய்யான நேசத்தைக் காட்டுகின்றதா.. அல்லாஹ்வுக்கே வெளிச்சம்….
அல்லஹாவின் தூதரை நேசிப்பது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இல்லை தூதர் வழி நடப்பதே
நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 3:31)
அனைவரையும் விட நான் மக்கள் அனைவரையும் விட மிகவும் பிரியத்திற்குரியவராக ஆகும் வரை அவர் உண்மையான ஈமான் கொண்டவராக ஆகமாட்டார். அறிவிப்பவர்: அனஸ் (ரலிநூல்: புகாரி 15
எனவே, நபி(ஸல்) அவர்களை ஒரு சில நாட்கள் மட்டும் எண்ணிப் பார்க்காமல் அவர்களுடைய வாழ்க்கையையும் அவர்களுடைய நற்பண்புகளையும் நம்முடைய வாழ்க்கை நெறியாகப் பின்பற்றி உலகம் முழுமைக்கும் பரப்புவோமாக,, இம்மையிலும் மறுமையிலும் இறைவன் நம்மை நேசித்து அவன் மன்னிப்பைப் பெறுவோமாக
இந்த fileலை download செய்ய இங்கே click செய்யவும்.