தவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்!
ஏக இறைவனின் திருப் பெயரால்…
முன்னுரை!
மனிதர்களிடம் நல்ல காரியங்கள் இருக்க வேண்டும் என்று கட்டளையிடும் இஸ்லாம் பல விஷயங்கள் இருக்கக் கூடாது என்று கட்டளையிடுகிறது. அதில் முக்கியமாக மூன்று விஷயங்கள் இருக்கக் கூடாது. அவை இருந்தால் அவர் சொர்க்கம் புக முடியாமல் போய் விடும். அதே நேரத்தில் இந்த மூன்றும் இல்லாவிட்டால் அவர் கண்டிப்பாக சொர்க்கம் போவார் . அவை:- 1) தற்பெருமை (ஆணவம்) 2) மோசடி 3) கடன் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.
”ஆணவம், மோசடி, கடன் ஆகிய மூன்றும் நீங்கிய நிலையில் ஒருவரின் உயிர் பிரிந்தால் அவர் சொர்க்கத்தில் இருப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி), நூல்கள்: அஹ்மத் (21356), திர்மிதீ (1497)
தற்பெருமை! (ஆணவம்)
பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே. (அல்குர்ஆன் 28:83)
ஆணவம் கடுகளவும் இருக்கக் கூடாது! :- ”தமது உள்ளத்தில் கடுகளவு இறை நம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு ஆணவம் உள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத் (ரலி), நூல்: முஸ்லிம் (148)
பெருமை இறைவனுக்கு மட்டுமே உரியது! :- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியம் அ(ந்த இறை)வனுடைய கீழாடையாகும். பெருமை அவனுடைய மேலாடையாகும். (அல்லாஹ் கூறுகிறான்:) ஆகவே (அவற்றில்) யார் என்னோடு போட்டியிடுகிறானோ அவனை நான் வேதனை செய்வேன். அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: முஸ்லிம் (5114)
எனவே இறைவனுக்கு மட்டும் சொந்தமான இந்தப் பெருமையை விட்டு விட்டு, பணிவு என்ற நற்பண்பைக் கடைப்பிடிக்க வேண்டும்.
மோசடி!
மோசடித் தன்மை பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும் போது இது இரட்டை வேடம் போடும் நயவஞ்சகனின் தன்மையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
”பேசினால் பொய் பேசுவான், வாக்குக் கொடுத்தால் மாறு செய்வான், நம்பினால் மோசடி செய்வான் ஆகிய மூன்றும் நயவஞ்கனின் அடையாளமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி (33), முஸ்லிம் (107)
”நயவஞ்கனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் நோன்பு நோற்றாலும், தொழுதாலும், தன்னை ஒரு முஸ்லிம் என்று கூறிக் கொண்டாலும் சரியே!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (109)
மோசமான கூட்டம் மோசடி செய்யும்! :- ”உங்களுக்குப் பிறகு ஒரு சமுதாயத்தார் (வர) இருக்கின்றார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களிடம் எதையும் நம்பி ஒப்படைக்கப்படாது. அவர்கள் சாட்சியாக இருக்கத் தாமாகவே முன் வருவார்கள். ஆனால் சாட்சியம் அளிக்கும் படி அவர்களை யாரும் கேட்க மாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள். ஆனால் அதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடையே பருமானயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி), நூல்: புகாரி (2651)
ஈமான் இருக்காது! : – மோசடி செய்பவர், மோசடி செய்யும் போது ஈமான் இல்லாமல் போய் விடும் என்று கடுமையான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
”மோசடி செய்பவன், மோசடி செய்யும் போது அவன் இறை நம்பிக்கையாளனாக இருந்தபடி மோசடி செய்வதில்லை. (இதிருந்து விலகிக் கொள்ளுமாறு) உங்களை நான் எச்சரிக்கிறேன்; உங்களை நான் எச்சரிக்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (103)
சொர்க்கத்தைத் தடை செய்யும் இந்த மோசமான காரியத்தை விட்டும் விலகி, சொர்க்கத்தைக் கடமையாக்கிக் கொள்ள வேண்டும்.
கடன்…
கடன் வாங்கி அதைத் திருப்பிக் கொடுக்காமல் அல்லது அதைத் திருப்பிக் கொடுப்பதற்குரிய செல்வத்தைச் சேர்க்காமல் இறந்து விடுவது சொர்க்கத்திற்குச் செல்ல முடியாமல் போவதற்குக் காரணமாக அமைகின்றது. இந்தக் கடன் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
கடனாளிக்கு நபிகளார் தொழுவிக்கவில்லை :- ஜனாஸாத் தொழுகை நடத்துவதற்காக ஒருவரது உடல் கொண்டு வரப்பட்டது. இவர் கடனாளியா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டபோது, நபித்தோழர்கள் இல்லை என்றனர். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது, இவர் கடனாளியா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் என்றனர். அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூகத்தாதா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! இவரது கடனுக்கு நான் பொறுப்பு என்று கூறியதும், அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். நூல் : புகாரி 2295
மறுமையில் நன்மைகள் பிடுங்கப்படும் :- “திவாலாகிப் போனவர் யார் என்று நீங்கள் அறிந் திருக்கின்றீர்களா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்ட போது, “யாரிடத்தில் பணமும் பண்ட பாத்திரங்களும் இல்லாமல் இருக்கின்றதோ அவர் தான்” என்று நபித்தோழர்கள் பதிலளித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “எனது சமுதாயத்திலிருந்து திவாலாகிப் போனவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகியவற்றைக் கொண்டு வருவார். மேலும் அவர் இன்னொருவரைத் திட்டியிருப்பார். அவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். அவரது பொருளைச் சாப்பிட்டிருப்பார். அவரது ரத்தத்தை ஓட்டியிருப்பார். அவரை அடித்திருப்பார். எனவே (பாதிக்கப்பட்ட) அவருக்கு இவரது நன்மைகளிலிருந்து அல்லாஹ் வழங்கி விடுவான். இன்னாருக்கு அவரது நன்மைகளை வழங்கி விடுவான். அவர் மீது உள்ள வழக்கு தீர்க்கப்படும் முன் அவரது நன்மைகள் தீர்ந்து போய் விட்டால் (பாதிக்கப்பட்ட) அவர்களின் பாவங்கள் எடுக்கப்பட்டு இவர் மீது எறியப்பட்டுப் பின்னர் நரகத்தில் தூக்கி எறியப்படுவார்” என்று சொன்னார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 4678
தற்பெருமை, மோசடி, கடன் என்ற மூன்று காரியங்களிருந்து ஒருவர் விலகி இருப்பதால் நற்செயல்கள் நம்மிடம் வந்து சேர்வதுடன், சொர்க்கத்துக்கு உரியவர்களாகவும் நாம் ஆகலாம். எனவே நம் செயல்பாடுகளில் இந்த மூன்று காரியங்களையும் முற்றிலுமாக விலக்கி வைப்போம்.
வெளியீடு:-