Home / அழைப்பு பணி / நோட்டீஸ்கள் / நன்மைகள் ஊற்றெடுக்கும் திருமறை!

நன்மைகள் ஊற்றெடுக்கும் திருமறை!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ

அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன், தான் விரும்புவது போல் வாழ்ந்துக் கொள்ள விட்டுவிடாமல் வாழ்க்கை நெறியை வேதங்களின் மூலமும் தூதர்களின் மூலமும் வகுத்துக் கொடுத்தான். இந்த அடிப்படையில் மனித சமுதாயத்திற்கு இறுதி வேதமாக அல்குர்ஆனையும் இறுதித் தூதராக முஹம்மது(ஸல்) அவர்களையும் அனுப்பியுள்ளான்.

இந்த திருமறை மனிதர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து வகையான நன்மை பயக்கக்கூடிய விஷயங்களை உள்ளடக்கி வைத்திருக்கும் ஒரு பொக்கிஷமாக பார்க்க முடிகிறது

இதை மனிதன் சரியான முறையில் விளங்கி தம்முடைய வாழ்வில் செயல் வடிவம் கொடுத்தால் இந்த உலக வாழ்வில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் மறுமைக்கு பயனளிக்க கூடியதாகவும் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அல்லாஹ் இதை பற்றி சொல்லும் போது குர்ஆன் விசுவாசிகளுக்கு அருமருந்து என கூறுகிறான்.

இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம் ஆனால் அக்கிரமக் காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை (அல்குர்ஆன் 17:82)

இத்தகைய அல்குர்ஆனுடன் இரண்டு விதமான தொடர்புகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும். இதில் மனித சமுதாயத்திற்கு மிக பெரும் நன்மை பொதிந்து இருக்கிறது

  1. அல்குர்ஆனை அதிகமாக ஓதி அளவற்ற நன்மையைப் பெற்றுக் கொள்வது.
  2. திருக்குர்ஆனை பொருளறிந்து படிப்பது, அதன் கட்டளைகளைப் புரிந்து அதன் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது.

அல்குர்ஆனை ஓதுதல்

பொருளறியாமல் படித்தாலும் ஆன்மீக ரீதியாக நன்மையை பெற்றுத்தரும் ஒரே நூல் அல்குர்ஆன் மட்டும்தான். திருக்குர்ஆனை ஓதுவதில் எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கின்றன. அல்குர்ஆனை முறையாக, புரிந்து ஓதுபவர் பல நன்மைகளை பெறக்கூடியவராக இருக்கிறார். எனவே பொருட்செலவோ, கடின உடலுழைப்போ இன்றி குறைந்த நேரத்தில் நிறைந்த நன்மையைப் பெற்றுத் தரும் திருமறையை அதிகமாக ஓதிடவேண்டும். நபி(ஸல்) இதை பற்றி  சொல்லும் போது,

குர்ஆனின் சிறு பகுதியேனும் யார் உள்ளத்தில் மனனம் இல்லையோ அவர் உள்ளம் பாழடைந்த வீட்டைப் போன்றது, (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்(ரலி), ஆதாரம் : திர்மிதி).

எவர் குர்ஆனிலிருந்து ஒரு எழுத்தை ஓதினால் நன்மை இருக்கிறது. ஒரு நன்மை அதுபோன்று பத்து மடங்காக்கப்படும். “அலீஃப், லாம், மீம்” ஒரு எழுத்து என்று சொல்லமாட்டேன். மாறாக அலீஃப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்துமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், (அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூத்(ரலி) – ஆதாரம் : திர்மிதி, தாரமி.)

குர்ஆனை ஓதுவதில் தேர்ச்சி பெற்றவர் கண்ணிமிக்க வானவர்களுடன் இருப்பார். குர்ஆனை ஒதுவது சிரமமாக இருப்பினும் அதைத் திருப்பித்திருப்பி சிரமத்துடன் ஓதுவாரானால் அவருக்கு இரண்டு கூலி இருக்கிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், (அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) – ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

குறிப்பாக ரமலான் மாதத்தில் அதிமாக ஓதவேண்டும். ரமலான் மாதத்தில் ஒவ்வொரு முஸ்லிம் ஒரு தடவையாவது குர்ஆனை முழுமையாக ஓதி முடிப்பது நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் ஒன்றாகும்.

பி(ஸல்) அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ரமலானில் ஒரு தடவை குர்ஆனை ஓதிக் காண்பிக்கப்பட்டது. அவர்கள் மரணிக்கும் வருடம் இரண்டு தடவை ஓதிக் காண்பிக்கப்பட்டது, (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) – ஆதாரம் : புகாரி).

குர்ஆனை ஓதுவதை விட்டும் பொடுபோக்காக இருக்கும் சகோதர, சகோதரிகள், நாளை மறுமை நாளில் ஓரு நன்மைக்காக அங்கும் இங்கும் ஓடித் திரிந்து அல்லோலப்பட்டும் அது கிடைக்காமல் நரகில் விழ நேரிடும் அந்நாளை நாம் மறந்து விடக்கூடாது.

அல்குர்ஆனை பொருளறிந்து படித்து அதன் படி செயல்படுவது.

திருமறையை சூரத்துல் ஃபாத்திஹாவிலிருந்து சூரத்துன்னாஸ் வரை முழுமையாகப் படித்து அதன் செய்திகளை அறிந்து கொள்ளவேண்டும். அதன் கட்டளைகளுக்கு கட்டுப்படுவது, அது தடுக்கும் செயல்களை விட்டும் விலகிக் கொள்வது. அதில் கூறப்பட்ட சம்பவங்களின் மூலம் படிப்பினை பெறுவது, இவ்வாறு அல்குர்ஆனோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது முஸ்லிம்கள் அனைவரின் மீதும் கட்டாயக் கடமையாகும். நபி(ஸல்) அவர்களின் குணநலன்கள் அல்-குர்ஆனாகவே இருந்தது என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதின் பொருளும் இதுதான்.

எனவே நம்முடைய வாழ்க்கையை முற்றிலும் அல்-குர்ஆனுக்கு கட்டுப்படும் வாழ்க்கையாக அமைத்துக் கொள்ளவேண்டும். அது நம்முடைய ஈருலக வாழ்க்கைக்கும் நன்மை பயக்கக்கூடியதாக இருக்கும். அதுவே அல்-குர்ஆன் இறக்கி அருளப்பட்டதின் மகத்தான நோக்கமாகும்.

இந்த நோக்கத்தைப் புரிந்து கொண்ட நபித்தோழர்களும் நபித்தோழியர்களும் அல்-குர்ஆனுக்கு இணங்க தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். ஒவ்வொரு வசனம் இறங்கும் போதும் அதன் கட்டளைகளுக்கு உடனே கட்டுப்படுபவர்களாக இருந்தனர். இதற்கு வரலாற்றில் எத்தனையோ சான்றுகள் உள்ளன. நபி(ஸல்) அவர்கள் குர் ஆன் வழியில் வாழ்க்கையை அமைத்து கொண்டவர்களுக்கு கிடைக்கும் இரு உலகத்திலும் கிடைக்கும் ஏராளமான நன்மைகளை நமக்கு போதித்து இருக்கிறார்கள்.

நிச்சயமாக இந்தக் குர்ஆன் பரிந்துரை செய்யக்கூடியதாகும். அது ஏற்கப்படக்கூடியதுமாகும். அதனைப் பின்பற்றினால் அவரை அது சுவனத்தில் சேர்க்கும். அதனை பின்பற்றாமல் விட்டு விட்டால் அல்லது நிராகரித்தால் அவன் நரகின் அடித்தளத்தில் தள்ளப்படுவான், (அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத்(ரலி) – ஆதாரம் : முஸ்லிம்).

குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு அத்தியாயங்கள் அல்பகரா, ஆலஇம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், (ஆதாரம்: முஸ்லிம்).

குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர், (அறிவிப்பாளர்: உஸ்மான்(ரலி) – ஆதாரம் : புகாரி)

இக்குர்ஆனின் ஒரு முனை அல்லாஹ்வின் கையிலும் மறுமுனை உங்கள் கைளிலும் உள்ளது. எனவே இதனை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் இம்மையில் வழிதவறமாட்டீர்கள், மறுமையில் அழிவுறவும் மாட்டீர்கள், (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) – ஆதாரம் : தப்ரானி).

மறுமை நாளில் குர்ஆனை ஓதி அதனடிப்படையில் நடந்தவரிடம் குர்ஆனிய தோழரே ஓதுவீராக என்று கூறப்படும். மேலும் உலகத்தில் எவ்வாறு நிறுத்தி நிதானமாக ஓதினீரோ அவ்வாறு ஓதுவீராக! நிச்சயமாக எந்த வசனத்தை கடைசியாக ஓதி முடிப்பாரோ அதுதான் சொர்க்கத்தில் உமது அந்தஸ்தாகும் என்று கூறப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) – ஆதாரம் : அபூதாவுத், திர்மிதி)

குர்ஆனை ஓதிய தோழர் மறுமையில் வருவார். அப்போது குர்ஆன் இறைவா இவருக்கு ஆடையை அணிவி என்று சொல்லும் அப்போது அவருக்கு உயர்ந்த கிரீடம் அணிவிக்கப்படும். இறைவா இவருக்கு உன் அருளை வழங்குவாயாக! என்று கூறும். அப்போது அவருக்கு உயர்ந்த சீருடை அணிவிக்கப்படும். பிறகு குர்ஆன் இவரை பொருந்திக் கொள்ளுமாறு சொல்லும் அவரை இறைவன் பொருந்திக் கொள்வான். அம்மனிதரிடம் குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஒதுவீராக!, அவர் ஒதுகிறபோது ஒவ்வொரு வசனத்திற்க்கும் ஒரு நன்மை அதிகப்படுத்தப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா(ரலி) – ஆதாரம் : திர்மிதி, இப்னு குஸைமா)

இது போன்று என்னும் ஏராளமான நன்மைகளை அல்லாஹ் இதன் வழியாக தரக்கூடியவனாக இருக்கிறான். இதை உணர்ந்து நம்முடைய வாழ்க்கையை

குர்ஆன் காட்டிய வழியில் அமைத்து கொள்ள வேண்டும்

குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளிய நோக்கம் நாம் அதைப் படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்குத்தான். ஆனால் முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பது உண்மை. நமக்கு மரணம் வந்தடைவதற்கு முன் குர்ஆனை ஓதத் தெரிந்தவர்களிடம் சென்று குர்ஆனை ஓதத் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் அதை புரிந்து, அதற்க்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதரர்கள் குர்ஆனை சரளமாக ஓதவும், அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். குர்ஆனைப் படியுங்கள், அதைப்படிப்பது மிகவும் இலகுவானது.

எனவே குர் ஆனை ஓதி, விளங்கி அதன் படி செயல்பட்டோம் என்றால் அதன் மூலம் இரு உலகத்திலும் ஏராளமான நன்மைகளை பெறுவோம் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமில்லை.

வெளியீடு:-

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)

இந்த துண்டு பிரசுரத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்…

தொகுப்பு : முஹம்மத் ஜாஃப்ரின்

About riyadhtntj