அசத்திய கொள்கையை வேரறுக்கும் அல்குர்ஆன்!

மனிதனுக்கு பகுத்தறிவுடன் கூடிய சீரிய சிந்தனையையும், மரணத்திற்குப் பின் வரும் மறுமை வாழ்க்கைக்கான சிறந்த பாதையையும் தெளிவாக காட்டும் கொளகையையே சத்தியக் கொள்கை என்போம். அவ்வகையில் சத்தியத்தை தெள்ளத்தெளிவாக விளக்கும் ஒரே மார்க்கம், திருக்குரானை தன்னகத்தே கொண்டிருக்கும் இஸ்லாமிய மார்க்கத்தை தவிர வேறில்லை என்பது மறுக்கமுடியாத பேருண்மை ஆகும். திருக்குர்ஆன், சத்தியக் கொள்கையை போதிப்பதுடன் சேர்த்து, உலகிலுள்ள அசத்தியக் கொள்கை அனைத்திற்கும் ஆணித்தரமான ஆதாரங்களை முன்வைத்து, அவைகளின் வேர்களை அடியோடு ஆட்டம்காண செய்கிறது.

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (அல்குர்ஆன் 21:18)

உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழிவதாகவே உள்ளது” என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 17:81)

போலியான கொள்கைகள் ஒவ்வொன்றையும் சுக்குநூறாக உடைத்தெறியும் வலிமைவாய்ந்த வசனங்கள் திருமறைக் குர்ஆனில் ஏராளமாக பொதிந்திருக்கின்றன.

நாத்திகம் – கடவுள் மறுப்புக் கொள்கை:

மடமையான கொள்கைகளில் முதலிடம் வகிப்பது நாத்திகம் என்ற கடவுள் மறுப்புக் கொள்கையாகும். அந்த மதத்தவர்கள் இந்த மதக் கடவுளை மறுக்கிறார்கள்! இந்த மதத்தவர்கள் அந்த மதக் கடவுளை மறுக்கிறார்கள்!! எனவே நாங்கள் எந்தக் கடவுளும் இல்லை என்று மறுக்கிறோம் என்ற அற்புத (?) கொள்கையில் அஸ்திவாரமிடப்பட்டது தான் நாத்திகம்.

சில மதங்களில் காணப்படும் மூடத்தனத்தை பிரதான வாதமாக வைத்து, தங்களை பகுத்தறிவு பகலவன்களாக(?) காட்டிக் கொள்பவர்களால் தோற்றுவிக்கப்பட்டது நாத்திகம். அறிவுக்குப் பொருந்தாத மூடத்தனம் எங்கிருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளக் கொள்ளக்கூடாது என்பதை மறுப்பதற்கில்லை. மூடத்தனத்தை காரணம் காட்டி கடவுளை எவ்வாறு நிராகரிக்க இயலும்? மூடத்தனம் தவறு என்று சொல்வதற்கு பதிலாக கடவுளே இல்லையென்று மறுக்கும் இவர்களின் பகுத்தறிவு(?) உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கிறது.

“கடவுளை மற! மனிதனை நினை!!” என்பது நாத்திக கொள்கையின் தாரக மந்திரம். “கடவுள் பார்க்கிறார் கஷ்டப்படுபவனுக்கு உதவு”, “கடவுள் பார்க்கிறார் சக மனிதனுக்கு தொல்லை தந்துவிடாதே” என்று சொல்லும் தத்துவத்தில் வராத மனிதநேயம், கடவுளெல்லாம் இல்லை, யாரும் நம்மை கண்காணிக்கவுமில்லை, யார் எப்படிவேணுமானாலும் வாழலாம் என்று சொல்லும் வேடிக்கையான தத்துவத்தில் வந்துவிடும் என்று சொல்வது கொஞ்சமாவது அறிவுக்குப் பொருத்தமாக உள்ளதா?

பகுத்தறிவிற்கு துளியும் தொடர்பில்லாத இந்த போலி பகுத்தறிவு கொள்கைக்கு எதிராக அல்குர்ஆன் ஏராளமான ஆதாரங்களை அடுக்குகிறது. அதில், திருக்குர்ஆன் நேரடியாக மனித சமுதாயத்தைப் பார்த்து பேசுவது போன்ற சான்றுகளை மட்டுமே காணவிருக்கின்றோம்.

இறைவனின் படைப்பாற்றலை திருக்குர்ஆன் எடுத்துக் கூறி இந்த மனித சமுதாயத்தை சிந்திக்க சொல்லி சவால் விடுகிறது. இவற்றை சாதாரணமாக நாம் சிந்தித்தால் போதும், கண்டிப்பாக படைப்பாளன் ஒருவன் இருந்தாக வேண்டுமென்று சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாக விளங்கலாம்.

சாதாரணமாக நாம் பயன்படுத்தும் கார், பஸ், வீடு…. போன்றவை தானாக வந்தது; யாரும் இதை உருவாக்கவில்லை என்று கூறினால் அதை யாரும் ஏற்றுக் கொள்ள‌ மாட்டோம். பகுத்தறிவுவாதி என்று மார்தட்டுபவர்கள் கூட ஏற்றுக் கொள்வதில்லை. அதெப்படி தானாக வரும்? உருவாக்குபவன் இல்லாமல் எந்தப் பொருளும் தானாக வராது, இதையெல்லாம் உருவாக்குபவர் கண்டிப்பாக இருந்தாக வேண்டும் என்று பயங்கரமாக வீர வசனம் பேசி வாதம் செய்வர்.

இதே சிந்தனையோடு இவ்வுலகில் காணப்படும் படைப்பினங்களை நோக்கினால், இவற்றைப் படைத்த படைப்பாளனான இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதையும், அவனுடைய சர்வ வல்லமையையும் உணரலாம் என திருக்குர்ஆன் பேசுகிறது.

இரவு, பகல் மாறி மாறி வருவதிலும், வானங்களையும், பூமியையும் அல்லாஹ் படைத்திருப்பதிலும் (இறைவனை) அஞ்சுகிற சமுதாயத்திற்குச் சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 10:6)

அவனே பூமியை விரித்தான். மலைகளையும், நதிகளையும் அதில் அமைத்தான். ஒவ்வொரு கனிகளிலும் ஒரு ஜோடியை அமைத்தான். இரவைப் பகலால் மூடுகிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 13:3)

மண்ணால் உங்களைப் படைத்து பின்னர் நீங்கள் மனிதர்களாகப் பரவி இருப்பது அவனது சான்றுகளில் உள்ளவை. (அல்குர்ஆன் 30:20)

இதுபோன்ற இன்னும் ஏராளமான சான்றுகளை திருக்குர்ஆன் முன்வைக்கிறது. இவற்றை பகுத்தறிவுடன் சிந்திக்கும் எவரும் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை நிராகரிக்க இயலாது.

பல கடவுள் கொள்கை:

கடவுளே இல்லையென்பதும், பல கடவுள்கள் உண்டு என்பதும் அசத்தியக் கொள்கைகளில் முக்கிய பங்கு வகிப்பவையாகும்.

அகில உலகையும் படைத்து, பராமரித்து, பாதுகாக்கும் இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு கடவுள் யாருமேயில்லை என்பதே இஸ்லாத்தின் அடிப்படை. அல்லாஹ்வை தவிர வேறு கடவுள் இல்லை என்று சொல்வதோடு நின்றுவிடாமல், பல கடவுள்கள் இருக்கவே முடியாது என்பதற்கான வலிமையான வாதங்களை திருக்குர்ஆன் எடுத்து வைத்து நிறுவுகிறது.

அல்லாஹ் ஒருவன் என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் : அத்தியாயம் 112)

இரண்டு கடவுள்களைக் கற்பனை செய்யாதீர்கள்! அவன் ஒரே ஒரு கடவுளே! எனவே எனக்கே பயப்படுங்கள்! என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 16:51)

உலகின் எந்த நிர்வாகமாக இருந்தாலும் அதிகாரம் செலுத்தும் தலைமை பொறுப்பை ஒருவரிடம் மட்டுமே கொடுக்கின்றோம். காரணம், ஒரே நிர்வாகத்தில் இருவர் அதிகாரம் செலுத்தும் போது நிச்சயமாக அந்த நிர்வாகம் சீராக இயங்காது. இருவருக்குமிடையே சண்டைச் சச்சரவுகள், பிரிவினைகள் கண்டிப்பாக ஏற்பட்டே தீரும். அந்த நிர்வாகம் சின்னாபின்னமாக சீரழியும். உலக நடைமுறைகள் இதனை நமக்கு நன்றாகவே படம் பிடித்துக் காட்டுகின்றன.

ஆனால் வானம் பூமி மற்றும் கோள்களின் இயக்கங்கள் படைக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை ஒரே சீராக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதுவே இவற்றை நிர்வாகம் செய்பவன் ஒரே ஒருவனாகத் தான் இருக்க முடியும் என்பதை நம் பகுத்தறிவுக்குத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

அவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் இரண்டும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷுக்கு அதிபதியாகிய அல்லாஹ் தூயவன். (அல்குர்ஆன் 23:22)

திருக்குர்ஆன் எடுத்துரைக்கும் ஆதாரங்களைச் சிந்திக்கும் எந்தப் பகுத்தறிவுவாதியும் இறைவன் இருக்கின்றான் என்பதையும், அவன் ஒருவன் தான் என்பதையும் பகுத்தறிவால் ஒருபோதும் மறுக்க இயலாது.

அல்லாஹ்வைத் தவிர கடவுளே வேறுயாரும் இருக்கமுடியாது எனும்போது, செத்துப்போன மனிதன், கல், மரம், செடி போன்ற எந்த படைப்பின‌மும் கடவுளாக முடியாது என்பதை யாரும் விளக்கிச் சொல்லாமலே எளிதில் உணரக்கூடிய விஷயம்.

அல்லாஹ் என்ற ஒற்றை இறைவனைத் தவிர கடவுள் என்று சித்தரிக்கப்படுபவை அனைத்தும் முற்றிலும் அசத்திய கொள்கை என்பதை சந்தேகமற திருக்குர்ஆன் நிரூபணம் செய்கிறது.

இறைவன் சொல்லே ஈருலகுக்கும் வழிகாட்டி:

இறைவன் இருக்கின்றான் அவன் ஒருவனே என்று முடிவான பிறகு, அவன் சொல்வதை மட்டுமே வாழ்க்கை நெறியாக எடுத்துக்கொண்டு வாழவேண்டும் என்பதே அறிவார்ந்த‌ எதார்த்தமான உண்மை. வணக்க வழிபாடுகள் உள்ளிட்ட மனிதனின் வாழ்வில் அவன் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை என அனைத்திற்கும் படைத்த‌ இறைவன் சொல்லும் வழிமுறையை தவிர அனைத்தும் நிச்சயம் மனிதனை அழிவை நோக்கி இழுத்து செல்லும் அசத்திய பாதையாகத்தான் இருக்க முடியும்.

நாம் ஒரு நிறுவனத்தை நடத்துகிறோம் என்றால், அந்நிறுவனத்தின் சட்டதிட்டங்கள் அனைத்தையும் அதன் உரிமையாளரான நாம் தான் வகுக்க வேண்டுமென விரும்புவோம். நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரோ அல்லது நிறுவனத்திற்கு தொடர்பில்லாத மூன்றாமவரோ சட்டத்தை வகுத்தால் நிச்சயம் அதை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்; கடும் கோபம் கொள்வோம்.

சாதாரண மனிதனாகிய நாமே இவ்வளவு கடும் உறுதியோடு இருக்கும்போது, அகில உலகையும் படைத்து, பரிபாலிக்கும் வல்லமையும் மாண்பும் உடைய இறைவன், அவனுக்கு சொந்தமான விஷயத்தில் அற்ப மனிதர்கள் தலையிடுவதை கடுகளவேனும் அனுமதிப்பானா?. இப்பேரண்டம் அதிலுள்ள மனிதர்கள் உட்பட அனைத்தும் உயரிய படைப்பாளனான இறைவனுக்கு மட்டுமே சொந்தம்.  அத்தைகைய சர்வ அதிகாரம் பெற்றவன் தான் நாம் எதை செய்யவேண்டும்; எதை செய்யக்கூடாது; என்ற சட்டதிட்டத்தை வகுக்க வேண்டும். ஆசை, மறதி போன்ற பலவீனங்களுடன் படைக்கப்பட்டிருக்கும் மனிதன் ஆன்மிகம் சார்ந்த விஷயத்தில் வகுக்கும் சட்டம் யாவும் இறைவன் ஏற்றுக்கொள்ளாத அசத்திய கொள்கை என்பது பளிச்சென்று விளங்குகிறதல்லவா!

இந்த அடிப்படையை சரியாக உணர்ந்தால், ஆன்மீகத் தலைவர் சொன்னார், மகான் சொன்னார், பெரியார் சொன்னார், முன்னோர்கள் சொன்னார்கள் போன்ற எந்தவொன்றும் நிச்சயம் பெரும் வழிகேடாகத்தான் இருக்கமுடியும் என எவரும் எளிமையாக அறியலாம்.

இந்தக்கருத்தை திருக்குர்ஆன் ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது.

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. (திருக்குர்ஆன் : 39:3)

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று கூறுவீராக! (திருக்குர்ஆன் : 49:16)

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்! (திருக்குர்ஆன் : 7:3)

இறைவன் சொல்லாத யாவும் தெளிவான வழிகேடு; அசத்தியம் என்பதை மேற்காணும் சில திருமறை வசனங்களை சிந்தித்தால் அறிய முடியும். நபித்தோழர்களை பின்பற்றுவது, மகான்களை பின்பற்றுவது, முன்னோர்களை பின்பற்றுவது என பல்வேறு அசத்திய கொள்கைகள் இஸ்லாமியர்களிடமும் சர்வசாதாரணமாக நுழைந்திருக்கின்றது. அனைவருமே இறைவன் கட்டளை படி வாழவேண்டும் என்றிருக்கும்போது, மனிதன் எவ்வாறு மனிதனுக்கு வழிகாட்ட முடியும் என்பதை சிந்திக்க தவறுகிறார்கள். வழிகேட்டில் ஆரம்ப புள்ளியாக இந்த அறியாமையே உள்ளது.

எந்தவொரு காரியமானாலும், அது உயர்ந்தோன் அல்லாஹ் சொன்னதை செய்கிறோமா அல்லது அனைத்து பலவீனங்களுக்கும் உட்பட்ட மனிதன் சொன்னதை செய்கிறோமா? என்பதை சற்று சிந்தித்தாலே சத்தியக் கொள்கையையும் வழிகேடான அசத்தியக் கொள்கையையும் சிரமமின்றி பிரித்தறிய முடியும். அவ்வாறு இருக்கும் அசத்தியக் கொள்கைகள் அனைத்தையும் தூக்கியெறிந்து விட்டு உண்மையான ஓரிறைக் கொள்கையை மட்டும் பற்றி பிடித்து ஈருலகிலும் ஈடேற்றம் பெறுவோமாக!

தொகுப்பு : சலாஹுத்தீன்

வெளியீடு:-

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)

இந்த துண்டு பிரசுரத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்…

Related Posts

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

மனிதனை அழகிய படைப்பாக்கிய அல்லாஹ், மனிதன் மீது அளவுகடந்த அன்பும் இரக்கமும் கருணையும் கொண்டுள்ளான். இம்மையிலும் மறுமையிலும் மனிதன் வெற்றி பெற்றிட வேண்டும் என்பதற்காக, அதற்கு தேவையான இறை நேர்வழிகாட்டலையும் வகுத்தளித்திருக்கின்றான். குறிப்பாக, ரமளான் மாதத்திற்கென்று கூடுதல்…

நபிகளாரின் எளிமை!

நபிகளாரின் எளிமை!

உலகில் எத்தனையோ தலைவர்கள் தோன்றி மறைகிறார்கள். அவர்கள், மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் போதும், பொது மேடைகளில் பேசும் போதும் பல உதாரணங்களை சொல்லி எளிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். ஆனால் அவர்கள் தம்முடைய சொந்த வாழ்க்கையில்…

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

அகில உலகைப் படைத்த இறைவன், மனிதப் படைப்புகளை பிற உயிரினங்களைவிட மேன்மையாக வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்களாகப் படைத்திருக்கின்றான். நீதி செலுத்துவதற்கும், சமத்துவம் பேணப்படுவதற்கும், எவ்வாறு வாழ்வியல் வழிகாட்டியாக கற்றுத் தந்திருக்கின்றானோ அதன் அடிப்படையில் மனித சமுதாயம் தங்களின்…

பிறர் நலன் நாடுவோம்!!!

பிறர் நலன் நாடுவோம்!!!

இஸ்லாம் என்பது இறை மார்க்கம். மனிதன் அமைதியாக வாழ வேண்டும்; நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அனைத்தும் அறிந்த ஏக இறைவனால் வழிமுறைகள் வகுக்கப்பட்ட மார்க்கம். இத்தகைய இஸ்லாமிய மார்க்கம், மனித சமுதாயம் எப்போதும் சிறப்பாக இயங்குவதற்குத்…

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

நல்லொழுக்கமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவோருக்கு சுய கட்டுப்பாடு அவசியமான ஒன்றாகும். நீரில்லா உலகை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ அதுபோல சுய கட்டுப்பாடின்றி நல்லொழுக்கமுள்ள வாழ்வைக் கற்பனை செய்ய முடியாது. சுய கட்டுப்பாடு என்பது ஒருவர் அவசியமற்ற…

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ரபீஉல் அவ்வல் மாதம் பிறந்து விட்டால் மவ்லிது கச்சேரிகள் களை கட்ட ஆரம்பித்து விடுகின்றன. மஃரிப் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசல்களிலும் மற்றும் வீடுகளிலும் முதல் பத்து நாட்கள் சுப்ஹான மவ்லிதுகளை பக்திப் பரவசத்தோடு அதை நன்மை எனக்…