கொளுத்தும் கோடை வெயில், நரகம் – ஒரு நேர்முகம்
சூரியனின் மேற்பரப்பின் வெப்பம் 6000 டிகிரி செல்சியஸ். அதனால் தான் 149 மில்லியன் கி.மீ. தூரத்தில் சூரியன் இருந்த போதும் அதன் வெப்பக் கதிர்கள் நம் கண்களைக் கூசச் செய்கின்றன.
100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் தண்ணீர் கொதித்து ஆவியாகி விடுகின்றது.
1100 டிகிரி வெப்பத்தில் கடின இரும்பு திரவ நிலைக்கு வந்து விடுகின்றது.
நம்முடைய கண்களால் கூட பார்க்க முடியாத சூரியன் என்ற மாபெரும் அணு உலைக்குள் நாம் தூக்கிப் போடப்பட்டால் நம்மால் தாங்க முடியுமா? அதனுடைய மையப் பகுதியின் வெப்பம் 100,000 டிகிரி செல்சியஸ் ஆகும்.
பஞ்சு பஸ்பம் போன்ற மனித உடல் தாங்கும் வெப்பம் 38 முதல் 40 டிகிரி செல்சியஸ் தான்.
ஓர் இறை நம்பிக்கையாளர் சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தை நரக நெருப்பின் சூட்டோடு ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது. ஏனெனில் சூடு என்றதும் நபி (ஸல்) அவர்கள் நரக நெருப்புடன் முடிச்சு போடுகின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 534, முஸ்லிம் 72
வெப்பம் கடுமையாகும் போது லுஹரைத் தாமதப்படுத்துங்கள். ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 534, முஸ்லிம் 72
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலகில் கொளுத்துகின்ற வெயிலை நரகத்தின் வெளிப்பாடு என்று குறிப்பிடுகின்றார்கள்.
இறைவா! எனது ஒரு பகுதி, மறு பகுதியைச் சாப்பிட்டு விட்டது என்று நரகம் இறைவனிடம் முறையிட்டது. கோடையில் ஒரு மூச்சு விடுவதற்கும் குளிரில் ஒரு மூச்சு விடுவதற்கும் இறைவன் அதற்கு அனுமதி வழங்கினான். கோடை காலத்தில் நீங்கள் காணும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் நீங்கள் உணரும் கடும் குளிரும் அதன் வெளிப்பாடுகள் தாம்’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 537
புகாரி 534 ஹதீஸில் வாட்டி வதைக்கும் வெயிலை நரகம் விடும் மூச்சு என்று கூறுகின்றார்கள். ஆக கொளுத்துகின்ற வெயில் என்பது கொளுந்து விட்டெரியும் நரகத்தின் அக்னி சாட்சி என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
இன்று அறிவியல் உலகில் 100 டிகிரிக்கு மேல் உடல் காய்ச்சலில் தகிக்கும் என்றால் நெற்றியில் ஈரத் துணியை வைக்கின்றார்கள். உடல் சூடு உடனே தணிந்து விடுகின்றது. இந்த ஹதீஸ்களை இங்கு குறிப்பிடக் காரணம், சூடு என்றதும் அதை நபி (ஸல்) அவர்கள் நரகத்தின் சூட்டுடன் தொடர்பு படுத்தி நரகத்தின் சிந்தனைப் பொறிகளை நம்மிடம் கிளப்பி விடுகின்றார்கள்.
பாருங்கள்! சூரியனிலிருந்து பூமி 149 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தும் அதன் கொடுமையைத் தாங்க முடியவில்லையே! அதன் வெப்பத்தில் சுருண்டு விடுகிறோமே! ஏன்? இவ்வளவு தொலைவில் இருக்கும் சூரியனின் வெப்பம் தாக்கி சுருண்டு சாகின்றோம். 50 டிகிரி செல்சியஸ் வரை தாக்கிய இந்த வெப்பத்தில் 350 பேர் இறந்திருக்கின்றார்கள். இந்த சூரியனை விடவும் வெப்பம் நிறைந்த நரக நெருப்பு எப்படியிருக்கும்?
அதற்கு மேல் கொதிக்கும் வெப்பத்தை மனித மேனி தாங்காது! ஒரு போதும் தாங்காது எனும் போது சூரியனின் வெப்பத்தை விடப் பன்மடங்கு வெப்பம் நிறைந்த, பல கோடி அணு உலைகளுக்குச் சமமான நரக வெப்பத்தை நாம் எப்படித் தாங்க இயலும்? இதை எப்போதாவது நாம் சிந்தித்தோமா?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்’’ என்று கூறினார்கள். உடனே, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்த (உலக) நெருப்பே போதுமானதாயிற்றே!’’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப் பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்’’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்:புகாரி 3268, முஸ்லிம் 5077
இத்தகைய தன்மை கொண்ட நெருப்பின் வேதனையை நம்மால் தாங்க முடியுமா?
உலகத்தில் நம்மைத் தாக்கும் நெருப்பு ஒரு முனையிலிருந்து தான் வரும். ஒரு திசையில் நெருப்பு வரும் போது மறு திசைக்கு ஓடி தப்பிக்க வழியுண்டு. ஆனால் மறுமையில் உள்ள அந்த நெருப்பு எல்லா முனைகளிலிருந்தும் தாக்கிக் கொண்டிருக்கும். மேலே, கீழே, வலம், இடம் என எல்லாப் பக்கங்களில் இருந்தும் நெருப்பு சூழ்ந்து முற்றுகையிட்டுக் கொண்டிருக்கும்.
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் எதிராக நடப்போருக்கு நரக நெருப்பு உள்ளது. அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மாபெரும் இழிவாகும் என்பதை அவர்கள் அறிய வேண்டாமா? அல்குர்ஆன் 9:63
நரகம் அவர்களைத் தொலைவான இடத்தில் காணும் போதே அதன் கொந்தளிப்பையும், இரைச்சலையும் அவர்கள் செவியுறுவார்கள். அல்குர்ஆன் 25:12
அவர்களின் மேற்புறத்திலிருந்தும், கால்களுக்குக் கீழே இருந்தும் அவர்களை வேதனை மூடிக் கொள்ளும் நாள்! “நீங்கள் செய்து கொண்டிருந்ததைச் சுவையுங்கள்” என்று (இறைவன்) கூறுவான். அல்குர்ஆன் 29:55
உலகத்தில் வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள பலவகையான நவீன சாதனங்கள் மற்றும் உணவு முறை கையாளுகிறோம்… ஆனால் மறுமையில்? நரகத்தில் கொடுக்கப்படும் உணவுகள் மற்றும் அதனால் தாகம் தீருமா?
நரகத்தின் பகுதியெங்கும் நெருப்புக் காற்று வீசிக்கொண்டிருக்கும். நரகத்திலே மண்டை ஓட்டைக் கழற்றும் அளவிற்கு வெப்பம் கடுமையாக இருக்கும். மாளிகை போல் பிரம்மாண்டமான தீப்பந்தங்களாக நெருப்பு இருக்கும். எந்தவொரு குளிர்ச்சியையும் அங்கே காணமுடியாது. இதயங்களைத் தாக்கும் கடும் நெருப்பு வேகம் தணியும்போது மீண்டும் மீண்டும் அதன் வீரியம் அதிகரிக்கப்படும்.. நரகம் எங்கும் பேரிரைச்சலாக இருக்கும். கரும் புகையே நிழலாக இருக்கும். நரகத்திலே பருகுவதற்கு கொதிக்கும் நீரும், சீழும் கொடுக்கப்படும். நீர் உருக்கப்பட்ட செம்பு போல் வெப்பமுடையதாக இருக்கும். நரகவாசிகள் குடித்த கொதிக்கும் நீரால் அவர்களின் குடல்கள் துண்டாகும். ஸக்கூம் என்ற முட்செடி உணவாக கொடுக்கப்படும். அதுவோ குற்றவாளிகளின் தொண்டைக்குள் இறங்காது பசியையும் போக்காது. நெருப்பாலான விரிப்புகளுகம் போர்வைகளும் தரப்படும். நெருப்பு மற்றும் தாரினால் ஆன ஆடைகள் அணிவிக்கப்படுவார்கள். கொதிநீர் குற்றவாளிகளின் தலையில் ஊற்றப்படும். மேன்மேலும் நெருப்பினால் எரிக்கப்படும் போது கருகும் தோல்கள் உடனுக்குடனே மாற்றப்படும்.
அதனால் இந்த கொடூரமான நரகின் நிலையை உணர்ந்து உலகில் வாழும் காலம் என்பது அல்லாஹ் நமக்கு அளித்த மிகப்பெரும் வாய்ப்பாகும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாமும் நல்லறங்கள் செய்து நமது குடும்பத்தாரையும் நல்லறங்கள் செய்யத் தூண்டடி நாமும், அவர்களுமாக சுவனத்தை அடைந்து நதிகள் ஓடும் சோலைகளின் அருகில் குடியிருப்புகளை அமைத்து நிம்மதியான வாழ்க்கையை நிரந்தரமாக வாழ முயற்சிப்போமாக!
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இதுவே பெரும் வெற்றி. அல்குர்ஆன் 85:11
ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. அல்குர்ஆன் 9:100
இதை விடச் சிறந்ததை நான் உங்களுக்கு சொல்லட்டுமா? என்று கேட்பீராக! இறைவனை அஞ்சுவோருக்கு தம் இறைவனிடம் சொர்க்கச் சோலைகள் உள்ளன, அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். தூய்மையான துணைகளும், அல்லாஹ்வின் திருப்தியும் உள்ளன. அல்லாஹ் அடியார்களை பார்ப்பவன். அல்குர்ஆன் 3:13,14
இந்த நோட்டீஸை download செய்ய இங்கே கிளிக் செய்யவும்