சுன்னத்தான நோன்புகள்….
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
தலைப்பு : சுன்னத்தான நோன்புகள்…
புனித ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமையாக்கப்பட்டிருப்பது போல் வேறு பல நோன்புகள், கட்டாயமாக்கப் படாவிட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் ஆர்வமூட்டப்பட்டுள்ளன. அவற்றையும் கடைப்பிடித்து நன்மைகளை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆறு நோன்புகள்
ரமளான் மாதத்திற்கு அடுத்த மாதமான ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்பதற்கு நபிகள் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.
யார் ரமலான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவராவார் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி) நூல்: முஸ்லிம் 1984
ரமளான் நோன்பைத் தொடர்ந்து ஆறு நாட்கள் என்று இந்த ஹதீஸில் கூறப்படுவதால் ஷவ்வால் மாதத் துவக்கத்திலேயே இந்த நோன்பை நோற்க வேண்டும் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். ரமளானைத் தொடர்ந்து என்பதற்கு இவர்கள் கூறுவது போன்று பொருள் கொண்டால் பெருநாள் தினத்திலிருந்து நோன்பு நோற்க வேண்டும். இது தான் ரமளானைத் தொடர்ந்து வரும் முதல் நாள். ஆனால் பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பதற்கு நமக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே ரமளானுக்குப் பின் என்பது தான் இதற்குச் சரியான விளக்கமாக இருக்க முடியும். தொடர்ந்து என்று மொழியாக்கம் செய்த இடத்தில் அத்பஅ என்ற சொல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தி உள்ளார்கள். ரமளானுக்கு முன்னால் இல்லாமல் ரமளானுக்குப் பின்னால் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும். ஷவ்வால் என்று குறிப்பிட்டிருப்பதால் அம்மாதத்தில் வசதியான நாட்களில் நோற்று விட வேண்டும்.
ஆஷூரா நோன்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்று மற்றவர்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! இந்த நாளை யூதர்களும், கிறித்தவர்களும் மகத்துவப்படுத்துகின்றனரே? என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அடுத்த வருடம் அல்லாஹ் நாடினால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் எனக் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு வருவதற்குள் மரணித்து விட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 1916
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளின் கடைசி வருடத்திலும் ஆஷூரா நோன்புக்குக் கட்டளையிட்டுள்ளார்கள். மேலும் யூதர்களும், கிறித்தவர்களும் இந்த நாளை மகத்துவப்படுத்துகின்றனரே என்று கேட்கப்பட்ட போது அவர்களுக்கு மாறு செய்யும் வகையில் 9, 10 ஆகிய இரு நாட்கள் நோன்பு நோற்பதாகக் கூறியுள்ளனர். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆசைப்பட்ட இரண்டு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும்.
அரஃபா நாள் நோன்பு
துல்ஹஜ் மாதம் பிறை ஒன்பது அன்று ஹாஜிகள் அரஃபா பெருவெளியில் தங்குவார்கள். அதனால் அந்த நாளுக்கு அரஃபா நாள் என்று குறிப்பிடுவர். அரஃபா நாளில் ஹாஜிகள் நோன்பு நோற்கத் தடை உள்ளது. ஆனால் ஹாஜிகள் அல்லாதவர்கள் அரஃபா நாளில் நோன்பு நோற்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.
அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1977
வியாழன் மற்றும் திங்கள் தோறும் நோன்பு நோற்பது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: திர்மிதீ 676, நஸயீ 2321
ஒவ்வொரு வியாழன் மற்றும் திங்கட்கிழமைகளில் அமல்கள் (இறைவனிடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே நான் நோன்பு நோற்றுள்ள நிலையில் எனது அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை விரும்புகின்றேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ 678
திங்கட்கிழமை நோன்பு நோற்பது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அன்று தான் நான் பிறந்தேன். அன்று தான் எனக்கு இறைச் செய்தி அருளப்பட்டது என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1978
மாதம் மூன்று நோன்புகள்
மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும், ரமளானில் நோன்பு நோற்பதும் காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1977
மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதென்றால் 13, 14, 15 ஆகிய நாட்களில் நோன்பு நோற்பீராக என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: திர்மிதீ 692
வெள்ளிக்கிழமை நோன்பு நோற்கலாகாது
வெள்ளிக்கிழமை நோன்பு நோற்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்களா? என்று ஜாபிர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ஆம் என்றார்கள். அறிவிப்பவர்: முஹம்மத் பின் அப்பாத் (ரலி) நூல்: புகாரி 1984
வெள்ளிக்கிழமைக்கு முன்பு ஒரு நாள் அல்லது இதை அடுத்து ஒரு நாள் சேர்த்தே தவிர வெள்ளிக் கிழமை நோன்பு நோற்கலாகாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1985
வெள்ளிக்கிழமை நான் நோன்பு நோற்றிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நேற்று நோன்பு நோற்றாயா? என்று கேட்டார்கள். நான், இல்லை என்றேன். நாளை நோன்பு நோற்கும் எண்ணம் உள்ளதா? என்று கேட்டார்கள். நான், இல்லை என்றேன். அப்படியானால் நோன்பை விட்டு விடு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுவைரிய்யா (ரலி) நூல்: புகாரி 1986
வெள்ளிக்கிழமையுடன் இன்னொரு நாள் சேர்த்துத் தான் நோன்பு நோற்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் வெள்ளிக்கிழமை நோன்பு நோற்றவர்கள் அதை முறித்து விட வேண்டும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்
நோன்பு நோற்கக் கூடாத நாட்கள்
நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள், அதையடுத்த மூன்று நாட்கள் ஆகிய ஐந்து நாட்கள் நோன்பு நோற்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஷஅபான் முப்பதாம் இரவா? ரமளானின் முதல் இரவா? என்ற சந்தேகம் ஏற்படும் நாளிலும் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாட்களில் நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள்.அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி),நூல்: புகாரி 1197, 1864, 1996
தஷ்ரீக்குடைய நாட்கள் (துல்ஹஜ் பிறை 11, 12, 13) உண்பதற்கும், பருகுவதற்கும் உரிய நாட்களாகும்.
நூல்: முஸ்லிம் 1920
(ரமளானா? ஷவ்வாலா? என்று) சந்தேகம் உள்ள நாளில் யார் நோன்பு நோற்கிறாரோ அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார். அறிவிப்பவர்: அம்மார் பின் யாஸிர் (ரலி), நூல்: திர்மிதி 622
மிஃராஜ் நோன்பு இல்லை
ரஜப் மாதம் பிறை 27 அன்று மிஃராஜ் நோன்பு என்ற பெயரில் ஒரு நோன்பு நோற்கும் வழக்கம் தமிழக முஸ்லிம்களிடம் பரவலாகக் காணப்படுகின்றது. அந்த நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதாகவோ, அல்லது பிறரை நோற்குமாறு கட்டளையிட்டதாகவோ எந்த ஒரு சான்றும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின் நபித்தோழர்களின் காலத்திலும் இந்த நோன்பு நோற்றதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. எனவே இது பிற்காலத்தில் மார்க்கத்தைப் பற்றிய அறிவு இல்லாதவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பித்அத் ஆகும். இதைத் தவிர்க்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் மேற்கொண்டதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அது ரஜப் பிறை 27ல் தான் நடந்தது என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் சான்று இல்லை.
பராஅத் நோன்பு கூடாது
ஷஅபான் மாதம் 15ம் இரவு அன்று பராஅத் நோன்பு என்ற பெயரில் ஒரு நோன்பு நோற்கும் வழக்கமும் தமிழக முஸ்லிம்களிடம் காணப்படுகிறது. பராஅத் என்றொரு இரவு உள்ளதற்கும், அன்றைய தினம் மூன்று யாஸீன்கள் ஓதி இறந்தவர்களுக்குச் சேர்ப்பதற்கும் ஆதாரம் இல்லை. லைலத்துல் கத்ர் போல் லைலத்துல் பராஅத் என்றொரு இரவு பற்றி ஹதீஸ்களில் கூறப்படவே இல்லை. எனவே இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
தொடர் நோன்பு நோற்கத் தடை
ஒரு நாள் கூட இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நோற்கப்படும் நோன்பும், நோன்பைத் துறக்காமல் இரவு பகலாக நோற்பதும் விசால் எனப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்பு வைப்பீராக! ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அது போன்று பத்து மடங்கு நற்கூலி கொடுக்கப்படும்! எனவே, இது காலமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமமாகும் என்றார்கள். என்னால் இதைவிட சிறப்பானதைச் செய்ய முடியும் என்று நான் கூறினேன். அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று, இரண்டு நாட்கள் விட்டு விடுவீராக! என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு, என்னால் இதை விடச் சிறப்பாகச் செய்ய முடியும் என்று நான் கருதுகிறேன் என்று கூறினேன். அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் விட்டு விடுவீராக! இது தான் தாவூத் நபியின் நோன்பாகும். நோன்புகளில் இதுவே சிறந்ததாகும் என்றார்கள். என்னால் இதை விட சிறப்பாகச் செய்ய முடியும் என்று நான் கூறினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை விடச் சிறந்தது எதுவும் இல்லை என்றார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி 1976, 1975, 1977
இந்த நோட்டீஸை PDF ஆக Download செய்ய இங்கே Click செய்யவும்.