குர்பானியின் சட்டங்கள்
குர்பானியின் பின்னணி
இஸ்மாயீல் (அலை) அவர்களைத் தனக்காக அறுத்துப் பலியிட வேண்டும் என்று இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கனவில் அறிவித்தான்.
என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று இப்ராஹீம் கேட்டார்.) அவருக்கு சகிப்புத்தன்மை மிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு” என்று கேட்டார். என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்” என்று பதிலளித்தார்.
இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்” என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும்! நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம். அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர். அல்குர்ஆன் (37 : 100)
குர்பானியின் நோக்கம்:
அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக! அல்குர்ஆன் (22 : 37)
குர்பானி கொடுப்பவர் கடைபிடிக்க வேண்டியவை
நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி) நூற்கள் : முஸ்லிம் (3655), நஸயீ (4285)
கூட்டுக் குர்பானி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஹஜ் மற்றும் உமராவில் ஓர் ஒட்டகத்தில் ஏழு பேர் வீதம் கூட்டுசேர்ந்தோம். அறிவிப்பவர் : ஜாபிர்(ரலி) நூற்கள் : முஸ்லிம்(2325),)
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. ஒரு மாட்டில் ஏழு பேர் வீதமும் ஒரு ஒட்டகத்தில் 10 பேர் வீதமும் நாங்கள் கூட்டுசேர்ந்தோம். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : திர்மிதி (1421), நஸயீ (4316),இப்னு மாஜா (3122)
யார் அறுப்பது
கருப்பு நிறத்தால் நடக்கக்கூடிய கருப்பு நிறத்தால் அமரக்கூடிய கருப்பு நிறத்தால் பார்க்கக்கூடிய கொம்புள்ள ஒரு ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (ஆடு வந்ததும்) ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றார்கள். பிறகு அதை கல்லில் தீட்டு என்றார்கள். நான் அப்படியே செய்தேன். பிறகு கத்தியை வாங்கிக் கொண்டார்கள். ஆட்டை கீழே படுக்க வைத்து அறுத்தார்கள். நூல் : முஸ்லிம் (3637) அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
அழகிய முறையில் அறுப்பது
எல்லாப் பொருட்களின் மீதும் நல்ல முறையில் நடந்து கொள்வதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். நீங்கள் ( பழிக்குப் பழி வாங்கும் போது) கொலை செய்தால் அழகிய முறையில் கொலை செய்யுங்கள். நீங்கள் பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். உங்கள் கத்தியை நீங்கள் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள்! (விரைவாக) அறுப்பதன் மூலம் அதற்கு நிம்மதியைக் கொடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஷிதாத் இப்னு அவ்ஸ்(ரலி), நூற்கள் : முஸ்லிம் (3615), திர்மிதி(1329) நஸயீ(4329), அபூதாவூத் (2432) இப்னுமாஜா (3161), அஹ்மது(16490)
பிராணியை அறுப்பதற்கு முன்பு கூற வேண்டியவை
நபி(ஸல்) அவர்கள் கருப்பும், வெள்ளையும் கலந்த இரண்டு கொம்புள்ள ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள். அதைத் தன் கையால் அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ்(ரலி) நூற்கள் : புகாரி(5565), முஸ்லிம் (3635)
எப்போது அறுக்க வேண்டும்?
இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்குச்) சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுவதற்கு முன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூபுர்தா இப்னு நியார்(ரலி) அவர்கள் (தொழுமுன்) அறுத்து விட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடத்தில்) என்னிடத்தில் முஸின்னாவை விட ஆறுமாத குட்டி உள்ளது. (அதை குர்பானி கொடுக்கலாமா?) என்றார். முன் அறுத்ததற்கு இதை பகரமாக்குவீராக! எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதியில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : பரா(ரலி) நூற்கள் : புகாரி(5560), முஸ்லிம் (3627)
தஷ்ரீகுடைய நாட்களிலும் அறுக்கலாம்.
தஷ்ரீகுடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜுபைர் இப்னு முத்இம்(ரலி) நூல் : தாரகுத்னீ (பாகம் : 4) (பக்கம் : 284)
பங்கிடுதல்
(குர்பானி கொடுத்த பிராணியின் மாமிசத்தை மூன்று பங்கு வைத்து ஒரு பங்கு தனக்காகவும், மற்றொன்று சொந்தக்காரர்களுக்கும், மற்றொன்று ஏழைகளுக்காகவும் கொடுக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸும் இல்லை. தனது தேவைக்குப் போக சொந்தம், ஏழை, யாசிப்பவர்கள் இப்படி யாருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நிர்ணயம் எதுவுமில்லை.)
அவற்றிலிருந்து (குர்பானி பிராணியிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள்! (வறுமையிலும் கையேந்தாமல், இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள். அல்குர்ஆன் (22 : 36)
பலி பிராணிகளின் தோல்கள்.
ஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கும் பொறுப்பை என்னிடம் நபி (ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அதன் மாமிசத்தையும், தோலையும் அதன் மீது கிடந்த(கயிறு, சேனம் போன்ற)வைகளையும் தர்மமாக வழங்குமாறும் உரிப்பவருக்குக் கூலியாக அதில் எதனையும் வழங்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அதற்கான கூலியை நாங்கள் தனியாகக் கொடுப்போம். அறிவிப்பவர் : அலீ(ரலி). நூற்கள் : புகாரி (1716), முஸ்லிம் (2320)
இந்த fileலை download செய்ய இங்கே click செய்யவும்.