அரஃபா நோன்பு மற்றும் குர்பானியின் சட்டங்கள்!

அன்புள்ள சகோதர, சகோதிரிகளே!
இஸ்லாமிய மார்க்கம் நமக்கு பல்வேறு நன்மையான காரியங்களை கடமையாகவும், வலியுறுத்தியும் (சுன்னத்) கூறி அதில் ஏராளமான இம்மை, மறுமை நன்மைகளையும் அவற்றினுள் பொதிய செய்துள்ளது, அது போன்ற இம்மாதத்தில் நமக்கு நன்மைகளை பெற்றுத் தரும் இரு முக்கியமான காரியங்களை இந்த துண்டு பிரசுரத்தின் வாயிலாக காண்போம்!
அரஃபா நாள் நோன்பு
அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1977
துல்ஹஜ் மாதம் பிறை ஒன்பது அன்று ஹாஜிகள் அரஃபா பெருவெளியில் தங்குவார்கள். அதனால் அந்த நாளுக்கு அரஃபா நாள் என்று குறிப்பிடுவர், துல்ஹஜ் மாதம் பிறை பார்த்த கணக்குப்படி ஒன்பதாம் நாளில் நோன்பு நோற்க வேண்டும்.
குர்பானியின் சட்டங்கள்!
இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாகக் கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் சதகத்துல் ஃபித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல், ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்ஹியா எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது.
ஆடு, மாடு, ஒட்டகம், ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது. இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.
இப்ராஹீம் நபியவர்கள் தமது மகனைப் பலியிடுவதாகக் கனவு கண்டு அதை நிறைவேற்ற முயலும் போது, இறைவன் அதைத் தடுத்து நிறுத்தி ஓர் ஆட்டைப் பலியிடச் செய்தான். இந்த வரலாறு 37வது அத்தியாயம் 102 முதல் 108 வரையிலான வசனங்களில் கூறப்பட்டுள்ளது. அதன் இறுதியில் “பின்வரும் மக்களிடையே இந்த நடைமுறையை நாம் விட்டு வைத்தோம்” எனக் கூறப்படுகின்றது.
அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு அளித்ததற்காக அறியப்பட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்! அல்குர்ஆன் 22:28
இந்த வசனத்தில் குர்பானிக்கான பிராணிகளைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் பொழுது அன்ஆம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றான். அன்ஆம் என்றால் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளையும் குறிக்கும். எனவே ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றையே குர்பானி கொடுக்க வேண்டும்.
குர்பானியின் நோக்கம்
அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக! அல்குர்ஆன் (22 : 37)
குர்பானி கொடுப்பவர் கடைபிடிக்க வேண்டியவை
நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி) நூற்கள் : முஸ்லிம் (3655), நஸயீ (4285)
கூட்டுக் குர்பானி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஹஜ் மற்றும் உமராவில் ஓர் ஒட்டகத்தில் ஏழு பேர் வீதம் கூட்டுசேர்ந்தோம். அறிவிப்பவர் : ஜாபிர்(ரலி) நூற்கள் : முஸ்லிம்(2325),)
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. ஒரு மாட்டில் ஏழு பேர் வீதமும் ஒரு ஒட்டகத்தில் 10 பேர் வீதமும் நாங்கள் கூட்டுசேர்ந்தோம். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : திர்மிதி (1421), நஸயீ (4316),இப்னு மாஜா (3122)
யார் அறுப்பது
கருப்பு நிறத்தால் நடக்கக்கூடிய கருப்பு நிறத்தால் அமரக்கூடிய கருப்பு நிறத்தால் பார்க்கக்கூடிய கொம்புள்ள ஒரு ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (ஆடு வந்ததும்) ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றார்கள். பிறகு அதை கல்லில் தீட்டு என்றார்கள். நான் அப்படியே செய்தேன். பிறகு கத்தியை வாங்கிக் கொண்டார்கள். ஆட்டை கீழே படுக்க வைத்து அறுத்தார்கள். நூல் : முஸ்லிம் (3637) அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
அழகிய முறையில் அறுப்பது
எல்லாப் பொருட்களின் மீதும் நல்ல முறையில் நடந்து கொள்வதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். நீங்கள் ( பழிக்குப் பழி வாங்கும் போது) கொலை செய்தால் அழகிய முறையில் கொலை செய்யுங்கள். நீங்கள் பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். உங்கள் கத்தியை நீங்கள் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள்! (விரைவாக) அறுப்பதன் மூலம் அதற்கு நிம்மதியைக் கொடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஷிதாத் இப்னு அவ்ஸ்(ரலி) நூற்கள் : முஸ்லிம் (3615), திர்மிதி(1329) நஸயீ(4329), அபூதாவூத் (2432) இப்னுமாஜா (3161), அஹ்மது(16490)
பிராணியை அறுப்பதற்கு முன்பு கூற வேண்டியவை
நபி(ஸல்) அவர்கள் கருப்பும், வெள்ளையும் கலந்த இரண்டு கொம்புள்ள ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள். அதைத் தன் கையால் அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ்(ரலி) நூற்கள் : புகாரி(5565), முஸ்லிம் (3635)
எப்போது அறுக்க வேண்டும்?
இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்குச்) சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுவதற்கு முன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூபுர்தா இப்னு நியார்(ரலி) அவர்கள் (தொழுமுன்) அறுத்து விட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடத்தில்) என்னிடத்தில் முஸின்னாவை விட ஆறுமாத குட்டி உள்ளது. (அதை குர்பானி கொடுக்கலாமா?) என்றார். முன் அறுத்ததற்கு இதை பகரமாக்குவீராக! எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதியில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : பரா(ரலி) நூற்கள் : புகாரி(5560), முஸ்லிம் (3627)
தஷ்ரீகுடைய நாட்களிலும் அறுக்கலாம்.
தஷ்ரீகுடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜுபைர் இப்னு முத்இம்(ரலி) நூல் : தாரகுத்னீ (பாகம் : 4) (பக்கம் : 284)
பங்கிடுதல்
(குர்பானி கொடுத்த பிராணியின் மாமிசத்தை மூன்று பங்கு வைத்து ஒரு பங்கு தனக்காகவும், மற்றொன்று சொந்தக்காரர்களுக்கும், மற்றொன்று ஏழைகளுக்காகவும் கொடுக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸும் இல்லை. தனது தேவைக்குப் போக சொந்தம், ஏழை, யாசிப்பவர்கள் இப்படி யாருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நிர்ணயம் எதுவுமில்லை.)
அவற்றிலிருந்து (குர்பானி பிராணியிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள்! (வறுமையிலும் கையேந்தாமல், இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள். அல்குர்ஆன் (22 : 36)
பலி பிராணிகளின் தோல்கள்.
ஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கும் பொறுப்பை என்னிடம் நபி (ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அதன் மாமிசத்தையும், தோலையும் அதன் மீது கிடந்த(கயிறு, சேனம் போன்ற)வைகளையும் தர்மமாக வழங்குமாறும் உரிப்பவருக்குக் கூலியாக அதில் எதனையும் வழங்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அதற்கான கூலியை நாங்கள் தனியாகக் கொடுப்போம்.
அறிவிப்பவர் : அலீ(ரலி). நூற்கள் : புகாரி (1716), முஸ்லிம் (2320)
இது போன்ற கணக்கிட முடியாத நன்மைகளை பெற்றுத் தரும் அமல்களை அதற்கான உரிய தருணத்தில் கடைபிடித்து இம்மையிலும், மறுமையிலும் பயன்களை பெற்றுக் கொள்வோமாக!
இந்த fileயை download செய்ய இங்கே கிளிக் செய்யவும்