திருக்குர்ஆனின் சிறப்புகள்

வல்ல ரஹ்மான் இறக்கியருளிய திருக்குர்ஆனைப் பற்றியும் அதன் சிறப்புகளைப் பற்றியும் இக்குர்ஆனை வேதமாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் பலர் தெரியாமல் இருக்கின்றார்கள். போலியான மதங்களில் இருப்பவர்கள் கூட தங்களுடைய வேதத்தைப் பற்றி அறிந்து அதன் படி செயல்படுகிறார்கள். ஆனால் முஸ்லிம்களோ பெயர் தாங்கிகளாக இருந்து வருகின்றார்கள்.

இன்னும் சிலர் “குர்ஆன் என்றால் அதை ஓர் உறையில் போட்டுப் பத்திரமாக ஓரிடத்தில் வைக்க வேண்டும்; இறந்தவர்களுக்காக ஃபாத்திஹா ஓதும் போது மட்டும் அதைப் பயன்படுத்த வேண்டும்” என்று தவறாக விளங்கி வைத்திருக்கின்றார்கள். எனவே முஸ்லிம்களுக்கே குர்ஆனைப் பற்றி விளக்க வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கின்றோம்.

குர்ஆன் என்பது உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டு வதற்காக இறைவனால் நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட வேதமாகும். இதை அல்லாஹ் தனது திருமறையில் கூறும் போது,

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். (அல்குர்ஆன் 2:185)

இந்தக் குர்ஆன் நேரானதற்கு வழி காட்டுகிறது. “நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய் வோருக்கு பெரிய கூலி உள்ளது” என்று நற்செய்தியும் கூறுகிறது. (அல்குர்ஆன் 17:9)

(பொய்யையும் உண்மையையும்) பிரித்துக் காட்டும் வழி முறையை அகிலத்தாருக்கு எச்சரிக்கை செய்யக் கூடியதாக தனது அடியார் மீது அருளியவன் பாக்கியமானவன். (அல்குர்ஆன் 25:1)

இந்தக் குர்ஆனுக்கு இன்னும் பல சிறப்புகள் இருக்கின்றன.

இந்த உலகத்தில் எந்த ஒரு நன்மையையும் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அதற்காக சில கஷ்டங்களை அனுபவித்த பிறகே அதன் பலனை அனுபவிக்க முடிகின்றது. ஆனால் அவை எல்லாமே இந்த உலகத்துடன் அழிந்து போய் விடுகின்றன. எந்த அளவிற்கு என்றால், ஒரு சில காரியங்களை நாம் மிகவும் சிரமப்பட்டுச் செய்கின்றோம். ஆனால் அதன் பலன் ஒரு மணி நேரத்திலோ, ஒரு நாளிலோ அல்லது ஒரு மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திலோ முடிந்து விடுகின்றது. இந்த அளவிற்குத் தான் அதன் பலன்கள் நிலையற்றவையாக உள்ளன.

ஆனால் நிலையானதும், மிகவும் எளிதாக நன்மையைப் பெற்றுத் தருவதுமான செயல் ஒன்று இருக்கும் என்றால் அது வல்ல ரஹ்மானின் திருமறைக் குர்ஆனை ஓதுவதில் தான் இருக்கும். இந்தக் குர்ஆனை ஓதுவதற்காக நாம் எந்த ஒரு சிரமத்தையும் மேற்கொள்ளத் தேவையில்லை.

அதாவது தொழுகை என்ற வணக்கத்தை எடுத்துக் கொண்டால் குறிப்பிட்ட நேரத்தில் தொழ வேண்டும்; உளூச் செய்ய வேண்டும்; ஆண்களாகயிருந்தால் பள்ளிக்குச் சென்று ஜமாஅத்துடன் தொழ வேண்டும் என்ற நிபந்தனைகள் இருக்கின்றன. இதன் அடிப்படையில் செய்தால் தான் தொழுகையின் முழுமையான நன்மைகளை அடைய முடியும்.

குர்ஆன் ஓதுவதைப் பொறுத்த வரையில் இது போன்ற எந்த ஒரு நிபந்தனையும் இல்லை. இருந்த இடத்தில் இருந்து கொண்டே அதிகமான நன்மைகளை அள்ளி விடலாம். இது தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கூறிய சில பொன்மொழிகளைப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு! ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும். அலிஃப், லாம், மீம்என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக, அலிஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்அறிவிப்பாளர் : இப்னுமஸ்ஊத் (ரலி), நூல் : திர்மிதி 2910

இன்றைய முஸ்லிம்களைப் பொறுத்த வரை, குரங்கு கையில் பூமாலை என்பது போன்று இந்தக் குர்ஆனுடைய அருமை, பெருமை தெரியாமல் இருக்கின்றார்கள். தங்களுடைய நேரங்களை இது போன்ற நல்ல வழியில் செலவழிக்காமல் பொய், புறம், கோள், அவதூறு பேசியே நேரத்தை வீணடிக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல், இந்த உலக வாழ்க்கைக்காக என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் சிரமம் பார்க்காமல் செய்கின்றார்கள். உதாரணமாக ஒரு வேலை வேண்டும் என்றால் அதற்காகப் பல மனிதர்களை சிபாரிசுக்காகத் தேடி அலைகின்றார்கள். நிலையற்ற உலகிற்கு இப்படி முயற்சி செய்கின்றார்கள். ஆனால் நிலையான மறுமை வாழ்க்கைக்கு சிபாரிசாக வரக் கூடிய குர்ஆனை மறந்து விடுகின்றார்கள். இதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும் போது,

நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது மறுமை நாளில் அதைச் சார்ந்தவருக்குப் பரிந்துரையாக வரும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி), நூல் : முஸ்லிம் 804

இரு கூலி அடைபவர்கள்

 “குர்ஆனை நன்கு மனனம் செய்து தங்கு தடையின்றி சரளமாக ஓதுபவர் இறைவனுக்குக் கட்டுப்பட்ட கண்ணியமிக்க வானவத் தூதர்களுடன் இருக்கின்றார். சிரமம் மேற்கொண்டு தட்டுத் தடுமாறி ஓதுபவருக்கு இரு கூகள் இருக்கின்றன என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் 798

நம்மில் சிறந்தவர்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் சிறந்தவர் யார் என்றால், யார் குர்ஆனைத் தானும் கற்று, பிறருக்கும் கற்றுக் கொடுக்கின்றாரோ அவர் தான். அறிவிப்பாளர் : உஸ்மான் (ரலி), நூல் : புகாரி 5027

அல்லாஹ்வின் அருள்

குர்ஆனை ஓதும் போது நன்மைகள் கிடைப்பது போன்று பிறர் ஓதுவதைக் கேட்கும் போதும் நன்மை கிடைக்கும்.

குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப் படுவீர்கள்! (அல்குர்ஆன் 7:204)

ஷைத்தானை விரட்டும் மருந்து

உலகில் பிறந்த அனைவருக்கும் பாதுகாப்பு என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக ஷைத்தானை விட்டு பாதுகாப்புப் பெறுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். அவன் எல்லா நேரத்திலும் மனிதனை ஆட்டிப் படைப்பதில் குறிக்கோளாய் இருப்பான். உதாரணமாகச் சொல்வதென்றால், ஒரு மனிதனுக்கு நிம்மதியைப் பெற்றுத் தரக் கூடிய தூக்கத்திலும் கெட்ட கனவை ஏற்படுத்தி, அதன் மூலம் நம்முடைய நிம்மதியைக் கெடுப்பான். இது போன்ற ஷைத்தானுடைய தீங்குகளை விட்டும் பாதுகாக்கக் கூடியதாக குர்ஆன் வசனம் அமைந்துள்ளது.

 நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸியை ஓதுங்கள். உங்களுடன் ஒரு பாதுகாவலர் (வானவர்) இருந்து கொண்டே இருப்பார். காலை வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 3275

அழகிய உதாரணத்துக்குரியவர்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று! வாசனையும் நன்று! (நல்லவராக இருந்து) குர்ஆன் ஓதாமல் இருப்பவர், பேரீச்சம் பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று; அதற்கு வாசனை கிடையாது. தீயவனாகவும் இருந்து கொண்டு குர்ஆனை ஓதி வருகின்றவனின் நிலை துளசிச் செடியின் நிலையை ஒத்து இருக்கின்றது. அதன் வாசனை நன்று, சுவையோ கசப்பு! தீமையும் செய்து கொண்டு குர்ஆனையும் ஓதாமல் இருப்பவனின் நிலை குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் சுவையும் கசப்பு, அதற்கு வாசனையும் கிடையாது.  அறிவிப்பாளர் :அபூ மூஸல் அஷ்அரீ (ரலி), நூல் : புகாரி 5020

இது போன்று ஏராளமான சிறப்புக்கள் திருக்குர்ஆனுக்கு இருக்கின்றன. நாம் அனைவரும் அதன் சிறப்புக்களை உணர்ந்து செயல்பட வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக!

இந்த fileயை download செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Posts

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

மனிதனை அழகிய படைப்பாக்கிய அல்லாஹ், மனிதன் மீது அளவுகடந்த அன்பும் இரக்கமும் கருணையும் கொண்டுள்ளான். இம்மையிலும் மறுமையிலும் மனிதன் வெற்றி பெற்றிட வேண்டும் என்பதற்காக, அதற்கு தேவையான இறை நேர்வழிகாட்டலையும் வகுத்தளித்திருக்கின்றான். குறிப்பாக, ரமளான் மாதத்திற்கென்று கூடுதல்…

நபிகளாரின் எளிமை!

நபிகளாரின் எளிமை!

உலகில் எத்தனையோ தலைவர்கள் தோன்றி மறைகிறார்கள். அவர்கள், மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் போதும், பொது மேடைகளில் பேசும் போதும் பல உதாரணங்களை சொல்லி எளிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். ஆனால் அவர்கள் தம்முடைய சொந்த வாழ்க்கையில்…

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

அகில உலகைப் படைத்த இறைவன், மனிதப் படைப்புகளை பிற உயிரினங்களைவிட மேன்மையாக வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்களாகப் படைத்திருக்கின்றான். நீதி செலுத்துவதற்கும், சமத்துவம் பேணப்படுவதற்கும், எவ்வாறு வாழ்வியல் வழிகாட்டியாக கற்றுத் தந்திருக்கின்றானோ அதன் அடிப்படையில் மனித சமுதாயம் தங்களின்…

பிறர் நலன் நாடுவோம்!!!

பிறர் நலன் நாடுவோம்!!!

இஸ்லாம் என்பது இறை மார்க்கம். மனிதன் அமைதியாக வாழ வேண்டும்; நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அனைத்தும் அறிந்த ஏக இறைவனால் வழிமுறைகள் வகுக்கப்பட்ட மார்க்கம். இத்தகைய இஸ்லாமிய மார்க்கம், மனித சமுதாயம் எப்போதும் சிறப்பாக இயங்குவதற்குத்…

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

நல்லொழுக்கமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவோருக்கு சுய கட்டுப்பாடு அவசியமான ஒன்றாகும். நீரில்லா உலகை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ அதுபோல சுய கட்டுப்பாடின்றி நல்லொழுக்கமுள்ள வாழ்வைக் கற்பனை செய்ய முடியாது. சுய கட்டுப்பாடு என்பது ஒருவர் அவசியமற்ற…

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ரபீஉல் அவ்வல் மாதம் பிறந்து விட்டால் மவ்லிது கச்சேரிகள் களை கட்ட ஆரம்பித்து விடுகின்றன. மஃரிப் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசல்களிலும் மற்றும் வீடுகளிலும் முதல் பத்து நாட்கள் சுப்ஹான மவ்லிதுகளை பக்திப் பரவசத்தோடு அதை நன்மை எனக்…