குர்ஆனை ஓதுவோம்
முன்னுரை
அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த நற்செயல்களைச் செய்யும் போது ஏராளமான நன்மைகளை அல்லாஹ் பரிசாக வழங்குகின்றான். இந்த நன்மைகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்று குர்ஆனை ஓதுவது.
நாங்கள் பள்ளியின் திண்ணையில் இருக்கும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். “உங்களில் ஒருவர் பாவத்திலும் உறவைத் துண்டிப்பதிலும் ஈடுபடா வண்ணம், புத்ஹான் அல்லது அகீக் என்ற இடத்திற்குச் சென்று கொழுத்த திமில் உடைய இரு பெண் ஒட்டகங்களைக் கொண்டு வர விரும்புவாரா?” என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள் “அல்லாஹ்வின் தூதரே! அதை நாங்கள் விரும்புகின்றோம்” என்று பதிலளித்தோம். “உங்களில் ஒருவர் அதிகாலையில் பள்ளிக்குச் சென்று மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரண்டு வசனங்களை விளங்கவோ அல்லது ஓதவோ கூடாதா? அவ்வாறு சென்று இரு வசனங்களை ஓதுவது இரு பெண் ஒட்டகங்களை விடவும் சிறந்தது. மூன்று வசனங்கள் மூன்று பெண் ஒட்டகங்களை விடச் சிறந்தது. நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களை விடச் சிறந்தது. இந்த அளவுக்கு வசனங்கள் இதே அளவுக்கு ஆண் ஒட்டகங்களை விடச் சிறந்தது” என்று சொன்னார்கள். அறி : உக்பா பின் ஆமிர் (ரலி), நூல் : முஸ்லிம்:1469
ஓதுபவருக்கு உவமை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று! வாசனையும் நன்று! (நல்லவராக இருந்து) குர்ஆன் ஓதாமல் இருப்பவர், பேரீச்சம்பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று அதற்கு வாசனை கிடையாது. தீயவனாகவும் இருந்து கொண்டு குர்ஆனை ஓதிவருகின்றவனின் நிலை துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் வாசனை நன்று, சுவையோ கசப்பு! தீமையும் செய்து கொண்டு குர்ஆனையும் ஓதாமல் இருப்பவனின் நிலை குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் சுவையும் கசப்பு, அதற்கு வாசனையும் கிடையாது. அறி : அபூமூஸல் அஷ்அரீ (ரலி), நூல் : புகாரி (5020)
பொறாமைப்படுதல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது.
- ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதனை அவர் இரவு நேரங்களில் ஓதி வழிபடுகின்றார்.
- இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அளித்துள்ளான். அவர் அதனை இரவு, பகல் எல்லா நேரங்களிலும் தானம் செய்கின்றார். அறி :அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல் : புகாரி (5025)
குர்ஆனை ஓதும் தொடர்பை விட்டுவிட கூடாது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“இன்ன இன்ன (குர்ஆன்) வசனங்களை நான் மறந்துவிட்டேன்” என்று ஒருவர் கூறுவது தான் அவரின் வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தையாகும். வேண்டுமானால், “மறக்கவைக்கப்பட்டுவிட்டது” என்று அவர் கூறட்டும்! குர்ஆனைத் தொடர்ந்து (ஓதி) நினைவுபடுத்திவாருங்கள். ஏனெனில், (கயிற்றில் கட்டிவைக்கப்பட்டிருக்கும் ஒட்டகம் முதலான) கால்நடைகள் அதன் கயிற்றிலிருந்து தப்பி ஓடுவதைவிட மிக வேகமாகக் குர்ஆன் மனிதர்களின் நெஞ்சங்களிலிருந்து தப்பிவிடக் கூடியதாகும். அறி :அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) முஸ்லிம்:1446
சூழ்கின்ற அருட்கொடையும் சுற்றி நிற்கும் வானவர் படையும்
மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக்கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூருகிறான். அறி : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்:5231
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யார் இரவின் இறுதியில் எழ முடியாது என அஞ்சுகிறாரோ அவர் (முதலில்) வித்ர் தொழுதுவிட்டுப் பிறகு உறங்கட்டும்! இரவில் தம்மால் எழ முடியும் என உறுதியாக நம்புகின்றவர் அதன் இறுதியில் வித்ர் தொழட்டும்! ஏனெனில், இரவின் இறுதி நேரத்தில் குர்ஆன் ஓதும்போது (வானவர்கள்) பங்கேற்கின்றனர். இதுவே சிறந்ததாகும். அறி :ஜாபிர் (ரலி), நூல் : முஸ்லிம்:1381
இந்தச் செய்திகளின் அடிப்படையில் குர்ஆனை அதிகமதிகம் ஓதி நன்மையை அடைவோமாக!
இந்த fileயை download செய்ய இங்கே கிளிக் செய்யவும்