நபி வேறு, ரசூல் வேறா ?
வேதத்தையும் ஞானத்தையும் வழங்கியிருக்கின்றேன் என்று இறைவன் கூறுகின்றான். இரண்டும் வெவ்வேறு என்றால் “முஹம்மது அல்லாஹ்வுடைய தூதராகவும் நபிமார்களுக்கு முத்திரையாகவும் இருக்கிறார்” என்ற வசனத்தின் படி தூதர் வேறு, நபி வேறு என்று பொருள் கொள்ளலாமா?
திருக்குர்ஆனில் பல இடங்களில் “வேதத்தையும் ஞானத்தையும்’ என்று “உம்மைப் பொருள்”பயன்படுத்தப் படுவதால் வேதம் வேறு, ஞானம் வேறு என்று நாம் கூறி வருவது உண்மை தான். வேதத்துக்கு நபிமார்கள் அளித்த விளக்கம் தான் ஞானம் என்று நாம் கூறி வருகின்றோம்.
முஹம்மது அல்லாஹ்வுடைய தூதராகவும் நபிமார்களுக்கு முத்திரையாகவும் இருக்கின்றார். (அல்குர்ஆன் 33:40) என்ற வசனத்திலும் தூதராகவும் முத்திரையாகவும் என்று “உம்மைப் பொருள்’ பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இங்கேயும் தூதர் வேறு நபி வேறு என்று பொருள் கொள்ளலாமா? என்று இரண்டையும் ஒப்பிட்டுக் கேட்டுள்ளீர்கள்.
இரண்டுக்கும் இடையேயுள்ள மிக முக்கியமான வேறுபாட்டை நீங்கள் கவனிக்காததால் இவ்வாறு கேட்டுள்ளீர்கள். வேறுபாட்டை விளங்கிக் கொண்டால் இது போன்ற கேள்விகளைக் கேட்க முடியாது.
இதைப் புரிந்து கொள்வதற்காக பின்வரும் இரண்டு வாக்கியங்களைக் கவனியுங்கள்.
1. சாதிக்கும் ஸாஜிதும் வந்தனர்.
2. சாதிக் சிவப்பாகவும் ஒல்லியாகவும் இருக்கின்றான்.
இவ்விரண்டு வாக்கியங்களிலும் “உம்மைப் பொருள்’ தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் வாக்கியத்தில் சாதிக் வேறு, ஸாஜித் வேறு என்று புரிந்து கொள்கின்றீர்கள்.
இரண்டாவது வாக்கியத்திலும் “உம்மைப் பொருள்’ பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சிவப்பாக ஒரு சாதிக்கும், ஒல்லியாக இன்னொரு சாதிக்கும் வந்தார்கள் என்று யாரும் புரிந்து கொள்ள மாட்டோம். ஒரே நபர் தான் வந்தார். நிறத்தைக் கவனித்து சிவப்பாகவும் பருமனைக் கவனித்து ஒல்லியாகவும் அவர் இருக்கின்றார் என்று புரிந்து கொள்கின்றோம்.
இவ்வாறு வித்தியாசப்படுவது ஏன்? பேசப்படும் பொருட்கள் பல இருக்கும் போது அங்கே “உம்மைப் பொருள்’ பயன்படுத்தப்பட்டால் பல பொருட்கள் இருப்பதைக் குறிக்க அது உதவும்.
ஒரு பொருளின் பல தன்மைகளைப் பற்றிப் பேசும் போது இவ்வாறு குறிப்பிட்டால் வேறு வேறு என்று காட்டாது. மாறாக ஒரே பொருளில் அத்தனை தன்மைகளும் உள்ளன என்ற கருத்து வரும். இது தான் எல்லா மொழிகளிலும் உள்ள நிலை.
நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள வசனத்தில் முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றித் தான் கூறப்பட்டுள்ளது. அவர்களிடம் ரசூல் என்ற தன்மையும் நபி என்ற தன்மையும் உள்ளது என்பது தான் இதன் கருத்தாகும். இந்த இரண்டு தன்மைகளுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, பிரிக்க முடியாதவை என்பதற்கு குர்ஆனில் ஏராளமான சான்றுகள் உள்ளன என்பது தனி விஷயம்.
ஆனால் “வேதத்தையும் ஞானத்தையும்’ என்று குறிப்பிடும் வசனங்களில் இரண்டு தனித்தனி பொருட்களைப் பற்றி கூறப்படுகின்றன. “சாதிக்கும் ஸாஜிதும் வந்தனர்’ என்ற உதாரணத்தைப் போன்று இந்த வசனங்கள் அமைந்துள்ளன. எனவே இரண்டும் வெவ்வேறு தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
Sorce: onlinepj.com