இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்!

ஏக இறைவனின் திருப் பெயரால்…

இன்று உலகில், தீவிரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம், பயங்கரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம் என்றளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் பெயர் களங்கடிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் வெட்டுக்குத்து, வெடிகுண்டு என்பது போல் அதன் தோற்றம் கறைப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் கலவரம், முஸ்லிம் என்றால் கலகக்காரன் என்றளவுக்கு இஸ்லாத்தின் முகம் கோரமாகச் சிதைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் உண்மையில் இஸ்லாம் தனது பெயரிலும், கொள்கையிலும், செயல்பாட்டிலும் அமைதியை மையமாகக் கொண்டது. அதன் முகமும் அகமும் சாந்தியை அடிப்படையாகக் கொண்டது. இஸ்லாம் என்ற வார்த்தையின் வேர்ச்சொல் ஸலாம் என்பதாகும். ஸலாம் என்றால் அமைதி அடைதல், பாதுகாப்புப் பெறுதல் என்பது இதன் பொருள். இஸ்லாம் என்றால் சரணடைதல், கட்டுப்படுதல் என்று பொருள்.

அதாவது படைத்த ஓர் இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்படுவதை இது குறிக்கின்றது. இதன்படி, படைத்த ஓர் இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்பவர் முஸ்லிம் ஆவார். பெயர் அடிப்படையில் இஸ்லாம் வன்முறைக்கு அப்பாற்பட்டது; அந்நியப்பட்டது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமையோ, பிற சமுதாயத்தவரையோ சந்திக்கும் போது கூறுகின்ற முகமன், “அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பதாகும். பதிலுக்கு அவர், “வ அலைக்கும் ஸலாம்’ என்று கூறுவார். இந்த இரண்டு வாசகங்களுக்கும் பொருள், “உங்கள் மீது அமைதி நிலவட்டுமாக!’ என்பதாகும்.

முகத்துக்கு நேராகச் சந்திக்கும் போதும், மறைமுகமாக தொலைபேசி, இணையதளம் போன்ற ஊடகங்களின் வழியாகவும் தெரிவிக்கின்ற வாழ்த்துக்களில் முஸ்லிம்கள் பரப்புவது இந்த அமைதியைத் தான்.

இஸ்லாத்தில் சிறந்த செயல் எது? என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்படுகின்றது. அதற்கு அவர்கள் அளிக்கின்ற பதிலைப் பாருங்கள்.

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது’ எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும், நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் (முகமன்) கூறுவதுமாகும்” என்று பதிலளித்தார்கள். நூல்: புகாரி 12

இஸ்லாத்தில் சிறந்தது எது என்ற கேள்விக்கு முதலாவதாக, பசித்தோருக்கு உணவளித்தல் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில் கூறுகின்றார்கள். இதில் முஸ்லிம், முஸ்லிமல்லாதவர் என்ற பாரபட்சம் இல்லை.

இரண்டாவதாக, முஸ்லிம், பிற மதத்தவர் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் ஸலாம் எனும் வாழ்த்தைக் கூறி அமைதியைப் பரப்பச் சொல்கின்றார்கள்.

ஒருவர் தனக்குக் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இருப்பார். அவரை நோக்கி, ‘உங்கள் மீது அமைதி உண்டாகட்டும்’ என்று கூறச் சொல்கின்றது. ஒருவர் தனது குழந்தை இறந்து விட்ட சோகத்தில் இருப்பார். அவரிடமும், “உங்கள் மீது அமைதி உண்டாகட்டும்” என்று கூறச் சொல்கின்றது. இப்படி இன்பம், துன்பம் என எந்த நிலையில் இருந்தாலும் அனைவர் மீதும் ஸலாம் எனும் அமைதியைப் பரப்பச் சொல்கின்றது இஸ்லாமிய மார்க்கம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கை என்பது “எழுபதுக்கும் அதிகமான’ அல்லது “அறுபதுக்கும் அதிகமான’ கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை’ என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறை நம்பிக்கையின் ஒரு கிளைதான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்லிம் 51

மக்களுக்கு ஊறு விளைவிக்கின்ற பொருட்களைப் பாதையிலிருந்து அகற்றுவதும் அந்த இறை நம்பிக்கையின் ஒரு கிளை என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

ஒரு பாதையில் முஸ்லிம்கள் மட்டும் நடக்க மாட்டார்கள். அனைத்து மதத்தினரும் தான் நடப்பார்கள். அவர்களுடைய கால்களைப் பதம் பார்த்து, புண்ணாக்கி, புறையோடச் செய்து அவர்களது உயிர்களுக்கே உலை வைக்கின்ற கல், முள் போன்றவற்றைப் பாதையிலிருந்து அகற்றுவது முஸ்லிம்களின் இறை நம்பிக்கையின் ஓரம்சம் என்று இஸ்லாம் கூறுகின்றது. அதாவது, ஒரு முஸ்லிமின் அடிப்படைக் கொள்கையே மற்றவர்களை இன்னல், இடையூறுகளிலிருந்து பாதுகாப்பது தான் என்று இஸ்லாம் குறிப்பிடுகின்றது.

காலைப் பதம் பார்க்கின்ற கல், முள்ளையே அகற்றச் சொல்லும் இஸ்லாம், ஆளையே கொல்லுகின்ற குண்டுகளை வைக்கச் சொல்லுமா என்று நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து) விட்டார். அவரது இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்கலிருந்து) மன்னிப்பு வழங்கினான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி 2472

இப்படிப் பாதையிலிருந்து கற்கள், முற்களை அகற்றுவதற்காக ஒரு முஸ்லிமுக்கு இறைவன் சொர்க்கத்தைப் பரிசாக வழங்குகின்றான் என்றால், பேருந்துகள், இரயில்கள், விமானம் போன்ற போக்குவரத்துக்களிலும் அவை வந்து நிற்கும் நிலையங்களிலும், மக்கள் குழுமுகின்ற வணிக வளாகங்களிலும், அவர்கள் பயணிக்கின்ற பாதைகளிலும் குண்டு வைத்துக் குலை நடுங்கச் செய்யும் ஒருவனுக்கு இந்தக் கருணைமிகு இறைவன் என்ன தண்டனை வழங்குவான்? நிச்சயமாக நரகத்தைத் தான் தண்டனையாக வழங்குவான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதுதான் முஸ்லிம்களின் சரியான நிலைப்பாடாகும்.

ஒரு முஸ்லிமின் செயல்பாடு பிறருக்கு உதவியாகத் தான் இருக்க வேண்டுமே தவிர ஒருபோதும் உபத்திரமாக, ஊறு விளைவிப்பதாக இருக்கக் கூடாது என்பதை மேற்கண்ட இஸ்லாமிய போதனைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி 6018

அண்டை வீட்டுக்காரர் முஸ்லிமாகவும் இருக்கலாம்; முஸ்லிம் அல்லாதவராகவும் இருக்கலாம். மொத்தத்தில் அண்டை வீட்டுக்காரருக்கு இடையூறு செய்யக்கூடாது என்று பொதுவாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

இந்த அளவுக்கு இஸ்லாம் தெளிவாகக் கூறியிருந்தும், இதற்கு நேர்மாற்றமாக முஸ்லிம், முஸ்லிமல்லாதோர் எனப் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் எதிராக, பொது இடங்களிலும் மக்கள் கூடும் சந்தைகளிலும் குண்டு வைப்பவன் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும்? அத்தகையோர் இஸ்லாத்தின் பார்வையில் ஒருபோதும் முஸ்லிம்கள் அல்லர்.

இறைவனுக்குப் பல அழகான பெயர்கள் உள்ளன. அவற்றில் “ஸலாம்’ என்பதும் ஒன்று. இதன் பொருள் அமைதியானவன் என்பதாகும். இறைவனின் திருப்பெயரும் அமைதியானவன் என்று அமையப் பெற்றிருக்கும் போது அமைதியான அந்த இறைவன் இந்த அமளி துமளிகளை எப்படி ஆதரிப்பான்?

அல்லாஹ் அமைதி இல்லத்திற்கு அழைக்கிறான். தான் நாடியோருக்கு நேரான பாதையைக் காட்டுகிறான். அல்குர்ஆன் 10:25

மொத்தத்தில் இஸ்லாம் என்றால் பிறருடைய உயிருக்கும், உடமைக்கு உத்தரவாதம் பாதுகப்பு அளிக்க சொல்லி அமைதியை மட்டும் போதிக்கும் மார்க்கமாக உள்ளது!

பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை என்ற கருத்தை அனைவரும் ஏற்கின்றனர். அந்த அடிப்படையில், முஸ்லிம் பெயர் தாங்கிகள் செய்கின்ற பயங்கரவாதச் செயல்களுக்கு முஸ்லிம் சமுதாயமோ, இஸ்லாமிய மார்க்கமோ பொறுப்பாகாது என்பதைத் தொப்புள்கொடி உறவுகளான பிறமத சகோதரர்கள் புரிந்து அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ்வோமாக. (இறைவன் நாடினால்)

வெளியீடு:-

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)

இந்த துண்டு பிரசுரத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்…

Related Posts

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

மனிதனை அழகிய படைப்பாக்கிய அல்லாஹ், மனிதன் மீது அளவுகடந்த அன்பும் இரக்கமும் கருணையும் கொண்டுள்ளான். இம்மையிலும் மறுமையிலும் மனிதன் வெற்றி பெற்றிட வேண்டும் என்பதற்காக, அதற்கு தேவையான இறை நேர்வழிகாட்டலையும் வகுத்தளித்திருக்கின்றான். குறிப்பாக, ரமளான் மாதத்திற்கென்று கூடுதல்…

நபிகளாரின் எளிமை!

நபிகளாரின் எளிமை!

உலகில் எத்தனையோ தலைவர்கள் தோன்றி மறைகிறார்கள். அவர்கள், மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் போதும், பொது மேடைகளில் பேசும் போதும் பல உதாரணங்களை சொல்லி எளிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். ஆனால் அவர்கள் தம்முடைய சொந்த வாழ்க்கையில்…

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

அகில உலகைப் படைத்த இறைவன், மனிதப் படைப்புகளை பிற உயிரினங்களைவிட மேன்மையாக வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்களாகப் படைத்திருக்கின்றான். நீதி செலுத்துவதற்கும், சமத்துவம் பேணப்படுவதற்கும், எவ்வாறு வாழ்வியல் வழிகாட்டியாக கற்றுத் தந்திருக்கின்றானோ அதன் அடிப்படையில் மனித சமுதாயம் தங்களின்…

பிறர் நலன் நாடுவோம்!!!

பிறர் நலன் நாடுவோம்!!!

இஸ்லாம் என்பது இறை மார்க்கம். மனிதன் அமைதியாக வாழ வேண்டும்; நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அனைத்தும் அறிந்த ஏக இறைவனால் வழிமுறைகள் வகுக்கப்பட்ட மார்க்கம். இத்தகைய இஸ்லாமிய மார்க்கம், மனித சமுதாயம் எப்போதும் சிறப்பாக இயங்குவதற்குத்…

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

நல்லொழுக்கமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவோருக்கு சுய கட்டுப்பாடு அவசியமான ஒன்றாகும். நீரில்லா உலகை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ அதுபோல சுய கட்டுப்பாடின்றி நல்லொழுக்கமுள்ள வாழ்வைக் கற்பனை செய்ய முடியாது. சுய கட்டுப்பாடு என்பது ஒருவர் அவசியமற்ற…

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ரபீஉல் அவ்வல் மாதம் பிறந்து விட்டால் மவ்லிது கச்சேரிகள் களை கட்ட ஆரம்பித்து விடுகின்றன. மஃரிப் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசல்களிலும் மற்றும் வீடுகளிலும் முதல் பத்து நாட்கள் சுப்ஹான மவ்லிதுகளை பக்திப் பரவசத்தோடு அதை நன்மை எனக்…