TNTJ ரியாத் மண்டலத்தின் இரத்ததான சேவையை பாராட்டி சான்றிதழ்!
சவுதி அரேபியா சுகாதார துறையின் கீழ் செயல்படும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனை மூலமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் கடந்த 15 வருடங்களாக இரத்ததான முகாம்கள் மற்றும் அவசர இரத்ததானம் செய்து ஆயிரக்கணக்கான யூனிட்கள் குருதி கொடையளித்து வருகின்றது.
கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டும் பத்திற்கும் மேற்பட்ட முகாம்கள் நடைபெற்றது. இதில் 2271 குருதி கொடையாளர்கள் கலந்து கொண்டு உடல் தகுதி மற்றும் நேரம் பற்றாக்குறை அடிப்படையில் சுமார் 1583 யூனிட்க்கள் வரை (712.35 மில்லி லிட்டர்கள்) இரத்ததானம் கொடுக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
இந்த மனித நேய சேவையை பாராட்டி கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையின் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை இரத்த வங்கியின் சேர்மன் டாக்டர்.அம்மார் அல் சுஃஹ்யிர் அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மேலாண்மை குழு தலைவர் கே.எம் அப்துந் நாசர் அவர்களிடம் வழங்கினார்கள்.
இரத்த வங்கியின் சேர்மன் டாக்டர்.அம்மார் அல் சுஃஹ்யிர் அவர்கள் கூறுகையில், “மறுமை நன்மையை மட்டும் நாடி செய்யப்படும் இது போன்ற மனித நேய பணி பாராட்டுக்குரியது” என்று தனது வாழ்த்துக்களையும், நன்றியினையும் தெரிவித்தார்கள்.
இதனைப் போன்று சவுதி அரேபியா சுகாதாரத்துறை சார்பாகவும், மருத்துவமனைச் சார்பாகவும் ஏராளமான விருதுகளும், பாராட்டுச் சான்றிதழ்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் இதற்கு முன்பும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
—எல்லா புகழும் இறைவனுக்கே—