ரியாத் மாநகரில் TNTJ ரியாத் மண்டலம் நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டலம் சார்பாக கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையில் மாபெரும் 74வது இரத்த தான முகாம் இன்று வெள்ளிக்கிழமை 27/04/2018 அன்று நடைபெற்றது. இந்த முகாமில் 158க்கும் மோற்பட்டோர் கலந்து கொண்டு உடல் தகுதி மற்றும் நேரம் பற்றாக்குறை அடிப்படையில் 120 நபர்கள் மட்டும் இரத்ததானம் செய்தார்கள்.
முழுத்தகவல்:-
இரத்தம் சிந்தி பொருளாதாரத்தை ஈட்ட சென்ற அயல் நாட்டில் பணிபுரிந்து கொண்டு தங்களது விடுமுறை நாட்களிலும் கூட மார்க்க பணியுடன் மனித நேய பணியையும் செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வளைகுடா மண்டலங்கள், தமிழக கிளைகள் மற்றும் மாவட்டங்களுக்கு நிகராக பிரம்மாண்ட இரத்த தான முகாம்களை நடத்தி ஆயிரக்கணக்கான யூனிட் இரத்ததை கொடையாக வழங்கி வருகிறது.
அதான் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி (KFMC) மருத்துவமனையில் இன்று வெள்ளிக்கிழமை 27/04/2018 மாபெரும் 74வது இரத்த தான முகாம் காலை 8.00 மணிக்கு துவங்கியது. விடுமுறை நாட்களையும் பொருட்படுத்தாமல் மக்கள் சாரை, சாரையாக மருத்துவமனையில் குவிந்தார்கள். மருத்துவ ஊழியர்களின் சிரமத்தை குறைக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தன்னார்வ தொண்டர்கள் இரத்த தான விருப்ப படிவம் நிரப்பி வழங்கினர்.
இந்த முகாமில் 158 பேர் பதிவு செய்தனர், உடல் தகுதி மற்றும் நேரம் பற்றாக்குறை அடிப்படையில் 120 பேர் இரத்த கொடை அளித்தனர். இதில் தமிழ் பேசும் சகோதரர்கள் மட்டுமல்லாமல் நமது அண்டை மாநில சகோதரர்களும் கணிசமாக கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!
மருத்துவமனை இரத்த வங்கி சேர்மன் டாக்டர்.அம்மார் அல் சுஃஹ்யிர் முகாமை பார்வையிட்டு தமிழ் பேசும் மக்களின் உயிர்காக்கும் இந்த மனித நேய பணியை பாராட்டி தனது வாழ்த்துகளையும் நன்றியினையும் தெரிவித்து கொண்டார். மேலும், அவர் நிர்வாகிகளிடத்தில் பேசும் போது, இதுவரை இந்த மருத்துவமனையில் ஒரு முகாமில் இந்த அளவுக்கு இரத்த தானம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – ரியாத் மண்டலத்தை தவிர வேறு எந்த அமைப்புகளும் நடத்தியதில்லை என்று தெரிவித்தார்.
ரியாத் மண்டல இரத்த தான ஒருங்கினைப்பாளர் சகோ. முகம்மது ரியாத் அவர்கள் கூறுகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – ரியாத் மண்டலம் சார்பாக இதுவரை 73 இரத்த தான முகாம்கள் ரியாத் மாநகரில் மட்டும் நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடதக்கது என்றும் நமது இந்த மனித நேய பணியை பாராட்டி சவுதி சுகாதாரத்துறை சார்பாகவும், மருத்துவமனை சார்பாகவும் ஏராளமான விருதுகளும், பாராட்டச் சான்றிதழ்களையும் வழங்கியுள்ளது என்று கூறினார்.
ரியாத் மண்டலத்தின் தலைவர் சகோ: ஹாஜா மைதீன் அவர்கள் இரத்த தானம் நடத்துவதின் நோக்கத்தை பற்றி கூறும் போது திருக்குர்ஆன் 5 அத்தியாயம் 32 வசனம் “யார் ஒரு மனிதரை வாழவைக்கிறாரோ அவர் உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார்” என்ற இறை வசனத்தை நடைமுறைப்படுத்தி முஸ்லிம்கள் மனித நேயத்தை நேசிக்ககூடியவர்கள் என்றும் ஆனால் இன்றைய மீடியாக்கள் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சித்தரித்து வருவதை களையவே எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவனின் நற்கூலியை எதிர்பார்த்து இந்த பணியை செய்து வருவதாக கூறினார். கடந்த 13 வருடங்களாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – ரியாத் மண்டலம் வளைகுடா மண்டலங்களில் தொடர்ந்து முன்னணியில் உள்ளதாகவும், இதை பாராட்டி பல்வேறு விருதுகளை மருத்துவமனைகள் வழங்கியுள்ளன என்றார்.
இந்த முகாமின் அனைத்து ஏற்பாட்டினையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.
…எல்லா புகழும் இறைவனுக்கே…