சவூதியில் TNTJ நடத்திய 115வது இரத்ததான முகாம்!!!
ரியாத்:- உலக இரத்தக் கொடையாளர்கள் தினம் மற்றும் புனிதமான ஹஜ் மாதத்தில் ஹாஜிகளின் நலனுக்காக சவூதியில் TNTJ நடத்திய 115வது இரத்ததான முகாம்!!
அசாதாரணமான சூழலும் தொடர் நோய்த்தொற்று காலமாக இருந்தாலும் பிறர் நலம் காக்கும் நோக்கத்தில் இங்கே பணி செய்யும் இந்தியர்கள் தங்களின் அளப்பரிய இரத்ததான சேவையை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் (TNTJ) தன்னார்வ தொண்டர்களுடன் இணைந்து, உலக இரத்தக் கொடையாளர்கள் தினம் மற்றும் புனிதமான ஹஜ்ஜை முன்னிட்டு ஹாஜிகளுக்கு உதவும் வகையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
இன்று 02/07/2021, வெள்ளிக்கிழமை ரியாத் மாநகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) மற்றும் கிங் சவூத் மெடிக்கல் சிட்டி (KSMC) இணைந்து நடத்திய 115-வது மாபெரும் இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது, இந்த முகாமில் 84 குருதி கொடையாளர்கள் பதிவு செய்து 80 நபர்கள் இரத்ததானம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல இரத்ததான ஒருங்கிணைப்பாளர் சகோ. அஹமது முக்தார் அவர்கள், இந்த இரத்ததான முகாம்கள் நடத்துவதின் நோக்கத்தை கூறும்போது, “இஸ்லாம் என்றாலே பிறர் நலம் நாடுதல்” என்ற உயரிய நோக்கத்தை திருக்குர்ஆன் வசனம் கூறும்“யார் ஒரு மனிதரை வாழ வைக்கிறாரோ, அவர் உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார்” (அல்குர்ஆன் 5:32) குறிப்பிட்டுக் காட்டி அதன் மூலம் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மனிதத்தை நேசிக்கக் கூடியவர்கள், பிறர் நலம் பேணக்கூடியவர்கள் என்ற உண்மையை உலகிற்கு பறை சாற்றவும், ஏக இறைவனிடத்தில் மட்டுமே இதற்குரிய நற்கூலியை எதிர்பார்த்தவர்களாகவும், இந்த மகத்தான பணிகளை செய்து வருவதாகக் கூறினார்.
மேலும், இம்முகாம் குறித்து பேசிய ரியாத் மண்டல தலைவர் சகோ. செய்யது இப்ராஹீம் “கடந்த ஒன்றரை வருட காலமாக அசாதாரண சூழ்நிலையும் நெருக்கடியும் தொடர்ந்து இருந்து வரும் காலகட்டத்தில் பிறர் நலன் மற்றும் ஹஜ் பயணிகளின் தேவைகளுக்காக இந்த மனிதநேய உதவியை TNTJ தொண்டர்களும், குருதிக் கொடையளிப்பவர்களும் சந்தோசத்துடனும், தன்னார்வத்துடன் அதிக அளவில் கலந்து கொண்டு இம்முகாமை சிறப்பித்திருந்தனர்.
மேலும் சகோ. செய்யது இப்ராஹீம் பேசுகையில், இந்த உயிர் காக்கும் மகத்துவமான பணி என்றும், இதுபோன்ற நற்பணிகள் இந்திய தேசத்தின் சகோதரத்துவத்தையும், அன்பையும் போற்றும் விதத்தில் அமைந்தது. மேலும் நம் இந்திய தேசத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலித்து இந்தியர்களின் தியாகங்ககளையும், தேசப்பற்றையும் பிறநாடுகளில் பறைசாற்றும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாபெரும் இரத்ததான முகாம் மனிதநேயத்தை வார்த்தைகளால் மட்டுமல்லாமல் தங்களின் குருதி தியாகத்தாலும் வெளிப்படுத்தியிருந்தது மிகவும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இந்த முகாமில் அனைத்து ஏற்பாடுகளையும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் மற்றும் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் மருத்துவமனைகளின் இயக்குனர் அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.
மனிதநேயப் பணியில் என்றும் ஆர்வமுடன்…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மருத்துவ அணி, ரியாத் மண்டலம்
02.07.2021