இந்திய நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு சவூதியில் TNTJ நடத்திய இரத்ததான முகாம்!!!

சவூதி அரேபியா:- எண்ணற்ற கனவுகளுடன் தங்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வெளிநாடுகளில் வேலைக்காக சென்றுள்ள இந்தியர்கள் தங்களின் ஓய்வு நேரங்களை பல்வேறு சமூக நலப்பணிகளுக்காக செலவிட்டு வருகின்றனர் அதிலும் குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் (TNTJ) தன்னார்வ தொண்டர்கள் உதவிகள் தேவைப்படும் அனைத்து வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் அவர்களின் துயரம் அறிந்து பல்வேறு சமூக நலப்பணிகளை தாங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள இந்திய தூதரகங்கள் உதவியுடன் வளைகுடா மற்றும் இன்னபிற நாடுகளில் செய்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக தேசம் கடந்து வாழ்ந்து வரும் ஜமாஅத்தின் தன்னார்வ தொண்டர்கள் இரத்ததானம் செய்வதில் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் செயலாற்றிக் கொண்டுள்ளார்கள், அதன் ஒரு பகுதியாக இன்று 22/01/2021, வெள்ளிக்கிழமை இந்திய நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு ரியாத் மாநகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) மற்றும் கிங் பஹத் மெடிக்கல் சிட்டி (KFMC) இணைந்து நடத்திய 113-வது மாபெரும் இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது, இந்த முகாமில் 114க்கும் மேற்பட்ட குருதி கொடையாளர்கள் பதிவு செய்து 101 நபர்கள் இரத்ததானம் செய்தனர்.
அதனை தொடர்ந்து பேசிய, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல இரத்ததான ஒருங்கிணைப்பாளர் சகோ. ஷேக் பிரேம் நவாஸ் (பொறுப்பு) அவர்கள், இந்த இரத்ததான முகாம்கள் நடத்துவதின் நோக்கத்தை சொல்வதென்றால், “இஸ்லாம் என்றாலே பிறர் நலம் நாடுதல்” என்ற உயரிய நோக்கத்தை தவிர வேறெதுவுமில்லை. இன்னும் முத்தாய்ப்பாக சொல்வதென்றால்…“யார் ஒரு மனிதரை வாழ வைக்கிறாரோ, அவர் உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார்” – அல்குர்ஆன் 5:32
என்ற திருக்குர்ஆன் வசனத்தை நடமுறைப்படுத்தி, அதன் மூலம் இஸ்லாம் மற்றும் முஸ்லீம்கள் மனிதத்தை நேசிக்கக் கூடியவர்கள், பிறர் நலம் பேணக் கூடியவர்கள் என்ற உண்மையை உலகிற்கு பறை சாற்றவும், ஏக இறைவனிடத்தில் மட்டுமே இதற்குரிய நற்கூலியை எதிர்பார்த்தவர்களாகவும், இந்த மகத்தான பணிகளை செய்து வருவதாகக் கூறினார்.
மேலும் இம்முகாம் குறித்து கூறிய, மண்டல தலைவர் சகோ. செய்யது இப்ராஹீம் “இன்றைய முகாமின் துவக்கத்தில் கடும் குளிர் நிலவியது” இருந்தும் பிறரின் தேவையறிந்து உயிர் காக்கும் இந்த மனித நேயப் உதவியை எங்களின் தணர்வ தொடர்களும், குருதி கொடையளிப்பவர்களும் சந்தோசத்துடனும், தன்னார்வத்துடனும் அதிக அளவில் கலந்து கொண்டு இம்முகாமை சிறப்பித்திருந்தனர்.
மேலும் அவர் பேசுகையில், இந்திய விடுதலைக்காக இந்தியாவில் வாழ்ந்த நமது முன்னோர்களின் பங்களிப்பு அளப்பெரியது அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்களின் பங்கு ஆரம்பகாலம் முதல் இறுதிவரை வீரமாகவும், மிக விவேகமாகவும் இருந்தே வந்துள்ளது. அதே வேகமும், வேட்கையும் கொண்டு கடல் கடந்து வாழும் இந்தியர்களை சகோதரத் துவத்துடன் எந்த ஒரு பாகுபாடுகளும் இன்றி இந்தியர்கள் என்ற உணர்வுடன் இன்று ஒன்றிணைந்தனர்.
இது போன்ற தியாகங்களாலும், சகோதரத்துவதாலும் வளர்ந்து வரும் இந்திய நாட்டின் பெருமையை சீர்குலைக்கும் விதமான எந்தவொரு நிகழ்வுகளுக்கும் இந்தியர்களாகிய நாங்கள் இடமளிக்க மாட்டோம் என்று பறைசாற்றும் வண்ணம் நமது முன்னோர்களின் தியாகங்களை நினைவு கூறும் வகையில் தங்களின் குருதியை தானமாக வழங்கி இந்திய தேசத்தின் சகோதரத்துவத்தையும், அன்பையும் போற்றும் விதத்திலும், நம் இந்திய தேசத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலித்து இந்தியர்களின் தியாகங்ககளையும், தேச பற்றையும் பிறநாடுகளில் பறை சாற்றும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாபெரும் இரத்ததான முகாம் மனிதநேயத்தை வார்த்தைகளால் மட்டுமல்லாமல் தங்களின் குறுதி தியாகத்தாலும் நிரம்ப செய்துள்ளது நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இந்த முகாமின் அனைத்து ஏற்பாடுகளையும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல, கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் மருத்துவமனைகளின் இயக்குனர்கள் அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.
அனைத்து கொடையாளிகளும், தன்னலமில்லாது பிறர் நலம் பேணும் இந்த பணியில் பங்கு கொண்டதை எண்ணி உள்ளம் மகிழ்ந்து இந்திய குடியரசு தின எண்ணத்தோடு விடைபெற்றனர்.