பெருகி வரும் தற்கொலை கலாச்சரமும், அதன் தீர்வுகளும்…
நாம் வாழும் தற்போதைய கால சுழலில் தற்கொலைகள் என்பது மிகவும் மலிந்த ஒன்றாக நாளுக்கு, நாள் அதிகரித்துக்கொண்டே சொல்கின்றது, மனிதாபம் இல்லாமல் மனிதன் தன்னைத்தானே கொலை செய்து மாய்த்துக்கொள்வது தற்கொலை எனப்படும்.
யார் ஒருவன் துன்பத்தின் உச்சத்தில் இனி வாழ்வதற்கு வழியே இல்லை என நினைக்கிறானோ அவனே இவ்வழியை தேடிக் கொள்கிறான். எனவே இவ்வழி சரிதானா? இதற்க்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன? என்பதைப் பற்றியும் தற்கொலை போன்ற எண்ணங்கள் வந்தால் அதை எப்படி களையலாம் என்பதைப் பற்றியும் காண்போம்.
உலகத்தில் சந்தோசமாகவும், ஆரோக்கியமாகவும், புகழோடும் வாழும் மனிதர்கள்.. துன்பமும், இன்பமும் இரண்டற கலந்ததுதான் வாழ்க்கை என புரிந்து கொண்டு தனது வாழ்வை மேற்கொண்டால் தற்கொலை எனும் பெறும் பாவத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
தற்கொலை செய்யத் தூண்டும் காரணிகள்.
ஒரு மனிதன் தற்கொலை செய்வதற்கு கீழ்க்கண்ட காரணங்கள் உந்துதலாகக் கருதப்படுகின்றன.
நோய், நொடி, முதுமை, குடும்பத்தாரின் அலட்சியம், தனிமைப்படுதல்,பயம், குழப்பம், பாதுகாப்பற்ற சூழல், மனஅழுத்தம், , மனக்கவலை, குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, பொருளாதாரச் சிக்கல்கள், நம்பிக்கையிழத்தல், ஆழ்ந்த துக்கம், வரதட்சனை கொடுமை, காதல்தோல்வி, கள்ளக்காதல், கடன்தொல்லை, உயிரிழப்புக்கள் மற்றும் சேதங்கள் பசி, பட்டினி, பஞ்சம், , கடவுளுக்கு பலி கொடுப்பது, விவாகரத்து, பிரிவுகள் மற்றும் உறவு முறிதல் போன்ற பலதரப்பட்ட காரணிகள் இருந்தாலும், நாம் தற்பொழுது வாழும் சுழலும் தற்கொலைக்கான காரணமாக திகழ்கின்றன அவற்றில் முதல் இடத்தை பிடிப்பது, தற்கொலையைப் போற்றும் கதைகள்,திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் போன்றவையாகும்.
அற்பமான விஷயங்களுக்காக தற்கொலைகள்.
தினசரி பத்திரிக்கைகளிலும், செய்திகளிலும் நாம் காணும் அற்பமான தற்கொலைகளில் சில…
ஆசிரியை திட்டியதால் அல்லது பரிட்சையில் தோல்வி அடைநத்தால் மாணவ மாணவியர் தற்கொலை,காதலி வேறு ஒருவருடன் பேசியதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை, நடிகர், நடிகைகளின்/அரசியல் தலைவர்களின் இறப்பு செய்தியால் தற்கொலை, குடும்பத் தகராறு அல்லது கணவன் மனைவியை திட்டியதால் வேலை இழப்பு, பணிபுரியுமிடத்தில் பிரச்சனை என்று வகைவகையான தற்கொலை செய்திகள் ஏழை-பணக்காரர், ஆண்-பெண், சிறியவர்-பெரியவர் என்ற பேதமின்றி நடந்தேறுவதை காண முடிகிறது.
விதி ஓர் விளக்கம்.
விதியை நம்புவது இஸ்லாமிய நம்பிக்கையில் முக்கியமான ஒரு அம்சம். விதியை நம்ப வேண்டும்; அதே நேரத்தில் நம் செயல்பாட்டை விதியின் மீது பழி போட்டு விடாமல் அமைத்துக் கொள்ள வேண்டும்… விதியை நம்புவதால் மனித குலத்திற்கு ஏற்படுகின்ற நன்மையை இஸ்லாம் கூறுகிறது.
விதியை நம்பாதவனுக்குத் தாங்க முடியாத இழப்பு ஏற்பட்டால் அதை எண்ணி எண்ணியே அவன் மாய்ந்து போவான். விதியை நம்புபவனுக்கு இழப்பு ஏற்பட்டால் “நம் கையில் என்ன இருக்கிறது? எல்லாம் இறைவன் கையில் இருக்கிறது” என்று எண்ணுவான். இந்த இடத்தில் விதி,சுமை தாங்கியாக வந்து நின்று அவனது கவலையைப் போக்கும்.
அளவுக்கு அதிகமான செல்வத்தை, புகழை, மதிப்பை ஒருவன் பெறும் போது அது அவனுக்கு ஆணவத்தை ஏற்படுத்தும். அப்போது “இது எல்லாம் இறைவனின் நாட்டம்” என்று நினைத்துக் கொண்டால் அவன் தன்னடக்கம் பெறுவான். இது போன்ற நேரத்தில் விதியின் மீது பழியைப் போட்டு விட்டு கவலையைப் போக்கிக் கொள்ள வேண்டும்; ஆணவத்தை அடக்கிக் கொள்ள வேண்டும்.
நடந்து விட்ட விஷயத்திற்குத் தான் விதியை நினைக்க வேண்டும்; நடக்காத விஷயங்களில் எது விதி என்று நமக்குத் தெரியாத காரணத்தால், விதி இல்லாதது போல் நமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற தத்துவத்தை கீழ் உள்ள இறை வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும் (விதியை ஏற்படுத்தியுள்ளான்). கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (திருக்குர்ஆன் 57:23)
மனித மனம் எல்லாவற்றையும் தாங்கும் வலிமை கொண்டதல்ல! தன் மீது விழும் பாரத்தைத் தாங்குவதற்கு ஓர் சுமை தாங்கி வேண்டும். அது தான் விதி!
இந்த விதியின் மீதுள்ள நம்பிக்கை தான் மனிதனை, சோதனை சூறாவளிகள் முற்றுகையிடும் போது, வாழ்க்கைக் கப்பலை சுனாமிப் பேரலைகள் அலைக்கழிக்கும் போது, ஒரு நங்கூரமாக அமைந்து விடுகின்றது. இதயத்தில் ஏற்பட்ட காயத் தடங்களுக்கு சுகமான ஒற்றடமாக அமைந்து விடுகின்றது. இங்கே மன அழுத்தம் வலுவிழந்து போகின்றது.
எனவே விதியின் மீது கொள்ளும் நம்பிக்கையினால் ஏற்படும் இத்தகைய பலனாலும்,மனித அறிவுக்குப் புலப்படாத எண்ணற்ற பலன்களாலும் தான் இஸ்லாம் விதியை நம்பிக்கை கொள்ளச் சொல்கின்றது. இத்தகைய காரணங்கள் இல்லாவிட்டாலும் ஒரு முஸ்லிம் விதியை நம்பித் தான் ஆக வேண்டும். அப்படி விதியை நம்பாதவர்களை முஸ்லிம் என்று இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு சோதனை ஏற்படும் போது, அது இறைவன் நம் மீது ஏற்கனவே தீர்மானித்தது. நம் கையில் என்ன இருக்கின்றது? எனக் கருதி, இறை முடிவைத் திருப்தி கொள்வோம் என்று ஒரு மனிதன் நினைத்தால் அவனது மன அழுத்தம் அவனைப் பாதிக்க விடாமல் தற்காத்துக் கொள்கிறான். அல்லாஹ்வும் அவன் மீது அன்பு கொள்கிறான். அல்லாஹ்வின் முடிவில் திருப்தி கொள்ளாமல் அவசரப்பட்டு தற்கொலை செய்து கொண்டு தன்னை அழித்து விடின் அவனுக்கு சுவனத்தைத் தடை செய்து, அவனை நிரந்தர நரகவாதியாக ஆக்கி விடுகின்றான்.
ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்து கொண்டார். உடனே அல்லாஹ், எனது அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்தி விட்டான். எனவே அவனுக்குச் சொர்க்கத்தை ஹராமாக்கி விட்டேன் என்று கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி) நூல்: புகாரி 1364
மனோதத்துவ ரீதியிலான சிகிச்சை!
ஒரு இழப்பு ஏற்படும் போது அது விதியினால் ஏற்பட்டது என்று நம்பி பொறுத்திருந்தால் அவனுக்கு ஏற்பட்ட இழப்பை சரி கட்டி வேறொரு சிறந்த பரிகாரத்தையும் இறைவன் வாங்குவான்.
சங்கடம் ஏற்படும் போது ஒருவர், இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹும் மஃஜிர்னீ ஃபீ முஸீபதீ வஅக்லிஃப்லீ கைரன் மின்ஹா (பொருள்: நாம் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவர்கள். அவனிடமே திரும்பச் செல்பவர்கள். அல்லாஹ்வே! எனக்கு ஏற்பட்ட சங்கடத்தில் எனக்குப் பகரமாக ஆக்குவாயாக!) என்று கூறினால் அதைவிடச் சிறந்த ஒன்றை அல்லாஹ் பகரமாக ஆக்கி விடுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்.
(என் கணவர்) அபூஸலமா (ரலி) இறந்த போது, “முஸ்லிம்களில் அபூஸலமாவை விட சிறந்தவர் யார் இருக்கின்றார்? நபி (ஸல்) அவர்களிடம் ஹிஜ்ரத் சென்ற குடும்பத்தில் அவர் முதல் மனிதராவார்’ (என எண்ணினேன்) பின்பு நான் அந்தப் பிரார்த்தனையைக் கூறினேன். அல்லாஹ் எனக்கு ரசூல் (ஸல்) அவர்களைப் பகரமாக வழங்கினான். அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி) நூல்: முஸ்லிம் 1525
இங்கு இஸ்லாம் மேற்கண்ட பிரார்த்தனையை வெறும் மந்திர வார்த்தைகளாகச் சொல்ல வேண்டும் என்று கூறவில்லை. அவனது மன பாரத்தை இந்த வார்த்தைகள் கீழே இறக்கி வைக்கின்றது. அவனது பாரத்தை வாயாரச் சொல்லி, அவனை அமைதிப்படுத்துகின்றது. மன அழுத்தத்தைப் போக்க இதை விட மாமருந்து உலகில் கிடையவே கிடையாது.
மறுமை மீது மாறாத நம்பிக்கை.
இஸ்லாமிய மார்க்கம் மறுமை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. ஒருவர் இழந்து விட்ட இழப்புக்கு ஓர் ஈடாக, அவர் சந்தித்த சோதனைக்கு ஒரு பரிகாரமாக சுவனத்தைப் பரிசாக இறைவன் அளிக்கின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான்: இறை நம்பிக்கையுள்ள என் அடியான் அவனுக்குப் பிரியமான ஒருவரது உயிரை நான் கைப்பற்றி விடும் போது, நன்மை நாடிப் பொறுமை காப்பாரானால் சொர்க்கமே நான் அவருக்கு வழங்கும் பிரதிபலனாக இருக்கும். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6424, அஹ்மத் 9024
இதுவும் மன அழுத்தத்திற்கு ஒரு சிறந்த மருந்தாக அமைந்து விடுகின்றது, இப்படி மேற்கண்ட இந்த வழிமுறைகளில் மன அழுத்தத்தைப் போக்கிக் கொள்ளாமல் தற்கொலை என்ற பெயரில் தன்னை அழித்துக் கொண்டால் அவன் இறை ஏற்பாட்டைக் குறை கூறியவனாக ஆகி விடுகின்றான். இதனால் தான் அவனுக்கு அல்லாஹ் சுவனத்தைத் தடை செய்து விடுகின்றான், இப்படித் தற்கொலை செய்பவர் போர்க்களத்தில் வந்து இஸ்லாத்திற்காக போராடியவராக இருந்தாலும் சரி தான். இதனை போன்று தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தவும் மறுத்து விட்டார்கள். (ஆதாரம் நூல்: அபூதாவூத் 3185)
எனவே தற்கொலையைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து நிரந்தர நரகத்தைத் தரும் பாவமான தற்கொலையிலிருந்து நம்மையும் நமது சமுதாயத்தையும் காப்போமாக!
வெளியீடு:-