தர்மத்தின் சிறப்புகள்

அறம் செய்தோர் அர்ஷின் நிழலில்..

இவ்வுலகில் நாம் செய்யக் கூடிய உதவிப் பணிகள் மூலம் நம்முடைய பொருளாதாரம் குறைவதாக கருதுகிறோம்.  ஆனால் கண்டிப்பாக குறைவதில்லை அது மறுமையிலே நமக்கு உதவும் கரங்களாக மாறுகின்றன.

அல்லாஹ்வுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தனது நிழலை ஏழு பேருக்கு அளிக்கின்றான். அவர்கள்: நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளிவாசல்களுடன் தமது உள்ளத்தைத் தொடர்பு படுத்திக் கொண்ட ஒரு மனிதர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகின்ற இரு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கின்ற போது “நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன்’ என்று சொல்லும் மனிதர், தம்முடைய வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்பவர், தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் சிந்துபவர் ஆகியோர் ஆவர். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 660

இறந்தவருக்காக தர்மம்.

இஸ்லாம் சொல்லாத ஹத்தம், ஃபாத்திஹா போன்றவைகளை இறந்தவர்களுக்காக செய்து பொருளாதாரத்தை வீன் விரயம் செய்வோர் அவர்களுக்காக பலனளிக்கக் கூடிய தர்மம்செய்வது சிறந்தது.

ஸஅத் பின் உப்பாதா (ரலி) அவர்கள் வெளியே சென்றிருந்த போது அவருடைய தாயார் இறந்து விட்டார். அப்போது அவர் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் நான் வெளியே சென்றிருந்த போது மரணமடைந்து விட்டார். நான் அவர் சார்பாக தர்மம் ஏதும் செய்தால் இது அவருக்குப் பயனளிக்குமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ஆம்! என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்ட ஸஅத் (ரலி) அவர்கள், “நான் எனது மிக்ராஃப் எனும் தோட்டத்தை என் தாயார் சார்பாக தர்மம் செய்து விட்டேன். அதற்கு தங்களை சாட்சியாக்குகின்றேன் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),  நூல்: புகாரி 1388, 2756

நரகை விட்டு காக்கும் கேடயம்.

தர்மம் செய்வதை இலோசாக நினைக்க வேண்டாம். மறுமையை உறுதியாக நம்புபவர்களாக இருந்தால் தர்மத்தை அதிகப்படுத்தட்டும் நரக நெருப்பிலிருந்து காக்கும் கேடயமாக அமையும்.

“அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் பேசாமல் இருப்பதில்லை. அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளர் எவரும் இருக்க மாட்டார். பிறகு அவர் கூர்ந்து பார்ப்பார். தமக்கு முன்புறம் எதையும் அவர் காண மாட்டார். பிறகு தமக்கு எதிரே பார்ப்பார். அப்போது அவரை (நரக) நெருப்பு தான் வரவேற்கும். ஆகவே முடிந்தால், பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி), நூல்: புகாரி 6539

சிறந்த தர்மம் எது?

இது போதாது, இன்னும் வேண்டும், என்று நினைத்து தர்மம் செய்வதற்கு பொருளாதாரத்தை எடுக்க யோசிக்க வேண்டாம் செலவு செய்தது போக மீதியை தர்மம் செய்வதே சிறந்தது.

தேவை போக எஞ்சியதைத் தர்மம் செய்வதே சிறந்ததாகும். மேலும் முதலில் உமது வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1426

இறுக்கினால் இறுகி விடும்.

இவ்வளவு தான் என்னால் செய்ய முடியும் இதற்கு மேல் முடியாது என்று இறுக்கி முடிச்சைப் போட்டால் அல்லாஹ்வுடைய அருளும் முடிச்சிடப்படும்.

நபி (ஸல்) அவர்கள் என்னிடம் “நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் அருள்) உனக்கு (வழங்கப் படாமல்) முடிந்து வைத்துக் கொள்ளப்படும்” என்று கூறினார்கள்.

அப்தாவின் அறிவிப்பில், “நீ (இவ்வளவு தான்) என்று வரையறுத்து (தர்மம்) செய்யாதே! அல்லாஹ் (உன் மீது பொழியும் அருளை) வரையறுத்து விடுவான்” என்று கூறியதாக உள்ளது. அறிவிப்பவர்: அஸ்மா (ரலி), நூல்: புகாரி 1433, 1434

இறைவனிடம் கையேந்தும் இரு மலக்குகள்.

எனக்காக துஆ செய்யுங்கள் என்று பிறரிடம் பலரும் கூறுவதைப் பார்கிகிறோம். நமக்காக  துஆ செய்வதற்கு இரு மலக்குகள் பூமிக்கு அனுப்பபடுகின்றனர். அவர்கள்  இருவரும் தர்மம் செய்வோருக்காக துஆ செய்கின்றனர். அவர்களை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாளும் இரண்டு மலக்குகள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், “அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!” என்று கூறுவார். இன்னொருவர், “அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!” என்று கூறுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1442

சுவனத்தின் ஸதகா வாசல்

மறுமையில் சுவனம் செல்ல முடியாமல் பலர் தவிப்பர், ஆனால் தர்மம் செய்வோரை சுவனத்தில் ஸதகா எனும் வாசல் கூவி அழைக்கும்.

“ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிலிருந்து, “அல்லாஹ்வின் அடியாரே! இது நன்மையாகும். (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்)” என்று அழைக்கப் படுவார். தொழுகையாளிகளாக இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர். அறப்போர் புரிந்தவர்கள் ஜிஹாத் எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர். நோன்பாளிகளாய் இருந்தவர்கள் ரய்யான் எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர். தர்மம் செய்தவர்கள் ஸதகா எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே எவரேனும் எல்லா வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நான் நம்புகின்றேன்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1897

அல்லாஹ்வின் வாக்குறுதி.

பிறருக்காக பொருளாதாரத்தின் மூலம் செலவிட்டால், செலவிட்டோருக்காக செலவிட்டோரின் தேவையை நிறைவு செய்வதாக அல்லாஹ் வாக்களிக்கிறான்.

“ஆதமின் மகனே! (மற்றவர்களுக்காக) செலவிடு! உனக்கு நான் செலவிடுவேன்என்று அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 5352

தர்மமே நமது சொத்து

மரணிக்கும் போது தன்னுடன் எடுத்துச் செல்லும் ஒரே செல்வம். உலகில் வாழும்போது தன்னுடைய செல்வத்தை தர்மம் செய்வது தான் அவர் எடுத்துச் செல்லும் செல்வம்.

நபி (ஸல்) அவர்கள், “உங்களில் யாருக்காவது தமது செல்வத்தை விட தமது வாரிசுகளின் செல்வம் விருப்பமுடையதாக இருக்குமா?” என்று கேட்டார்கள். தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் அனைவருக்குமே எங்களின் செல்வம் தான் விருப்பமானதாகும்” என்று பதிலளித்தார்கள். “அவ்வாறாயின் ஒருவர் (இறப்பதற்கு முன் அறவழியில்) எதைச் செலவிட்டாரோ அது தான் அவரது செல்வமாகும். (இறக்கும் போது) எதைச் விட்டுச் செல்கின்றாரோ அது அவருடைய வாரிசுகளின் செல்வமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),  நூல்: புகாரி 6442

மரம் நடுதல்

மரம் நடுதலில் இருக்கும் தர்மத்தை அறிந்தால் எந்த ஒரு முஸ்லிமும் மரம் நடாமல் இருக்க மாட்டார்.

ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து அதிலிருந்து (அதன் விளைச்சலை) ஒரு பறவையோ அல்லது ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),  நூல்: புகாரி 2320

அல்லாஹ்வின் அருளால் வளரும் தர்மம்

அல்லாஹ் ஹலாலை மனுமதித்து ஹராமை தடுக்கிறான். அதன் அடிப்படையில் ஹலாலான வருமானத்தில் சிறிய அளவில் தரமம் செய்தாலும் அதை அல்லாஹ் தனது அருளால் பெரிய அளவாக ஆக்குகிறான்.

அல்லாஹ் பரிசுத்தமானதைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை. யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம்பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலக் கரத்தால் ஏற்றுக் கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலை போல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்: புகாரி 1410

இந்த நோட்டீஸை download செய்ய இங்கே click செய்யவும்.

Related Posts

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

மனிதனை அழகிய படைப்பாக்கிய அல்லாஹ், மனிதன் மீது அளவுகடந்த அன்பும் இரக்கமும் கருணையும் கொண்டுள்ளான். இம்மையிலும் மறுமையிலும் மனிதன் வெற்றி பெற்றிட வேண்டும் என்பதற்காக, அதற்கு தேவையான இறை நேர்வழிகாட்டலையும் வகுத்தளித்திருக்கின்றான். குறிப்பாக, ரமளான் மாதத்திற்கென்று கூடுதல்…

நபிகளாரின் எளிமை!

நபிகளாரின் எளிமை!

உலகில் எத்தனையோ தலைவர்கள் தோன்றி மறைகிறார்கள். அவர்கள், மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் போதும், பொது மேடைகளில் பேசும் போதும் பல உதாரணங்களை சொல்லி எளிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். ஆனால் அவர்கள் தம்முடைய சொந்த வாழ்க்கையில்…

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

அகில உலகைப் படைத்த இறைவன், மனிதப் படைப்புகளை பிற உயிரினங்களைவிட மேன்மையாக வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்களாகப் படைத்திருக்கின்றான். நீதி செலுத்துவதற்கும், சமத்துவம் பேணப்படுவதற்கும், எவ்வாறு வாழ்வியல் வழிகாட்டியாக கற்றுத் தந்திருக்கின்றானோ அதன் அடிப்படையில் மனித சமுதாயம் தங்களின்…

பிறர் நலன் நாடுவோம்!!!

பிறர் நலன் நாடுவோம்!!!

இஸ்லாம் என்பது இறை மார்க்கம். மனிதன் அமைதியாக வாழ வேண்டும்; நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அனைத்தும் அறிந்த ஏக இறைவனால் வழிமுறைகள் வகுக்கப்பட்ட மார்க்கம். இத்தகைய இஸ்லாமிய மார்க்கம், மனித சமுதாயம் எப்போதும் சிறப்பாக இயங்குவதற்குத்…

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

நல்லொழுக்கமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவோருக்கு சுய கட்டுப்பாடு அவசியமான ஒன்றாகும். நீரில்லா உலகை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ அதுபோல சுய கட்டுப்பாடின்றி நல்லொழுக்கமுள்ள வாழ்வைக் கற்பனை செய்ய முடியாது. சுய கட்டுப்பாடு என்பது ஒருவர் அவசியமற்ற…

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ரபீஉல் அவ்வல் மாதம் பிறந்து விட்டால் மவ்லிது கச்சேரிகள் களை கட்ட ஆரம்பித்து விடுகின்றன. மஃரிப் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசல்களிலும் மற்றும் வீடுகளிலும் முதல் பத்து நாட்கள் சுப்ஹான மவ்லிதுகளை பக்திப் பரவசத்தோடு அதை நன்மை எனக்…