பராஅத் இரவு உண்டா?

ஷஃபான் மாதம் பதினைந்தாம் இரவை ஷபே பராஅத் என்ற பெயரில் சிறப்புமிக்க இரவாகக் கருதி அந்த இரவு முழுவதும் விழித்து நோன்பு நோற்று பல விதமான வணக்கங்களைச் சிலர் செய்து வருகிறார்கள். இந்த இரவு சிறப்புமிக்க இரவு என்பதற்கு கீழே நாம் எடுத்துக்காட்டும் செய்திகளை ஆதாரங்களாக எடுத்துக் காட்டுகின்றனர்.

முதல் ஆதாரம்: தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம். அதில் தான் உறுதியான காரியங்கள் யாவும் பிரிக்கப்படுகின்றன. திருக்குர்ஆன் 44:2-4

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள பாக்கியமுள்ள இரவு பராஅத் இரவு தான் என்பது இவர்களின் முதல் ஆதாரமாகும். பாக்கியமுள்ள இரவு என்று அல்லாஹ் ஒரு இரவைக் குறிப்பிட்டால் நிச்சயம் அது பாக்கியமிக்கது தான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை, ஆனால் பாக்கியமிக்க இரவு என்பது ஷஅபான் மாதத்தின் 15 ஆம் இரவு என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பாக்கியமிக்க இரவு என்று அல்லாஹ் கூறும் போது அதற்கான காரணத்தையும் சேர்த்தே சொல்கிறான்.

இந்த இரவில் திருக்குர்ஆனை நாம் இறக்கினோம் என்பது தான் அந்தக் காரணமாகும். எந்த இரவில் குர்ஆன் அருளப்பட்டதோ அந்த இரவைத் தான் இவ்வசனம் குறிப்பிடுகிறது. எந்த இரவில் குர்ஆன் அருளப்பட்டது என்பதை நாம் திருக்குர்ஆனில் தேடிப் பார்த்தால் அந்த இரவு ரமலான் மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ர் இரவு என்று அறிந்து கொள்ளலாம்.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். திருக்குர்ஆன் 2:185

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். திருக்குர்ஆன் 97:1

அந்த இரவு ரமலான் மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ர் இரவு தான் என்று இவ்வசனங்கள் மூலம் அல்லாஹ் விளக்கம் கொடுத்து விட்டான். பாக்கியமிக்க இரவு என்பது ரமலான் மாதத்தில் உள்ள லைத்துல் கத்ரைத் தான் குறிக்கிறதே தவிர ஷஃபான் மாதத்தின் 15 ஆம் இரவு அல்ல என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. எனவே பராஅத் இரவுக்கும் இவர்கள் காட்டும் வசனத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.

இரண்டாம் ஆதாரம்: ஷஃபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, பாவமன்னிப்புத் தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களைப் போக்குகின்றேன். என்னிடம் உணவு கேட்பவர் உண்டா? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அலீ (ரலி) (ரலி)

இப்னுமாஜாவில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல. இப்னு அபீ ஸப்ரா என்பவர் வழியாக இச்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது இயற்பெயர் அபு பக்ர்  பின் அப்துல்லாஹ் பின் முஹம்மது அபி புஸ்ரா” ஆகும்.

இவர் ஹதீஸ்கள் என்ற பெயரால் இட்டுக்கட்டிக் கூறுபவர் என அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் கூறியுள்ளார்கள். புகாரி அவர்கள் இந்த அறிவிப்பாளரை பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். அபூபக்கர் என்பார் பலவீனமானவர் என்று நஸாயி அவர்கள் அல்லுஅஃபாஉ வல் வல்மத்ருகீன் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் இந்த ஹதீஸ் பொய்யான ஹதீஸாகும்.

மூன்றாம் ஆதாரம்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நாள் இரவு, படுக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காணாமல் வெளியே தேடி வந்தார்கள். அப்போது அவர்கள் பகீவு என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். ஷஅபான் மாதம் 15 ஆம் இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி கலப் கோத்திரத்தாரின் ஆட்டு ரோமத்தின் எண்ணிக்கை அளவுக்கு (பாவங்களை) மன்னிக்கின்றான் என்று அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்: திர்மிதி

இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது அல்ல என்பதை இதைப் பதிவு செய்த திர்மிதீ அவர்களே விளக்கியுள்ளார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் அபீ கஸீர் என்பார் உர்வா என்பார் வழியாக அறிவிப்பதாக இதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் யாஹ்யா பின் அபீ கஸீர் என்பார் உர்வாவிடம் எதையும் செவியுற்றதில்லை என்று புகாரி கூறுகிறார். மேலும் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பார் இதை யஹ்யா பின் அபீ கஸீர் வழியாக அறிவிப்பதாக இதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஹஜ்ஜாஜ் என்பார் யஹ்யா பின் அபீ கஸீரிடம் எதையும் செவியுறவில்லை. எனவே இது பலவீனமான ஹதீஸ் என்று புகாரி கூறுகிறார். இந்த விபரத்தை இந்த ஹதீஸின் இறுதியில் திர்மிதி அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இதையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.

நான்காவது ஆதாரம்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் அதிக நோன்பு நோற்பதைப் போல் வேறு எந்த மாதத்திலும் நோற்பவர்களாக இருக்கவில்லை. அந்த ஆண்டு மரணிக்க உள்ளவர்களின் தவணை அம்மாதத்தில் மாற்றப்படுகிறது என்பதே இதற்குக் காரணம். அறிவிப்பாளர்: அதாவு பின் யஸார், நூல்கள்: முஸன்னப் இப்னு அபீஷைபா 9764ஃபலாயிலுர் ரமலான் இதை அறிவிக்கும் அதாவு பின் யஸார் என்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தைச் சேர்ந்தவர் அல்ல. அதாவது நபித்தோழர் அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான எந்தச் செய்தியாக இருந்தாலும் அதன் முதல் அறிவிப்பாளராக நபித்தோழர் தான் இருக்க வேண்டும். நபித்தோழர் அல்லாதவர் அறிவித்தால் அது பலவீனமான ஹதீஸாகும்.

ஐந்தாவது ஆதாரம்: ரமலான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும், ஷஃபான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும் இக்லாஸ் எனும் அத்தியாயத்தை 1000 தடவை ஓதி எவர் 100 ரக்அத்கள் தொழுகின்றாரோ அவருக்கு சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்படும் வரை அவர் மரணிக்க மாட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : முஹம்மத் பின் அலீ, நூல் : ஃபலாயிலு ரமலான் – இப்னு அபித் துன்யா

முஹம்மத் பின்அலீ என்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்தவர் அல்ல.  எனவே இச்செய்தியும் பலவீனமான செய்தியாகும். எனவே பராஅத் இரவு குறித்து எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை. மேலும் இந்த இரவில் மூன்று தடவை யாஸீன் அத்தியாயம் ஓத வேண்டும்; முதல் யாஸீன் பாவமன்னிப்பிற்காகவும், இரண்டாவது யாஸீன் மரணித்தவர்களுக்கு நன்மை சேர்க்கவும், மூன்றாவது யாஸீன் நீண்ட ஆயுளுக்காகவும் என்று ஓதுகின்றனர். இப்படி ஓத வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. இது போலி ஆலிம்கள் வீடுகளுக்குப் போய் சம்பாதிப்பதற்காக உருவாக்கிய பொய் வணக்கமாகும். ஷஅபான் மாதம் 15 ஆம் இரவில் நோன்பு நோற்பதும் பித்அத்தாகும்.

நமது மார்க்கத்தில் ஒருவர் புதிதாக ஒன்றை உருவாக்கினால் அது ரத்து செய்யப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி 2697

நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) – நூல் : முஸ்லிம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைக்கு மதிப்பளித்து அவர்கள் காட்டித்தராமால் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட பராஅத் வணக்கங்களை விட்டொழிப்போமாக!

இந்த fileயை download இங்கே கிளிக் செய்யவும்

Related Posts

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

மனிதனை அழகிய படைப்பாக்கிய அல்லாஹ், மனிதன் மீது அளவுகடந்த அன்பும் இரக்கமும் கருணையும் கொண்டுள்ளான். இம்மையிலும் மறுமையிலும் மனிதன் வெற்றி பெற்றிட வேண்டும் என்பதற்காக, அதற்கு தேவையான இறை நேர்வழிகாட்டலையும் வகுத்தளித்திருக்கின்றான். குறிப்பாக, ரமளான் மாதத்திற்கென்று கூடுதல்…

நபிகளாரின் எளிமை!

நபிகளாரின் எளிமை!

உலகில் எத்தனையோ தலைவர்கள் தோன்றி மறைகிறார்கள். அவர்கள், மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் போதும், பொது மேடைகளில் பேசும் போதும் பல உதாரணங்களை சொல்லி எளிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். ஆனால் அவர்கள் தம்முடைய சொந்த வாழ்க்கையில்…

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

அகில உலகைப் படைத்த இறைவன், மனிதப் படைப்புகளை பிற உயிரினங்களைவிட மேன்மையாக வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்களாகப் படைத்திருக்கின்றான். நீதி செலுத்துவதற்கும், சமத்துவம் பேணப்படுவதற்கும், எவ்வாறு வாழ்வியல் வழிகாட்டியாக கற்றுத் தந்திருக்கின்றானோ அதன் அடிப்படையில் மனித சமுதாயம் தங்களின்…

பிறர் நலன் நாடுவோம்!!!

பிறர் நலன் நாடுவோம்!!!

இஸ்லாம் என்பது இறை மார்க்கம். மனிதன் அமைதியாக வாழ வேண்டும்; நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அனைத்தும் அறிந்த ஏக இறைவனால் வழிமுறைகள் வகுக்கப்பட்ட மார்க்கம். இத்தகைய இஸ்லாமிய மார்க்கம், மனித சமுதாயம் எப்போதும் சிறப்பாக இயங்குவதற்குத்…

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

நல்லொழுக்கமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவோருக்கு சுய கட்டுப்பாடு அவசியமான ஒன்றாகும். நீரில்லா உலகை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ அதுபோல சுய கட்டுப்பாடின்றி நல்லொழுக்கமுள்ள வாழ்வைக் கற்பனை செய்ய முடியாது. சுய கட்டுப்பாடு என்பது ஒருவர் அவசியமற்ற…

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ரபீஉல் அவ்வல் மாதம் பிறந்து விட்டால் மவ்லிது கச்சேரிகள் களை கட்ட ஆரம்பித்து விடுகின்றன. மஃரிப் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசல்களிலும் மற்றும் வீடுகளிலும் முதல் பத்து நாட்கள் சுப்ஹான மவ்லிதுகளை பக்திப் பரவசத்தோடு அதை நன்மை எனக்…