தொழுகையைத் திருந்தத் தொழுவோம் – நோட்டீஸ்
அல்லாஹ்வின் திருப்பெயரால்
இந்த நோட்டீஸை PDF வடிவில் பதிவிறக்கம் (Download) செய்ய, இங்கே கிளிக் செய்யவும்…
நோட்டீஸ் தலைப்பு:- தொழுகையைத் திருந்தத் தொழுவோம்
தொழுகையைத் தவறவிடாமல் சரியான முறையில் நிறைவேற்றுபவர்களுக்கு இறைவனிடம் ஏராளமான நன்மைகள் உள்ளன.
“தொழுகையை நிலைநாட்டி, ஸகாத் கொடுத்து, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியோர்க்கே மகத்தான கூலியை வழங்குவோம்”. அல்குர்ஆன்(4:162).
மேலும், தொழுகையைப் பேணாமல் தவற-விட்டவர்களுக்கு தண்டனைகள் உள்ளது என்பதையும் திருக்குர்ஆன் பிரகடனப்படுத்துகிறது.
அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் “உங்களை நரகத்தில் சேர்த்தது எது?” என்று விசாரிப்பார்கள். “நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை” எனக் கூறுவார்கள். அல்குர்ஆன்(74: 40 – 44).
தொழுகையாளிகளுக்கு கூலிகளும், தொழாதவர்-களுக்கு தண்டனைகளும் இருப்பதைப் போன்றே தொழுதும் அலட்சியத்தையும், சோம்பலையும் தவிர்க்காதவர்களுக்கு கடும் கண்டனத்தையும் திருக்குர்ஆன் பதிவு செய்கிறது.
“தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடுதான்”. அல்குர்ஆன் (107: 4, 5).
“நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கி-ன்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோரா-கவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர்”. அல்குர்ஆன் (4: 142).
பள்ளிக்கு நிதானமாக செல்ல வேண்டும்.
(ஒரு முறை) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது சிலர் (தொழுகையில் வந்து சேர அவசரமாக வந்ததால் உண்டான சந்தடிச் சப்தத்தைத் செவியுற்றார்கள். தொழுது முடித்ததும், “உங்களுக்கு என்ன ஆயிற்று (ஏன் சந்தடி எழுந்தது)?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், தொழுகையில் வந்து சேர்வதற்காக நாங்கள் விரைந்து வந்தோம் (அதனால் சலசலப்பு ஏற்பட்டது)” என்று பதிலளித்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இவ்வாறு செய்யாதீர்கள் தொழுகைக்கு வரும்போது நிதானத்தைக் கடைப் பிடியுங்கள். (இமாமுடன்) கிடைத்ததைத் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப்போன (ரக்அத்)தை (தொழுகை முடிந்ததும் எழுந்து) பூர்த்தி செய்யுங்கள்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் – அபூ கதாதா(ரலி) நூல் – புகாரி 635.
அவசரத்தில் தடுப்பை உடைக்கக் கூடாது.
‘தொழுபவருக்குக் குறுக்கே செல்பவர், அதனால் தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்குக் குறுக்கே செல்வதற்குப் பதில் (நாற்பது நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது வருடங்கள்) நின்று கொண்டிருப்பது அவருக்கு நல்லதாகத் தேன்றும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஜுஹைம் (ரலி)) நூல்கள்: புகாரீ 510, முஸ்லிம் 785
பார்வைகள் ஜாக்ரதை
தொழும் போது பார்வை வானத்தை நோக்கி இருக்கக் கூடாது, திரும்பியும் பார்க்கக் கூடாது.
‘தொழும் போது தங்கள் பார்வைகளை வானத்தின் பக்கம் உயர்த்துவோருக்கு என்ன நேர்ந்து விட்டது? இதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும், இல்லை எனில் அவர்களின் பார்வைகள் பறிக்கப்பட்டு விடும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: புகாரீ 750, முஸ்லிம் 649
முறையாக முதுகை வளைக்க வில்லை என்றால் தொழுகை செல்லாமல் போய்விடும்.
‘ருகூவிலும், ஸஜ்தாவிலும் எவர் தமது முதுகை (வளைவின்றி) நேராக நிறுத்தவில்லையோ அவரது தொழுகை செல்லாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்வூத் அல்அன்சாரீ (ரலி)
நூல்கள்: திர்மிதீ 245, நஸயீ 1017, அபூதாவூத் 729, இப்னுமாஜா 860, தாரமீ 1293
இரு கைகளை சரியாக உயர்த்த வேண்டும்.
தொழுகையில் குறிப்பிட்ட இடங்களில் கைகைளை தோல் புஜங்களுக்கு நேராகவோ, அல்லது காதுகளின் நுணி பகுதிக்கு நேராகவோ உயர்த்த வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும்போது தமது தோள்களுக்கு நேராகத் கைகளை உயர்த்துவார்கள். ருகூஉவிற்காக தக்பீர் கூறும்போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும்போதும் அவ்வாறே (தோள்களுக்கு நேராக) இரு கைகளையும் மீண்டும் உயர்த்துவார்கள். அறிவிப்பாளர் – அப்துல்லாஹ் பின் உமர் (ரலி). நூல் – புகாரி 735.
ஸலாம் கூறும் போது நன்றாகத் திரும்ப வேண்டும்.
நபி(ஸல்) அவர்களின் கன்னத்தின் வெண்மையை நான் பார்க்கும் அளவுக்கு அவரகள் தமது இடபுறமும் வலதுபுறமும் (திரும்பி) ஸலாம் கொடுத்ததை நான் பார்த்தேன். அறிவிப்பாளர் – ஸஅது (ரலி). நூல்- 1021.
ஸஜ்தாவைச் சரியாக செய்ய வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நெற்றி, இரு (உள்ளங்)கைகள், இரு முழங்கால்கள், இரு பாதங்களின் நுனிகள் ஆகிய ஏழு உறுப்புக்கள் படுமாறு சஜ்தாச் செய்யும்படி நான் கட்டளை-யிடப்பட்டுள்ளேன்.- (நெற்றியைக் குறிப்பிடும்போது) தமது மூக்கின் மீது தமது கையால் (மூக்கு உட்பட என்பதுபோல்) சைகை செய்தார்கள் தொடர்ந்து ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதெனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன் என்றும் கூறினார்கள். அறிவிப்பாளர்- இப்னு அப்பாஸ் (ரலி). நூல் – புகாரி 812.
அனைத்திலும் நிதானம் தவறாமை.
‘நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறுவீராக! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதுவீராக! பின்னர் நிதானமாக ருகூவு செய்வீராக! பின்னர் ருகூவிலிருந்து எழுந்து நேராக நிலைக்கு வருவீராக! பின்னர் நிதானமாக ஸஜ்தாச் செய்வீராக! ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்கார்வீராக! இவ்வாறே தொழுகை முழுவதும் செய்வீராக!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ 757, முஸ்லிம் 602
இந்த உலகத்தில் நமக்குக் கிடைக்கும் பலன் தவறிவிடாமல் இருப்பதற்காக அதிக கவனம் செலுத்துகின்ற நாம், நாளை மறுமையில் நமக்கு அதிக நன்மையை வழங்கக் கூடிய இந்தத் தொழுகையிலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.