காது குத்துதல், பிளாஸ்டிக் சர்ஜரி கூடுமா?
கேள்வி :- காது குத்துதல், பிளாஸ்டிக் சர்ஜரி கூடுமா?
காது குத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?
பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளலாமா?
திருக்குர்ஆனின் 4:11 வசனத்தில் அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளை மாற்றுவார்கள் என்று ஷைத்தான் கூறியதாக அல்லாஹ் கூறுகின்றான். எனவே காது குத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளலாமா?
இஸ்லாமிய பொது நூலகம், வடகரை.
பதில் :
காதுகளைக் குத்தி ஓட்டை போடுவது அல்லாஹ்வின் படைப்பில் மாறு செய்வதில் அடங்கும். பெண்களைப் படைக்கும் போது காதுகளில் ஓட்டை போட அல்லாஹ் மறந்து விட்டது போன்ற ஒரு நிலையை இது ஏற்படுத்தி விடுகின்றது. எனவே இதை அல்லாஹ் கடுமையாகக் கண்டிக்கின்றான்.
அவர்களை வழிகெடுப்பேன்; அவர்களுக்கு (தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள் (எனவும் ஷைத்தான் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.
திருக்குர்ஆன் 4 : 119
படைப்பினங்களின் கோலத்தை மாற்றுவது ஷைத்தானுடைய முக்கிய இலக்காக அமைந்துள்ளது என்று அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகின்றான். எனவே காது குத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.
பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதில் இரண்டு வகைகள் உள்ளன. ஒருவர் தன்னுடைய தோற்றத்தை மாற்றிக் கொள்வதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டால் அது மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் தடுக்கப்பட்ட செயலாகும். ஆனால் பொதுவான மனிதத் தோற்றத்திற்கு மாற்றமாக அமைந்த, உடலியல் ரீதியான குறைபாடுகளைச் சரி செய்வதற்காக சர்ஜரி செய்து கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. இதற்கான ஆதாரம் வருமாறு.
سنن أبي داود
4232 – حدَّثنا موسى بنُ إسماعيلَ ومحمدُ بنُ عبد الله الخُزاعيُّ -المعنى- قالا: حدَّثنا أبو الأشْهبِ، عن عبدِ الرحمن بن طرَفَةَ أن جده عَرْفَجَةَ بن أسعدٍ قُطِعَ أنفُه يوم الكُلاب فاتخذ أنفاً من وَرِقٍ، فأنتنَ عليه، فأمرَهُ النبي – صلَّى الله عليه وسلم – فاتخذ أنفاً من ذهب
அறியாமைக் காலத்தில் நடந்த கிலாப் போரின் போது என்னுடைய மூக்கு உடைபட்டு விட்டது. எனவே நான் வெள்ளியினால் மூக்கு செய்து பொருத்திக் கொண்டேன். அதில் எனக்குக் கெட்ட வாடை ஏற்பட்டது. அதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குத் தங்கத்தால் ஆன மூக்கு பொருத்தும் படி உத்தரவிட்டார்கள்.
அறிவிப்பவர் : அர்ஃபஜா பின் அஸ்அத் (ரலி)
நூல்கள் : திர்மிதீ, அபூதாவூத்
Source :Onlinepj.com