தர்மத்தின் சிறப்புகள்
கூலி வேலை செய்து தர்மம் கொடுத்த வள்ளல்கள்
அல்லாஹ் நமக்கு வழங்கிய செல்வத்தில் பிறருக்கும் கொடுத்து உதவும்படி திருக்குர்ஆனில் அதிகமான இடங்களில் வலியுருத்திக் கூறுகிறான். அவனுடைய தூதர் முஹம்மது(ஸல்)அவர்களும் அதிகம் தர்மம் செய்து, நம்மையும் தர்மம் செய்ய ஆர்வமூட்டினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் தர்மம் செய்ய வேண்டும் என ஏவினால் எங்களில் ஒருவர் கடைத் தெருவுக்குச் சென்று கூலி வேலை செய்து, இரண்டு கையளவு தானியம் சம்பாதித்து (அதைத் தர்மம் செய்து) விடுவார். ஆனால் இன்றோ எங்களில் சிலரிடம் ஓர் இலட்சம் (திர்கம், தீனார்) வரை உள்ளன. அறிவிப்பாளர்: அபூ மஸ்வூத்(ரலி) அவர்கள்.நூல்: புகாரி.1416.
ஏழைகளுக்கு உதவுவது இறையருளைப் பெற்றுத் தரும்
தன்னுடைய சகோதர முஸ்லிம் வறுமையின் காரணமாக பசியாலும், தாகத்தாலும் வாடினால் அவனுக்கு மனிதாபிமான அடிப்படையில் உடலாலும், பொருளாலும் உதவி செய்வதன் மூலம் இறைவனின் பேரருளை அடைந்துக்கொள்ளலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), “ஆதமின் மகனே! (மனிதா!) நான் நோயுற்றிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)?” என்று கேட்பான். அதற்கு மனிதன், “என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல்நலம் விசாரிப்பேன்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனை உடல்நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்” என்று கூறுவான்.
மேலும் அல்லாஹ், “ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை” என்பான். அதற்கு மனிதன், “என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்” என்று கூறுவான்.
மேலும் “ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை” என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், “என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க,உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்” என்று கூறுவான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்:முஸ்லிம்.5021.
வறியவர்களின் துயர் துடைத்த வாஞ்சை நபி
உண்ண உணவில்லாமல், உடுத்த உடை இல்லாமல், காலில் கூட அணிவதற்கு செருப்பில்லாமல் வெளிஊரிலிருந்து நபியவர்களிடம் உதவிக்கேட்டு வந்த ஒரு கூட்டத்தாரைக்கண்டு நபியவர்கள் கண் கலங்கி அவர்களுக்கு பொருளாதாரத்தை திரட்டிக் கொடுத்த ஒரு நிகழ்வு இன்றைக்கும் படிப்பவர்களுடைய கண்களில் கண்ணீரை வரவழைக்கும்.
(ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த கம்பளி ஆடை அல்லது நீளங்கி அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் முளர் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே முளர் குலத்தைச் சேர்ந்தவர்கள் தாம். அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிமாறி விட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருவிதத் தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது மக்களே! உங்களை ஒரே ஒரு உயிரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை பயந்து கொள்ளுங்கள் எனும் (4:1) இறை வசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள். மேலும், அல்ஹஷ்ர் அத்தியாயத்திலுள்ள நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நாளைக்கு என தாம் செய்த வினையை ஒவ்வொருவரும் கவனிக்கட்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனும் (59:18) வசனத்தையும் ஓதிக் காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள். அப்போது (உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக் காசு, துணி, ஒரு ஸாஉ கோதுமை, ஒரு ஸாஉ பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும் என்று கூறி, பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும் என்று வலியுறுத்தினார்கள். அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) நூல்: முஸ்லிம் 1848
அர்ஷின் நிழலை பெற்றுத் தரும் தர்மம்
வறுமையில் வாடும் ஒரு கூட்டத்தினரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மக்களிடம் தர்மத்தை வலியுறுத்தி வசூல் செய்து அவர்களுடைய வறுமையைப் போக்கிய நிகழ்வு அவர்களுடன் முடிந்திடாது. அவர்களுடைய இந்த அழகிய நடைமுறையை அனைத்து முஸ்லிம்களும் பின்பற்ற வேண்டும்.
இன்று உலகம் முழுவதும் மதவெறியர்களால் அடித்து விரட்டப்படும் சிறுபான்மை முஸ்லிம்கள் புகலிடம்தேடி பிற நாடுகளில் அடைக்கலம் புகுகின்றனர். அவ்வாறு அடைக்கலம் புகுபவர்கள் தங்களுடைய பிறந்த நாட்டிலிருந்து வெளியேறும்போது உயிரை காப்பாற்றுவதற்காக உடுத்திய ஒரு ஆடையுடன் ஓடி வரும் அவல நிலை தான் உருவாகிறது. ஃபாலஸ்தீனம், ஈராக், ஆப்கான், ரோஹிங்கியா என்று இதன் படிட்டியல் தொடருகிறது.
பிறந்த நாட்டை விட்டு உடுத்திய ஒரு ஆடையுடன் அந்நிய நாட்டில் பட்டினியால் வாடும் இந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள். இதைத் தான் மேற்காணும் நபியவர்களின் “முளர்”கோத்திரத்தார் விஷயத்தில் செய்துக்காட்டியது சுட்டிக்காட்டுகிறது.
இவ்வுலகில் நாம் செய்யக் கூடிய உதவிப் பணிகள் மூலம் நம்முடைய பொருளாதாரம் குறைவதாக கருதுகிறோம்.கண்டிப்பாக குறைவதில்லை அது மறுமையிலே நமக்கு உதவும் கரங்களாக மாறுகின்றன.
அல்லாஹ்வுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தனது நிழலை ஏழு பேருக்கு அளிக்கின்றான். அவர்கள்: நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளிவாசல்களுடன் தமது உள்ளத்தைத் தொடர்பு படுத்திக் கொண்ட ஒரு மனிதர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகின்ற இரு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கின்ற போது “நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன்’ என்று சொல்லும் மனிதர், தம்முடைய வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்பவர், தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் சிந்துபவர் ஆகியோர் ஆவர். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 660
பெருநரகை விட்டு காக்கும் சிறு பேரீச்சம்பழம்
தர்மம் செய்வதை இலோசாக நினைக்க வேண்டாம். மறுமையை உறுதியாக நம்புபவர்களாக இருந்தால் தர்மத்தை அதிகப்படுத்தட்டும் அது நரக நெருப்பிலிருந்து காக்கும் கேடயமாக அமையும்.
“அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் பேசாமல் இருப்பதில்லை. அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளர் எவரும் இருக்க மாட்டார். பிறகு அவர் கூர்ந்து பார்ப்பார். தமக்கு முன்புறம் எதையும் அவர் காண மாட்டார். பிறகு தமக்கு எதிரே பார்ப்பார். அப்போது அவரை (நரக) நெருப்பு தான் வரவேற்கும். ஆகவே முடிந்தால், பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி), நூல்: புகாரி 6539
இறுக்கினால் இறுகி விடும்
இவ்வளவு தான் என்னால் செய்ய முடியம் இதற்கு மேல் முடியாது என்று இறுக்கி முடிச்சைப் போட்டால் அல்லாஹ்வுடைய அருளும் முடிச்சிடப்படும்.
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் “நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் அருள்) உனக்கு (வழங்கப் படாமல்) முடிந்து வைத்துக் கொள்ளப்படும்” என்று கூறினார்கள். அப்தாவின் அறிவிப்பில், “நீ (இவ்வளவு தான்) என்று வரையறுத்து (தர்மம்) செய்யாதே! அல்லாஹ் (உன் மீது பொழியும் அருளை) வரையறுத்து விடுவான்” என்று கூறியதாக உள்ளது. அறிவிப்பவர்: அஸ்மா (ரலி), நூல்: புகாரி 1433, 1434
இறைவனிடம் கையேந்தும் இரு மலக்குகள்
எனக்காக துஆ செய்யுங்கள் என்று பிறரிடம் பலர் கூறுவதைப் பார்க்கிறோம். நமக்காக துஆ செய்வதற்கு இரு மலக்குகள் பூமிக்கு அனுப்பபடுகின்றனர். அவர்கள் இருவரும் தர்மம் செய்வோருக்காக துஆ செய்கின்றனர்.
ஒவ்வொரு நாளும் இரண்டு மலக்குகள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், “அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!” என்று கூறுவார். இன்னொருவர், “அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!” என்று கூறுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1442
இந்த fileயை download இங்கே கிளிக் செய்யவும்.