பலதார மணம் ஓர் பார்வை …!

பலதார மணம் ஓர் பார்வை …!

பெண்களுக்கு இஸ்லாம் கொடுமை செய்கிறது என்று விமர்சிப்பவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா என்ற நூலை நான் எழுதினேன். அது இணய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்ற பலதாரமணம் குறித்த கட்டுரை தனியாக இங்கே வெளியிடப்படுகிறது.

பலதார மணம்

ஆண்கள் நான்கு மனைவியர் வரை திருமணம் செய்யலாம் என்று இஸ்லாத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதை முஸ்லிமல்லாதார் அதிகமாக விமர்சிக்கின்றனர். பெண்களிடம் இஸ்லாம் பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று கூறுவோருக்கு இது தான் முக்கியமான ஆதாரமாக அமைந்துள்ளது.

பலதார மணத்தை இஸ்லாம் மட்டும் ஆதரிக்கவில்லை.

இஸ்லாம் மட்டுமே பலதார மணத்தை ஆதரிக்கிறது; மற்ற மதங்கள் ஆதரிக்கவில்லை என்ற கருத்து பரவலாக இருக்கிறது.
இக்கருத்து பிரச்சாரமும் செய்யப்படுகிறது. எனவே பலதார மணத்தை இஸ்லாம் ஏன் அனுமதித்தது என்பதை ஆராய்வதற்கு முன் இந்தக் குற்றச்சாட்டை ஆராய வேண்டியது அவசியமாகும்.

நபிகள் நாயகத்துக்கு முன்பே உலகின் பல பாகங்களிலும் பலதார மணம் நடந்தே வந்துள்ளது. அது பெருமைக்குரியதாகவும் கருதப்பட்டு வந்தது. இதற்கு உலக வரலாற்றில் அனேக சான்றுகள் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த முஸ்லிமல்லாத அரபியர்கள் கணக்கு வழக்கின்றிப் பல பெண்களைச் சர்வ சாதாரணமாக மணந்து வந்திருக்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் உலக மாந்தர் அனைவரும் ஏக பத்தினி விரதத்தை மேற் கொண்டிருந்ததைப் போன்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து தான் முதன் முதலில் பலதார மணத்தை அனுமதித்தது போன்றும் ஒரு தோற்றத்தைச் சிலர் ஏற்படுத்த முயல்கின்றனர். இது முற்றிலும் தவறாகும்.

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இஸ்லாத்தை ஏற்காத அரபியர் பல பெண்களை மணந்து வாழ்ந்திருக்கிறார்கள். அதற்கென்று விதி முறைகளோ, வரம்புகளோ அவர்களிடம் இருந்ததில்லை.

அரபுலகில் மட்டுமின்றி உலகின் பல பாகங்களிலும் பலதார மணம் இருந்திருக்கின்றது. பல மதங்களும் இதனை அங்கீகரித்திருந்தன.

வள்ளி, தெய்வானை எனும் இரண்டு மனைவியருடன் வாழ்ந்த முருகன் நமது நாட்டில் கடவுளாகக் கருதப்பட்டு இன்றளவும் வணங்கப்பட்டு வருவதைக் காண்கிறோம்.

ஏக பத்தினி விரதம் கடைப்பிடித்ததாகக் கூறப்படும் இராமனின் தந்தை தசரதனுக்கு அறுபது ஆயிரம் மனைவியர் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

கிருஷ்ணனுக்கு பாமா, ருக்மணி எனும் இரு மனைவியர் இருந்ததாகவும் புராணங்களிலிருந்து அறிய முடிகின்றது. அவரும் நமது நாட்டில் கடவுளாகக் கருதப்பட்டு இன்றளவும் வணங்கப்பட்டு வருகிறார்.

எத்தனையோ மன்னர்களும், மற்றவர்களும் இந்த மண்ணில் பல மனைவியரை மணந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. அது போல் கிறித்தவர்களும், யூதர்களும் பெரிதும் போற்றும் தாவீது ராஜா, ஆப்ரகாம், யாக்கோபு மற்றும் ஏராளமான தீர்க்கதரிசிகள் பல மனைவியருடன் வாழ்ந்ததாக பைபிளிலும், யூத வேதங்களிலும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக யூத கிறித்தவ சமுதாயத்தினர் அவர்களை வெறுக்கவில்லை.

இஸ்லாம் தான் பலதார மணத்தை முதன் முதலில் உலகுக்கு அறிமுகம் செய்தது போல் பிரச்சாரம் செய்யப்படுவது அடிப்படையில்லாதது என்பதை இதன் மூலம் அறியலாம்.

பலதார மணத்தை இஸ்லாம் ஏன் அனுமதிக்கின்றது? அனுமதிக்கக் கூடாது என்போரின் வாதங்கள் எந்த அளவு நியாயமானவை என்பதை இனி ஆராய்வோம்.

பலதார மணத்தைத் தடுப்பது விபச்சாரத்தை வளர்க்கும்

ஆண்கள் பலதார மணம் செய்வதால் முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள். எனவே இதைத் தடுக்க வேண்டும் என்பது தான் இந்தப் பிரச்சினையில் எடுத்து வைக்கப்படும் முக்கியமான வாதம்.

முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள் என்பது தான் இந்தக் கோரிக்கைக்குக் காரணம் என்றால் பலதார மணத்திற்கு மட்டும் அவர்கள் தடை கோரக் கூடாது. மாறாக மனைவி அல்லாத பிற பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்வதற்கும் அவ்வப்போது பல பெண்களுடன் விபச்சாரம் செய்வதற்கும் தடை விதிக்குமாறு கோர வேண்டும்.

ஆனால் நமது நாட்டிலும், உலகின் பெரும்பாலான நாடுகளிலும் வைப்பாட்டிகள் வைத்துக் கொள்ளவோ, விபச்சாரம் செய்யவோ தடை இல்லை. தங்கு தடையின்றி ஆண்கள் இதைச் செய்து வருகின்றனர். இதற்கு எதிராக பெண்ணுரிமை பேசுவோர் கூட குரல் கொடுப்பதில்லை.

இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்வதை விட இது பெரிய அநியாயமாகும். ஏனெனில் பல பெண்களுடன் உறவு வைத்து அதனால் ஏற்படும் நோயை மனைவிக்கும் அவன் பரப்பும் வாய்ப்பு இதில் உள்ளது.

முதல் மனைவி பாதிக்கப்படுவது தான் பலதார மணத்தைத் தடை செய்ய வேண்டுமென வலியுறுத்திடக் காரணம் என்றால் விபச்சாரத்திற்கும், வைப்பாட்டிகள் வைத்துக் கொள்வதற்கும் எதிராக பெண்களின் இயக்கங்களோ, பெண்ணுரிமை பேசும் ஆண்களோ ஏன் வலிமையாகக் குரல் கொடுக்கவில்லை?.

நமது நாட்டுச் சட்டத்தையே எடுத்துக் கொள்வோம்!

முஸ்லிம்கள் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்யலாம்.

முஸ்லிமல்லாதவர்கள் இன்னொரு பெண்ணைச் சின்ன வீடாக வைத்துக் கொள்ளலாம்.

இது தான் நமது நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டமாகும். முஸ்லிம்கள் இன்னொரு பெண்ணை மணந்து கொள்வது தடுக்கப்பட வேண்டும் எனக் கூக்குரல் போடுவோர் முஸ்லிமல்லாத சமுதாயத்தினர் வைப்பாட்டி வைத்துக் கொள்வதைத் தடுக்க சட்டம் போட வேண்டும் என்று இது வரை கேட்டார்களா?

விபச்சாரத்துக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் இருப்பதைக் கூட மன்னித்து விடலாம். ஆனால் நமது நாட்டில் உள்ள பெண்ணுரிமை இயக்கங்கள் அனைத்துமே விபச்சாரிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்றன. அவர்களைப் பாலியல் தொழிலாளிகளாக அங்கீகரிக்க வேண்டும் எனவும் குரல் எழுப்புகின்றனர்.

விபச்சாரிகளுக்கு ஆதரவாக நடத்தப்படும் மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் பெண்ணுரிமை இயக்கத்தினரும், முற்போக்கு சிந்தனையாளர்களும் பங்கெடுத்து வருகின்றனர்.

இதன் மூலம் அவர்கள் எதை ஆதரிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. விபச்சாரிகளை அங்கீகரிக்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை என்றால் அந்த விபச்சாரிகளிடம் செல்லும் ஆண்களையும் ஆதரிக்கிறார்கள். அதாவது மனைவி இருக்கும் போது அவளுக்கு துரோகம் செய்யும் கணவர்களுக்கு ஆதரவாக நிற்கிறார்கள் என்பதைத் தவிர இவர்களது நடவடிக்கைகளுக்கு வேறு என்ன பொருள்?

கட்டிய மனைவி பாதிக்கப்படுகிறாள் என்ற அக்கரையில் பலதார மணத்தை இவர்கள் எதிர்ப்பது உண்மை என்றால் கட்டிய மனைவிக்கு துரோகம் செய்யக் காரணமாக உள்ள விபச்சாரிகளைக் கடுமையாக வெறுக்க வேண்டும். மனைவியுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்தும் ஆண்களைத் தவறான பாதைக்கு இழுத்துச் செல்லக் காரணமான விபச்சாரிகளுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்குமாறு கோர வேண்டும்.

அவ்வாறு கோரக் கடமைப்பட்டவர்கள் விபச்சாரிகளுக்கு ஆதரவாக நிற்கிறார்கள்.

ஆண்கள் பல பெண்களை நாடக் கூடியவர்களாக உள்ளனர் என்பதையும், அதைத் தடுக்க முடியாது என்பதையும் அவர்களின் உள்ளுணர்வு உணர்த்துவது தான் அவர்களது இந்த நிலைமைக்குக் காரணம்.

பெண்ணுரிமை பேசுவோரும், முற்போக்குவாதிகளும் மனைவி அல்லாத இன்னொரு பெண்ணுடன் ஆண்கள் உறவு வைப்பதை ஆதரிக்கவே செய்கிறார்கள்.

இன்னொரு பெண்ணுடன் நீ உறவை வைப்பதாக இருந்தால் அவளைச் சட்டப்பூர்வமாக மணந்து கொள் என்று இஸ்லாம் கூறுகிறது.
மணந்து கொள்ளாமலேயே எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் உறவு வைத்துக் கொள் என்று இவர்கள் கூறுகிறார்கள்.

இவ்விரு நிலைகளில் எது சிறந்தது?

இன்னொரு பெண்ணுடன் வாழ்க்கை நடத்தும் போது அவளைச் சட்டப்பூர்வமான மனைவி என்று அறிவித்தால் அந்தப் பெண்ணின் உரிமை காக்கப்படுகிறது. வைப்பாட்டிகளுக்கோ எந்த விதமான உரிமையும் கிடையாது.

வைப்பாட்டியின் மூலம் ஒருவனுக்குப் பிறந்த குழந்தைக்கு மகன் என்ற உரிமையும் கிடையாது.

மனைவி இருக்கும் போது இன்னொரு பெண்ணை அனுபவிப்பதில் இவர்களுக்கு எந்த மறுப்பும் இல்லை. அவளை மணந்து கொள்வதில் மட்டும் தான் இவர்களுக்கு மறுப்பு இருக்கிறது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

ஆண்கள் பல பெண்களை நாடுவது அடியோடு ஒழிக்கப்பட முடியாத போது அதைக் குறைப்பதற்கு உரிய வழி என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும்.

ஒரு பெண்ணிடம் இன்பம் அனுபவித்து விட்டு அதற்காக எதிர்காலத்தில் எந்தப் பொறுப்பையும் ஆண்கள் சுமக்கத் தேவையில்லை எனும் போது அதிகமான பெண்களை ஆண்கள் நாடிச் செல்வார்கள்.

ஒரு பெண்ணிடம் இன்பம் அனுபவிப்பதாக இருந்தால் அவர்களுக்குச் சட்டப்படி மனைவி என்ற உரிமையை அளிக்க வேண்டும். அவள் பெற்றெடுக்கும் பிள்ளைகளுக்குச் சட்டப்படி பிள்ளைகள் என்ற உரிமையை அளிக்க வேண்டும். முதல் மனைவிக்கு உள்ள உரிமைக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இரண்டாம் மனைவிக்கும் வழங்க வேண்டும். எல்லா வகையிலும் இருவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடு விதிக்கும் போது மனைவி அல்லாத பெண்களை நாடுவோர் குறைவார்கள். தவிர்க்கவே இயலாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் மட்டுமே இன்னொரு திருமணம் செய்ய முயல்வார்கள். எனவே பலதார மணத்திற்கான அனுமதி தான் முதல் மனைவிக்கும் இரண்டாம் மனைவிக்கும் உண்மையில் பாதுகாப்பானது.

நமது நாட்டில் உள்ள சட்டப்படி எந்த ஆணும் எந்தப் பெண்ணுடன் வேண்டுமானாலும் விபச்சாரம் செய்யலாம். ‘அந்தப் பெண் மைனராக (18 வயதுக்குட்பட்டவராக) இருக்கக் கூடாது; பலாத்காரம் செய்யப்பட்டிருக்கக் கூடாது’ என்பது மட்டுமே நிபந்தனை.

மேலும் விபச்சாரத்தைத் தொழிலாக நடத்துவது தான் நமது நாட்டில் குற்றமே தவிர விபச்சாரம் குற்றமில்லை. இதன் காரணமாகத் தான் விலைமாதர்களிடம் ஒரு ஆண் செல்லும் போது விலைமாது மட்டும் தண்டிக்கப்படுகிறாள். ஆண் விடுவிக்கப்படுகிறான்.

இது போல் திருமணம் செய்யாமல் ஒரு பெண்ணுடன் ஒருவன் சேர்ந்து எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் வாழலாம். அவள் இன்னொருவரின் மனைவியாக இருக்கக் கூடாது என்பதைத் தவிர இதற்கு வேறு நிபந்தனை ஏதுமில்லை.

பலதார மணத் தடை நடைமுறைச் சாத்தியமற்றது

எந்த ஒரு சட்டத்தை இயற்றுவதாக இருந்தாலும் அச்சட்டம் நடைமுறைக்குச் சாத்தியமானது தானா என்பதைத் தான் முதலில் கவனிக்க வேண்டும்.

நமது நாட்டில் முஸ்லிம்களுக்குப் பலதார மணத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. முஸ்லிமல்லாதவர்களுக்கு அது அறவே தடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிமல்லாதவர்கள் ஒரு மனைவி இருக்கும் போது இன்னொரு பெண்ணை மணப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

முஸ்லிமல்லாத மக்கள் பலதார மணம் செய்யக் கூடாது என்று போடப்பட்ட தடைச் சட்டத்தின் நிலை என்ன?

யாருக்கு பலதார மணத்திற்கு இந்த நாட்டில் அனுமதியுள்ளதோ அவர்களை விட யாருக்கு பலதார மணம் தடை செய்யப்பட்டுள்ளதோ அவர்கள் தான் அதிக அளவில் பலதார மணம் புரிந்துள்ளனர்.

1951 முதல் 1960 வரை பலதார மணம் புரிந்தவர்கள் பற்றிய புள்ளி விபரம் தயாரிக்கப்பட்டது. அந்தப் புள்ளி விபரப்படி
இந்துக்கள் 5.06 சதவிகிதமும்
முஸ்லிம்கள் 4.31 சதவிகிதமும்
பழங்குடியினர் 17.98 சதவிகிதமும்
பலதாரமணம் புரிந்துள்ளனர்.

அதாவது 1951 முதல் 1960 வரை நூறு முஸ்லிம்களில் நான்கு பேர் பலதாரமணம் செய்துள்ளனர். ஆனால் நூறு இந்துக்களில் ஐந்து பேர் பலதாரமணம் புரிந்துள்ளனர். நூறு பழங்குடியினரில் 18 பேர் பலதாரமணம் புரிந்துள்ளனர் என்று இந்தப் புள்ளி விபரம் கூறுகிறது.

சமத்துவத்தை நோக்கி (Towards Equality) என்ற தலைப்பில் 1974-ல் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

பழங்குடியினரும் இந்துக்கள் தான். அவர்களையும் இந்துக்களுடன் சேர்த்துக் கணக்கிட்டால் பலதார மணம் புரிந்த இந்துக்கள் பலதார மணம் புரிந்த முஸ்லிம்களை விட மிக அதிக சதவிகிதமாக இருப்பார்கள்.

பலதார மணத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தும் இந்துக்களே அதிக அளவில் பலதார மணம் செய்துள்ளனர் என்பதிலிருந்து பலதாரமணத் தடைச் சட்டம் நடைமுறைச் சாத்தியமற்றது என்பதை விளங்கலாம்.

இதனால் தான் ராம் விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட பலர் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் வாழ்க்கை நடத்திக் கொண்டே நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் முடிகின்றது.

தி.மு.க தலைவர் கருணாநிதி முஸ்லிமாக இல்லாதிருந்தும் இரண்டு பெண்களுடன் குடும்பம் நடத்துகிறார். இது சட்டப்படி குற்றம் என்றால் பல தடவை அவர் தமிழகத்தின் முதல்வராக ஆனது எப்படி?

இரண்டு பெண்களுடன் குடும்பம் நடத்தும் கா.காளிமுத்து பல தடவை அமைச்சராகவும், சபாநாயகராகவும் ஆனது எப்படி?

அறந்தாங்கி திருநாவுக்கரசு பல தடவை மாநில அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் ஆனது எப்படி?

இரண்டாம் திருமணம் செய்து நீதிமன்றங்களால் தண்டிக்கப்படாதவர்கள்

இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டாம் திருமணம் செய்த போது முதல் மனைவிகள் பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றங்களின் கதவைத் தட்டியுள்ளனர். நீதி மன்றங்கள் இரண்டாம் திருமணம் செய்து கொண்டவரைத் தண்டிக்க மறுத்து விட்டதையும் நாம் காண முடிகின்றது.

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த, இந்து மதத்தைச் சேர்ந்த பாவ்ராவ் சங்கர் லோகாண்டே முதல் மனைவி இருக்க இரண்டாம் திருமணம் செய்தார். முதல் மனைவி இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். கீழ்நிலை நீதிமன்றங்களும், உயர் நீதிமன்றமும் அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தன. ஆனால் பாவ்ராவ் சங்கர் லோகாண்டே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த போது இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் விடுபட்டதால் இரண்டாவதாக நடந்தது திருமணமே இல்லை. எனவே பாவ்ராவ் சங்கர் இரண்டாம் திருமணம் செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
(பாவ்ராவ் சங்கர் லோகாண்டே எதிர் மராட்டிய அரசு AIR 1965 SC 1566)

சுரேஷ் சந்திர கோஷ் என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்தார். அவரது மனைவி பிரியா பாலா கோஷ் அவருக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கிலும் உச்சநீதிமன்றம் இரண்டாம் திருமணம் செய்த சுரேஷ் சந்திர கோஷைத் தண்டிக்கவில்லை. இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் நடந்தது நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி சுரேஷைத் தண்டிக்க மறுத்து விட்டது.
(பிரியா பாலா கோஷ் எதிர் சுரேஷ் சந்திர கோஷ் AIR 1971 SC 1153)

ஆந்திராவைச் சேர்ந்த எல்.வெங்கடரெட்டி என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்தார். முதல் மனைவி லிங்காரி ஒப்புல்லம்மா கணவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கிலும் உச்சநீதிமன்றம் வெங்கடரெட்டியைத் தண்டிக்கவில்லை. இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் செய்யப்படாததே காரணம். (லிங்காரி ஒப்புல்லம்மா எதிர் எல்.வெங்கடரெட்டி மற்றும் சிலர் AIR 1979 SC 848)

காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பங்காரி என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்தார். இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் விடுபட்டதால் அது திருமணமே அல்ல. இரண்டாம் மனைவி அவரது வைப்பாட்டி தான். வைப்பாட்டி வைத்துக் கொள்வதைத் தண்டிக்க சட்டத்தில் இடமில்லை என்று காஷ்மீர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. (பங்காரி எதிர் ஜம்மு கஷ்மீர் மாநில அரசு AIR 1965 JK105)

இப்படி ஏராளமான வழக்குகளில் நாட்டின் உச்சநீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் தீர்ப்பளித்துள்ளன.

பலதார மணத்தைத் தடுப்பதால் ஏற்படும் தீய விளைவுகள்

ஆண்களில் அதிகமானோர் ஒரு மனைவியுடனேயே காலம் முழுவதும் வாழ்பவர்களாக உள்ளனர் என்றாலும் கனிசமான ஆண்கள் சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புகுந்து இரண்டாம் திருமணம், மூன்றாம் திருமணம் செய்கின்றனர்.
மற்றும் சிலர் வைப்பாட்டி வைத்துக் கொண்டு முதல் மனைவிக்குத் துரோகம் செய்பவர்களாக உள்ளனர்.

வேறு சிலர் அவ்வப்போது விபச்சாரிகளிடமும், அறிமுகமான பெண்களிடமும் தகாத உறவு வைப்பவர்களாக உள்ளனர்.

இவர்களைத் தடுத்து நிறுத்த எந்தச் சட்டமும் இல்லை. இத்தகையோரால் ஏற்படும் மோசமான பாதிப்புகளையும், தீய விளைவுகளையும் அறிந்தால் தவறான வழியில் செல்லும் நிலையில் உள்ளவர்களுக்குப் பலதார மணத்தை அனுமதிப்பதைக் குறை கூற மாட்டார்கள்.

மலேசிய இந்து மக்கள் போர்க்கொடி

இதனால் ஏற்படும் தீய விளைவுகளை மலேசிய இந்து இயக்கங்களின் தீர்மானத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

முஸ்லிம்களைத் தவிர மற்றவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணக்கக் கூடாது என்ற சட்டம் நமது நாட்டைப் போலவே மலேசியாவிலும் உள்ளது.

அங்கே முஸ்லிமல்லாதவர்கள் தமக்கும் பலதார அனுமதி வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

திருமணம் ஆகாமல் பல பெண்கள் கர்ப்பமடைவதாகவும், அவர்கள் கைவிடப்படுவதாகவும், தகப்பனில்லாத குழந்தைகள் தாறுமாறாக அதிகரித்து விட்டதாகவும் கருதும் மலேசிய நாட்டு இந்துக்கள் இதைத் தவிர்க்க ஒரே வழி பலதார மணம் மட்டுமே என்ற உண்மையை உணர ஆரம்பித்துள்ளனர்.

மனைவிக்குச் செய்யும் துரோகம் என்ற அடிப்படையில் பலதார மணத்துக்குத் தடை போடப்பட்டாலும் எதைத் துரோகம் என்று கருதுகிறார்களோ அதைத் தடுக்க முடியவில்லை.

மலேசியாவில் உள்ள பி.பி..பி கட்சி தனது இளைஞர் அணி மாநாட்டை நடத்தியது. அந்த மாநாட்டில் பி.பி.பியின் இளைஞர் அணித் தலைவர் முருகையா பின்வருமாறு பிரகடனம் செய்தார்.

‘சமுதாயத்தில் திருமணம் புரிந்த பல ஆடவர்கள் மற்ற பெண்களுடன் வைத்துக் கொள்ளும் உறவின் மூலம் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குரியதாக இருக்கிறது. இந்தப் பெண்களின் பிரச்சினைகள், சிக்கல்களைக் கருதி முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இருதார அனுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும்’ என்பது தான் அவரது முழக்கம்.

இவரது கருத்துக்கு மலேசியாவில் உள்ள சில பெண்கள் அமைப்புகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

ஆனாலும் இந்த எதிர்ப்புகளால் முருகையா தனது கருத்தை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை.

‘நான் சொன்ன கருத்தும் ஒரு வகையில் பெண்ணுரிமை சம்மந்தப்பட்டது தான். எனது கருத்தை இந்த மகளிர் பிரிவுகள் தவறாக அர்த்தம் கொண்டு விட்டன. எனது கருத்துக்கு இவர்கள் தெரிவிக்கும் ஆட்சேபமானது இரண்டாவது மனைவிகள் பலரின் உரிமைகளை இவர்களே மறுதலிக்கிறார்கள் என்றே அர்த்தமாகிறது. பி.பி.பி இளைஞர் உச்ச மன்றத்தில் எல்லோரும் கூடிப் பேசியே இந்தக் கருத்தை நான் வலியுறுத்தினேன். இது எனது சொந்தக் கருத்து மட்டுமல்ல. இரண்டு பெண்டாட்டிகளை வைத்துக் கொள்ளுங்கள் என்று யாரையும் நாங்கள் ஊக்குவிக்கவில்லை. இருதார அனுமதியை அரசாங்கம் தந்தால் அது முஸ்லிமல்லாதாரிடையே நிலவும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டும் என்பதே எனது வாதம். தன்னால் பாதிக்கப்பட்ட இரண்டாவது பெண்ணுக்கும் ஒரு ஆண் பொறுப்புள்ளவனாக இருக்கச் செய்யும்’ என்று தனது கருத்தை முருகையா ஆணித்தரமாகக் குறிப்பிடுகிறார்.

பினாங்கு மாநில பி.பி.பி மகளிர் அணித் தலைவர் எலிசபெத் ஸ்டெனிஸ் லாவ்ஸ் என்பவர் முக்கியமானவர்.

மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு இருதார அனுமதியை வழங்கலாம்.

என் கணவரே இன்னொரு மனைவியை மணக்க நானே அனுமதிப்பேன்.

இருவரையும் வைத்துக் காப்பாற்றுவதாக உறுதியளித்தால் நானே என் கணவருக்கு அனுமதியளிப்பேன்.

இது ஒன்றும் பாவம் அல்ல. என் கருத்தைப் பல பெண்கள் ஆமோதிப்பார்கள்.

ஒரு கணவர் இரண்டாவது பெண்ணுடன் வைக்கும் தொடர்பின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்தே பி.பி.பி இளைஞரணி தனது கருத்தை வலியுறுத்தியது. அதனை நானும் ஆதரிக்கிறேன்.

இந்தக் குழந்தைகள் தகப்பன் இல்லாக் குழந்தைகள் என்று அநியாயமாக முத்திரை குத்தப்படுகின்றனர்.

இருதார விஷயத்தில் பெண்கள் கனவுலகில் ஒளிந்து கொண்டிருக்கும் போக்கைக் கைவிட்டு வெளியே வர வேண்டும். நடைமுறை உலகுக்கு அவர்கள் திரும்ப வேண்டும்.என்றெல்லாம் இவர் தனது ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர்.

தகப்பனில்லாத இளைஞர்கள் அதிகளவில் உருவாகியுள்ளதால் இளைஞர்களிடையே இந்தக் கருத்து வேகமாகப் பரவி வருகிறது.
மலேசியாவில் முஸ்லிமல்லாத சமுதாயத்தின் நிலையைப் பற்றி தேசியப் பதிவு இலாகா பின்வருமாறு அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாட்டில் திருமணம் ஆகாமல் பெண்கள், குழந்தைகள் பெறும் சம்பவங்கள் கவலைக்குரிய கட்டத்தை அடைந்துள்ளது. இவர்களில் அதிகமானோர் கல்லூரிப் பெண்கள். 17 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இதில் அதிகமாக இருக்கிறார்கள் என்று தேசிய பதிவு இலாகா இயக்குனர் டத்தோ அஜிகான் கூறுகிறார்.
ஆதாரம்: 5-1-2002 தேதியிட்ட மலேசியா நண்பன் நாளிதழ்.

இரண்டாம் தாரமாகவாவது மணந்து கொண்டு சட்டப்பூர்வ உரிமை தந்தால் மட்டுமே முஸ்லிம் பெண்கள் தங்களை ஆண்களிடம் ஒப்படைக்கிறார்கள்.

முஸ்லிமல்லாத பெண்களோ ஆசை வார்த்தை காட்டப்பட்டு ஏமாற்றப்படுகின்றனர். குழந்தை பெற்ற பின் நிராதரவாக விடப்படுகின்றனர்.

இவர்களின் எண்ணிக்கை எல்லை கடந்து விட்ட நிலையில் தான் மலேசிய இந்து இளைஞர்கள் மத்தியில் முருகையாவின் கருத்துக்கு அமோக வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விபரங்களிலிருந்து பலதாரமணம் என்பது அனைத்து சமுதாயத்திலும் தவிர்க்க முடியாததாகவே உள்ளதை அறிந்து கொள்ளலாம்.

பலதார மணத்தை அனுமதிப்பதற்கான காரணங்கள்

பலதார மணத்தை எந்தச் சட்டத்தினாலும் தடுக்க முடியவில்லை. அப்படியே தடுத்தாலும் சின்ன வீட்டையும், விபச்சாரத்தையும் தடுக்க முடியவில்லை என்பதால் மட்டும் இஸ்லாம் பலதார மணத்தை அனுமதிக்கவில்லை. மாறாக பலதார மணத்தை இஸ்லாம் அனுமதித்திருப்பதற்கு இன்னும் பல காரணங்களும், நியாயங்களும் உள்ளன

  1. பெண்களின் பிறப்பு விகிதம் குறைவு:-

இல்லற வாழ்வு மூலம் பெறப்படும் உடல் சுகம் மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்று. ஆண், பெண் இரு பாலருக்குமே இது இன்றியமையாத தேவையாகும்.

மற்ற சுகங்களைக் கூடத் தியாகம் செய்து விடுபவன் இந்த உடல் சுகத்தை எளிதில் தியாகம் செய்வதில்லை.

இந்த சுகத்தைத் தரும் ஒரு பெண்ணுக்காக ஒரு ஆண் எதுவும் செய்யத் தயாராகி விடுகிறான். உற்றார் உறவினரையும், பெற்றோரையும் கூட உதறி எறிந்து விடத் துணிந்து விடுகிறான். இந்த சுகத்தைத் தருகின்ற ஆணுக்காக ஒரு பெண் எந்த தியாகத்தையும் செய்கிறாள்.

சிலர் இந்த சுகத்தை அடைவதற்காக எத்தகைய இழி செயலையும் செய்யத் துணிந்து விடுவதையும் நாம் காண்கிறோம். இதை அடைவதற்கு யாராவது குறுக்கே நின்றால் அவரைக் கொலை செய்தாவது அடைய முயற்சிக்கின்றனர்.

உணர்வுகள் பொங்கி எழும் பருவத்தில் இந்த உடல் சுகம் கிடைக்கவில்லையானால் அத்தகையோர் மன நோய்க்கு ஆளாகி விடுவதை இரு பாலரிடமும் நாம் காண முடிகின்றது. மன நோய் நிபுணர்களும் இதை உறுதி செய்கின்றனர். மனித வாழ்வில் மிகவும் அவசியமான இந்தச் சுகம் எந்த மனிதனுக்கும் மறுக்கப்படக் கூடாது என்பதில் எவருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இந்தச் சுகம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுமானால் உலகில் ஆண்களும், பெண்களும் சம அளவில் பிறக்க வேண்டும். அப்போது தான் இரு பாலரும் இந்தச் சுகத்தைப் பெற இயலும்.

ஆனால் இந்த நிலை உலகில் இருக்கின்றதா? என்றால் பல நூற்றாண்டுகளாகவே இல்லை என்று தான் கூற வேண்டும். ஆண்களை விடப் பெண்களே அதிக அளவில் பிறக்கின்றார்கள். விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில நாடுகள் வேண்டுமானால் சில கால கட்டங்களில் இதிலிருந்து விலக்குப் பெறலாம். ஆனால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் பெண்களின் பிறப்பு விகிதமே அதிகம் என்பதை எவரும் மறுக்க முடியாது.

உலகில் ஆண்களின் எண்ணிக்கைக்கும், பெண்களின் எண்ணிக்கைக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லையே! சிறிய அளவில் தானே பெண்கள் அதிகமாகவுள்ளனர் என்று நினைக்கலாம்.

ஆனால் திருமணத்துக்குரிய தகுதி பெற்றவர்கள் என்ற அடிப்படையையும் நாம் சேர்த்துக் கணக்கிட வேண்டும்.

ஆண்கள் 25 வயதுக்கு மேல் தான் திருமணம் செய்யும் நிலையை அடைகிறார்கள். பெண்களோ பதினைந்து வயதிலேயே திருமணம் செய்விக்கப்படுகிறார்கள். (சட்டப்படி 18 வயது என்பதெல்லாம் ஏட்டில் உள்ளதே தவிர நாட்டில் இல்லை).

அதாவது திருமணம் செய்யும் தகுதி பெற்றவர்கள் என்று எடுத்துக் கொண்டால் பெண்களை விட ஆண்கள் பத்து வருடங்கள் பின் தங்கியுள்ளனர்.
ஒரு ஊரில் ஒரு நாளில் 25 ஆண் குழந்தைகள், 25 பெண் குழந்தைகள் பிறக்கின்றன’ என வைத்துக் கொள்வோம். பதினைந்து வருடங்கள் நிறைவடையும் போது 25 பெண்களும் திருமணத்துக்குத் தயாராக நிற்பார்கள். 25 ஆண் குழந்தைகளில் ஒருவனும் திருமணத்துக்குத் தயாராகியிருக்க மாட்டான்.

உடற்கூறு ரீதியாக சீக்கிரமே பெண்கள் முதிர்ச்சியடைவதால் திருமணம் செய்யும் வயதுடைய ஆண்கள், திருமணம் செய்யும் வயதுடைய பெண்கள் என்று எடுத்துக் கொண்டால் ஆண்களை விடப் பெண்கள் மிக அதிகமாகவே உள்ளனர் என்பதை அறியலாம்.
பெண்கள் அதிகமாகவும், ஆண்கள் குறைவாகவும் உள்ள சூழ்நிலையில் கனிசமான பெண்களுக்கு இந்தச் சுகம் கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லாமல் போய் விடுகிறது.

நொண்டி, முடம், கூன், குருடு போன்ற உடல் ஊனமுற்ற ஆண்களுக்கும், மது, சூது, விபச்சாரம் போன்ற தீமைகளில் ஈடுபட்டு உள்ளம் ஊனமுற்ற ஆண்களுக்கும் சர்வ சாதாரணமாக மனைவியர் கிடைத்து விடுகின்றனர். அழகும், நல்லொழுக்கமும் உள்ள மங்கையர் பலர் இந்தச் சுகத்தை அடைய முடியாத நிலையில் உள்ளனர். இது பெண்களின் விகிதாச்சாரம் எந்தளவுக்கு அதிகமாகியுள்ளது என்பதற்கு நிதர்சனமான சான்று ஆகும்.

இந்த ஏற்றத் தாழ்வை சமன் செய்ய என்ன செய்வது?

ஆண்களும், பெண்களும் சம அளவில் பிறக்க வேண்டும். நடைமுறையில் அவ்வாறு இல்லை.

சம வயதில் இருவரும் திருமணத்துக்கு உடல் ரீதியாக தயாராக வேண்டும். இது சாத்தியமில்லை.

அல்லது அன்றைய அறியாமைக் கால மக்கள் செய்தது போல் உயிருடன் பெண்களைப் புதைத்து பெண்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். மனசாட்சி உள்ள எவரும் இதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

இதற்கு ஏதேனும் பரிகாரம் கண்டே ஆக வேண்டும். பரிகாரம் காணத் தவறினால் பல தீய விளைவுகளைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

மண வாழ்வை அடைய முடியாத பெண்கள் மன நோய்க்கு ஆளாவது,

அல்லது தவறான வழிகளிலேனும் அந்தச் சுகத்தை அடைந்திடத் துணிவது,

வசதியுள்ளவர்கள் தங்கள் பெண்களுக்காக மாப்பிள்ளைகளை அதிக விலை கொடுத்து வாங்குவது

போன்ற பல தீய விளைவுகள் ஏற்படும்.

இந்த நிலைகளை உலகம் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறது.

ஆண்களை விடப் பெண்களே அதிக அளவில் மன நோய்க்கு ஆளாவதையும், இயல்பிலேயே வெட்க உணர்வு அதிகம் பெற்றிருக்கின்ற பெண்கள் தெருவில் நின்று கொண்டு வெட்கத்தைத் துறந்து ஆண்களை அழைப்பதையும் நாம் காண்கிறோம்.

எனவே சில ஆண்களாவது பலதார மணம் புரிவதில் தான் மணவாழ்வு கிடைக்காமல் பெருமளவு தேங்கி நிற்கும் பெண்களுக்கு மறுவாழ்வு இருக்கிறது.

  1. ஆண்களின் இறப்பு விகிதம் அதிகம்

போர்க் களங்களும் போராட்டங்களும்:-

பிறப்பு விகிதத்தைப் பொறுத்த வரை பெண்களே மிகைத்து நிற்கிறார்கள் என்றால் இறப்பு விகிதத்திலும் ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. இயற்கையின் சீற்றம், நோய், முதுமை போன்ற காணரங்களால் ஏற்படும் மரணத்தைப் பொறுத்த வரை சமமாகவே இறக்கின்றனர்.
ஆயினும் வேறு சில வழிகளில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் இறப்பெய்துகின்றனர்.

மனித சமுதாயம் தோன்றியதிலிருந்து இன்று வரை பல போர்களை உலகம் சந்தித்துள்ளது. மனிதனின் போர்க்குணம் உலகம் அழியும் வரை மாறுவதாகத் தெரியவில்லை.

இன்னும் சொல்வதென்றால் கடந்த காலத்தை விடப் போர் செய்து மனித சமுதாயத்தை அழித்தொழிப்பதில் மனிதன் மிகவும் முன்னேறியே இருக்கிறான். வாள், வேல் போன்ற ஆயுதங்களால் மட்டுமே போர் செய்து குறைந்த எண்ணிக்கையில் எதிரிகளை அழிக்கத் தெரிந்திருந்த மனிதன் இன்று ஒரு நொடிப் பொழுதில் பல்லாயிரம் எதிரிகளை அழிக்க வல்ல அணு ஆயுதங்களைத் தயார் செய்து விட்டான். கண்டம் விட்டுக் கண்டம் சென்று தாக்கக் கூடிய நவீன ரக ஏவுகணைகளைக் கண்டு பிடித்து விட்டான்.

இது போன்ற போர்க்களங்களில் அழிக்கப்படுவது ஆண் வர்க்கம் மட்டுமே. அவர்கள் மட்டுமே போரில் நேரடியாக ஈடுபடுகின்றனர். இந்த அழிவு பெண்களுக்குப் பொதுவாக ஏற்படுவதில்லை. 1914 ஆகஸ்ட் 14ல் துவங்கி, 1917 மார்ச் 3ல் முடிவுற்ற முதல் உலகப் போரை எடுத்துக் கொள்வோம். சுமார் 33 மாதங்கள் நடந்த இந்தப் போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 லட்சம்.
ரஷ்யா 17,00,000
பிரான்ஸ் 13,57,800
பிரிட்டன் 9,08,400
இத்தாலி 6,50,000
அமெரிக்கா 126,000
ருமேனியா 3,35,700
செர்பியா45,000
பெல்ஜியம்13,700
கிரிஸ் 5000
போர்ச்சுகல் 7000
ஜெர்மனி 17,73,700
ஆஸ்திரேலியா 1,20,0000
உஸ்மானியப் பேரரசு 3,25,000
பல்கேரியா 87,500
மொத்தம் 85லட்சத்து 34 ஆயிரம்.

இரண்டாம் உலகப் போரை எடுத்துக் கொள்வோம்

ஆஸ்திரேலியா 23,250
பெல்ஜியம் 7750
பிரேசில் 1000
கனடா 37500
சீனா 1324500
செக் 6750
டென்மார்க் 4250
பிரான்ஸ் 205750
கிரீஸ் 16250
இந்தியா 24250
நெதர்லாந்து 13750
நியூசிலாந்து 12250
நார்வே 4750
போலந்து 320000
தென் ஆப்ரிக்கா 8750
பிரிட்டன் 264500
அமெரிக்கா 405500
ரஷ்யா 13600000
யூகோஸ்லோவியா 305000
ஆஸ்திரேலியா 380000
பின்லாந்து 79000
ஜெர்மனி 3300000
ஹங்கேரி 147500
இத்தாலி 262500
ஜப்பான் 1140500
ருமேனியா 300000
மொத்தம் 2 கோடியே 21 லட்சம்.
ஆதாரம்: மைக்ரோ சாஃப்ட் என்சைக்ளோபீடியா

இது போல் உலகில் நடந்த போர்களில் பல கோடிப்பேர் மாண்டிருக்கிறார்கள். நெப்போலியன் நடத்திய போர்களில் மட்டும் 20 லட்சம் மக்கள் மாண்டிருக்கிறார்கள்.

வியட்நாமில் அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவும் நிகழ்த்திய படுகொலைகளும், அரபு, இஸ்ரேல், ஈரான், ஈராக் யுத்தப் படுகொலைகளும், இலங்கை, பாலஸ்தீன் மக்களின் உரிமைப் போராட்டங்களும், சமீபத்தில் ஆப்கான் மீது அமெரிக்கா குண்டுகளை வீசி ஒரு லட்சம் அப்பாவிகளைக் கொன்றதும், இராக் மீது அமெரிக்கா நடத்திய அநியாயத் தாக்குதலும் பெரும்பாலும் ஆண் வர்க்கத்தையே அழித்தொழித்துள்ளன.

பஞ்சாப், காஷ்மீர், கூர்க்காலாந்து, போராட்டங்களாகட்டும்; ஹிந்து – முஸ்லிம், வகுப்புக் கலவரங்களாகட்டும்; வன்னிய, – ஹரிஜன், தேவர் ஆகியோரிடையே ஏற்படும் சாதிக் கலவரங்களாகட்டும்; வர்க்கப் போராட்டங்களாகட்டும் இதில் எல்லாம் முழுமையாக ஆண்கள் தாம் ஈடுபடுகிறார்கள். அதுவும் இள வயது ஆண்கள்! ஆண்டொன்றுக்கு கோடிக்கணக்கில் மாண்டு விடும் இளைஞர்களின் இளம் விதவை மனைவிகளின் நிலை என்ன?

கன்னியர்களுக்கே மணவாழ்வு கிடைக்காத போது ஏற்கனவே இந்த சுகத்தை அனுபவித்த இந்த விதவைகள் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு ஏதேனும் வழி செய்ய வேண்டாமா?

விதவைகளாகவே ஏக்கத்தில் தங்கள் வாழ்வைக் கழிக்க வேண்டுமா?

அல்லது தவறான வழிகளில் அந்த சுகத்தை அடைய வேண்டுமா?

அல்லது உடன் கட்டை ஏற வேண்டுமா?

நியாய உணர்வு படைத்த எவரும் இம்மூன்றில் எதனையும் ஆதரிக்க மாட்டார்.

ஆண்களை விட குறைந்த எண்ணிக்கையில் பெண்கள் பிறப்பதாலும், ஆண்களை விட பத்து வருடங்களுக்கு முன் பெண்கள் திருமணத்திற்கு தயாராவதாலும், பெண்களை விட ஆண்கள் அதிக எண்ணிக்கையில் மரணிப்பதாலும் அனைத்து பெண்களுக்கும் வாழ்க்கைத் துணை கிடைப்பது அறவே சாத்தியமற்றதாகும்.

தவறான வழியில் சென்று விடுவோம் என்று அஞ்சுவோர் மட்டுமாவது மற்றொரு திருமணம் செய்தால் தான் இந்த எற்றத் தாழ்வைச் சரி செய்து அனைத்துப் பெண்களுக்கும் வாழ்க்கைத் துணை கிடைப்பது சாத்தியமாகும்.

  1. தற்கொலைகள்:

போர்க்களங்கள், போராட்டங்களில் மட்டுமின்றி தற்கொலை செய்யும் பெண்களை விட தற்கொலை செய்யும் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் ஆண்களின் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கிறது.
வருடம் 1982 ஆண்கள் 3314 பெண்கள் 2076
வருடம் 1983 ஆண்கள் 3366 பெண்கள் 2096
வருடம் 1984 ஆண்கள் 4450 பெண்கள் 3021

இது தமிழ்நாட்டில் 82, 83, 84 ஆகிய மூன்று ஆண்டுகளில் தற்கொலை செய்தவர்களின் அதிகாரப்பூர்வமான பட்டியல். (ஆதாரம்: 12.6.88 தினமணி கதிர்)

பிறப்பில் குறைவாக இருப்பதோடு, இறப்புகளிலும் ஆண்கள் அதிகமாகி விடுகிறார்கள் என்பதிலிருந்து ஆண்களின் பற்றாக்குறையை நன்கு உணரலாம்.

ஏற்கனவே குறைவாகப் பிறக்கின்ற ஆண் வர்க்கம், அதிகமாக அழிவுக்கு ஆளாகும் போது, பலதார மணத்தைத் தவிர வேறு என்ன பரிகாரம் தான் காண முடியும்?

  1. வரதட்சணை:

திருமணத்தின் மூலம் மட்டுமே உடல் சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற பண்பாடுள்ள இந்தியா போன்ற நாடுகளில் வரதட்சணைக் கொடுமை தாண்டவமாடுவதற்கும் இது காரணமாக உள்ளது.

ஆண் மகனைப் பெற்றவர்கள் மாப்பிள்ளையின் ரேட்டை’ அதிகமாக்கிக் கொண்டே செல்வதும் கிலோ கணக்கில் நகைகள் கேட்பதும் லாரிக் கணக்கில் சீர் வரிசை என்ற பெயரில் கொள்ளையடிப்பதும் அதிகமாகி வருகின்றன. பெண்கள் மலிவாகக் கிடைக்கிறார்கள் என்பதற்காக ஆண் வர்க்கத்தின் கொடுமை எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது.

வசதி படைத்தவர்கள் இந்தப் போட்டியில் ஜெயித்து விடுகிறார்கள். வசதியற்ற ஏழைப் பெண்கள் நாதியற்று நிற்கிறார்கள்.

மானமுள்ள பெண்கள் என்றால் ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டே மன நோய்க்கு ஆளாகி விடுகிறார்கள்;

அல்லது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

மானம் கெட்டவர்கள் என்றால் வீதிக்கு வந்து விடுகிறார்கள்.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை வலியுறுத்துவோர் மன வாழ்வுக்கு வசதியின்றி ஏங்கி நிற்கும் இத்தகைய பெண்களுக்கு என்ன பரிகாரம் வைத்திருக்கிறார்கள்?

பரிகாரம் காணத் தவறுவதால் ஏற்படக் கூடிய இந்தத் தீய விளைவுகளை எப்படித் தடுக்கப் போகின்றார்கள்? அந்த அபலைப் பெண்களுக்கு மாற்று வழி காட்டாமல் வெற்றுச் சட்டங்களால் இந்தத் தீய விளைவுகளைத் தடுத்து விட முடியும் என்று எண்ணுகிறார்களா?

சட்டங்கள் இயற்றப்பட்ட பின்னரும் வரதட்சணை ஒழிந்ததா? ஒழுக்கக் கேடுகள் மடிந்தனவா? இல்லையே! அப்படியானால் இதற்கு என்ன பரிகாரம்?

இத்தனையையும் கருத்தில் கொண்டு தான், நிபந்தனையுடன் இஸ்லாம் ஆண்களுக்கு நான்குக்கு உட்பட்டுப் பெண்களை மணந்து கொள்ள அனுமதி வழங்குகின்றது.

இந்த நிபந்தனைக்கு உட்பட்டு, விபச்சாரத்தில் விழுந்து விடுவோம் என அஞ்சுவோரும், சின்ன வீடு வைத்துக் கொள்வோரும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொண்டால் இதைச் சமன் செய்ய முடியும். அதனால் மட்டுமே இந்தத் தீய விளைவுகளைத் தடுத்து நிறுத்த முடியும். இவ்வாறு செய்வதால் மட்டுமே பெண்கள் மலிவாகக் கிடைக்கிறார்கள் என்ற நிலை

மாறும்; அதன் மூலம் வரதட்சணைக் கொடுமையும் ஒழியும்.

இதை ஒப்புக் கொள்ள மறுப்பவர்கள் நாம் குறிப்பிட்ட தீமைகளைத் தடுத்திட தக்க வழிகளையாவது கூற வேண்டும்.

  1. உயிருடன் சமாதி:

பெண் குழந்தைகள் பிறந்தவுடன் உயிருடன் கொன்று விடக் கூடிய கொடுமை பல பகுதிகளில் பரவி வருகின்றது. பஞ்சாப் மாநிலத்திலும், தமிழகத்தின் சேலம், மதுரை, தர்மபுரி, தேனி மாவட்டங்களிலும் இந்தக் கொடுமை பெருமளவு தலைவிரித்தாடுகின்றது.

கருவில் இருப்பது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்பதைக் கண்டறியும் கருவிகள் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு கருவிலேயே பெண் குழந்தைகள் சமாதி கட்டப்படும் நிலை உருவாகி வருகின்றது.

பெற்ற குழந்தைக்காக தமது சுகங்களைத் தியாகம் செய்யும் தாய்மார்கள் ஈவிரக்கமின்றித் தங்கள் பெண் குழந்தைகளைத் தாங்களே கொல்லத் துணிவதற்குக் காரணம் என்ன?

‘இப் பெண் குழந்தைகளை வளர்ப்பது சிரமம்; ஆண் குழந்தை என்றால் கோவணத்துடன் வெளியில் விட்டு விடலாம்; பெண் குழந்தை என்றால் அப்படி எல்லாம் விட்டு விட முடியாது. அப்பெண் குழந்தை பருவ வயதை அடைந்து விட்டால் அவளுக்குத் திருமணம் செய்தாக வேண்டும். ஆனால் மாப்பிள்ளைகள் கிடைப்பதில்லை. இதற்காகவே கொல்கிறோம்’ என்று பஞ்சாப் மாநிலம் மற்றும் சேலம், மதுரை மாவட்டங்களில் பெண்கள் கூறியதாக பி.பி.சி படம் பிடித்துக் காட்டுகிறது.

இந்தக் கொடுமையை ஒழிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவோர், இதற்கான காரணத்தைக் கண்டு கொள்ள மறுக்கின்றனர்.

வெறும் சட்டங்களால் இதை ஒழிக்க முடியுமா? இவற்றைக் குற்றமென அறிவிக்கும் சட்டங்கள் முன்பிருந்தே இருக்கத் தான் செய்கின்றன. இந்தச் சட்டங்கள் இருக்கும் நிலையில் தான் இந்தக் கொடுமைகள் தொடர்கின்றன.

காரணங்கள் களையப்படாத நிலையில் போடப்படும் எல்லாச் சட்டங்களுக்கும் இந்தக் கதி தான் ஏற்படும்.

இதற்குரிய காரணம் என்ன என்பது பெண் குழந்தைகளைக் கொல்லும் தாய்மார்களின் பேட்டியிலேயே தெளிவாகக் கூறப் பட்டு விட்டது. மாப்பிள்ளை கிடைக்காததே’ அந்தக் காரணம்.

இந்தக் காரணத்தைக் களைய இரண்டே வழிகள் தாம் உள்ளன. மாப்பிள்ளைகளின் உற்பத்தி அதிகரிக்க வேண்டும். இது சாத்தியமில்லை. இருக்கின்ற மாப்பிள்ளைகளைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். அதாவது மிகச் சிலராவது பல திருமணங்களைச் செய்ய வேண்டும். இஸ்லாம் அதைத் தான் கூறுகிறது.

இதை ஏற்க மறுப்பவர்கள் பேசாமல் பெண் சிசுக் கொலையை ஏற்றுக் கொள்ள வேண்டியது தான். பெண் சிசுக் கொலைக்கு எதிராக இவர்கள் நடத்தும் போராட்டமே பலதார மணத்தின் அவசியத்தை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

பெண்கள் வாழ்வதே கேள்விக் குறியாகிவிட்ட நிலையில் இவர்கள் சமத்துவம் பேசிக் கொண்டிருப்பது பிரச்சனையின் ஆழத்தை இவர்கள் உணரவில்லை என்பதை விளக்கிக் கொண்டிருக்கிறது.

பலதார மணம் அனுமதிக்கப்பட்டால் சில ஆண்டுகளிலேயே பெண் சிசுக் கொலை முழுமையாக நிறுத்தப்பட்டு விடும் என்பதை ஏனோ உணர மறுக்கிறார்கள்.

சமூக நலனை விட தங்கள் சுய நலனையே பெரிதாகக் கருதுவதால் தான் முற்போக்குப் பெண்டிர் பலதார மணத்தை எதிர்க்கின்றனர்.
சமூகத்தின் மீது பரிவும் கவலையும் கொண்டு சிசுக் கொலை ஒழிக்கப்பட வேண்டும் என்ற உண்மையான அக்கறையுடன் அணுகினால் பலதார மணம் தவிர வேறு பரிகாரமே இதற்கு இல்லை என்பதை ஐயமற உணர்வார்கள்.

பெண்களின் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும் வரையிலும், ஆண்களை விட பத்து வருடங்களுக்கு முன்பாகவே பெண்கள் மணவாழ்க்கைக்குத் தயாராவது இருக்கும் வரையிலும் இஸ்லாம் காட்டும் இந்தப் பரிகாரம் கட்டாயம் ஏற்கப்பட்டே ஆக வேண்டும். இதை மறுப்போர் இதற்கு நிகரான அல்லது இதை விடச் சிறந்த மாற்றுப் பரிகாரத்தை முன் வைக்க வேண்டும்

  1. பிரம்மச்சாரியம்:

மனைவி மக்களைக் காப்பாற்ற வேண்டுமே அதற்குரிய வசதிகள் தம்மிடம் இல்லையே என்று மன வாழ்வை மறுப்பவர்கள் அல்லது மண வாழ்வைத் தள்ளிப் போடுவோர், இந்தப் பற்றாக்குறையை இன்னமும் அதிகப்படுத்துகின்றனர். இந்த நிலையில் என்ன தான் செய்வது? மண வாழ்வுக்கு வழி இல்லாத கன்னியர்களையும், மண வாழ்வை அனுபவித்து இழந்த இளம் விதவைகளையும் கண்டுகொள்ளாமலேயே விட்டு விடுவதா? ஒழுக்கக் கேடுகளும் உடன் கட்டைகளும் தான் இதற்குப் பரிகாரமா? எண்ணிப் பாருங்கள்.

  1. தாம்பத்ய ஈடுபாடு:

இல்லற சுகம் அனுபவிப்பதற்காகவே மனிதர்கள் திருமணம் செய்கிறார்கள். இல்லற சுகம் தேவைப்படும் போது அது கிடைக்கவில்லை என்றால் திருமண வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாமல் போய் விடும்.
ஆண்களின் உடற்கூறையும் பெண்களின் உடற்கூறையும் எடுத்துக் கொண்டால் ஆண்களை விட பெண்கள் சீக்கிரமே தாம்பத்திய உறவுக்குத் தகுதியற்றவர்களாகி விடுகிறார்கள்.

தமது உணவு கடந்த கால உடற்பயிற்சி ஆகியவற்றின் காரணமாக மரணிக்கும் காலம் வரை கூட ஆண்கள் இல்லறத்தில் ஈடுபட இயலும். அதை விரும்பவும் இயலும். அறுபது அல்லது எழுபது வயது வரை, ஏன் அதற்கு மேலும் கூடக் குழந்தையை உருவாக்கும் சக்தி பெற்றவனாக ஆண் இருக்கிறான். அவனிடம் குழந்தையை உருவாக்கும் உயிரணுக்கள் முடிந்து போய் விடுவதில்லை.
பெண்களின் நிலை அவ்வாறில்லை. எவ்வளவு திடகாத்திமான பெண்களும் 50 வயதுடன் ஓய்ந்து விடுகிறார்கள். மாதந்தோறும் ஏற்பட்டு வந்த மாதவிடாயும் அந்தப் பருவத்தில் நின்று விடுகின்றது. உடலுறவிலும் நாட்டமின்றிப் போய் விடுகின்றது.

திடகாத்திரமாக இருக்கும் ஒருவன் தன் மனைவி உடலுறவில் நாட்டமின்றிப் போய்விடும் காலகட்டத்தில் அவனுக்கு அதில் நாட்டமிருந்தால் என்ன செய்வான்? அவனுக்கு ஏதேனும் பரிகாரம் காண வேண்டுமா? கூடாதா?

50 வயதைத் தாண்டியவர்களின் பார்வை தான் அன்னியப் பெண்களை அதிகம் நோக்குவதை நாம் பார்க்கின்றோம். சிறுமிகள், மற்றும் வேலைக்காரிகளைக் கற்பழிப்போரும் இத்தகையோர் தாம். அவர்களை மட்டும் சொல்லிக் குற்றமில்லை. காரணம், அவர்களுக்கு ஆசை இருக்கிறது; உடலில் வலு இருக்கிறது; ஆனால் அவர்களின் மனைவியர் அதற்கு ஏற்றவர்களாக இல்லை.மனைவிக்கு அந்த உணர்வு மங்கி விட்டது என்பதற்காக இவனும் தன் உணர்வைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியுமா?

ஒவ்வொன்றையும் அணுகுவதற்கு ஒரு நியாயமான முறை உண்டு. இந்த விஷயத்தில் உணர்வுகளுக்கு ஆளானவர்களையே நாம் கவனிக்க வேண்டும்.

பெண்களின் உடற்கூற்றை அறியாதவர்கள், இருவருக்குமுள்ள வித்தியாசத்தை உணராதவர்கள் தான், பலதார மணத்தைப் பாவமெனக் கருதுவர்.

வித்தியாசங்களை உணர்ந்து கொண்ட எவரும் இதை மறுக்கவே இயலாது. உண்மையாகவே தேவைப்படுவோருக்கு அதை அனுமதிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

மாதம் தோறும் அவர்களுக்கு ஏற்படுகின்ற மாதவிடாய்க் காலத்தில் இந்த உறவை அவர்களால் விரும்ப முடியாது. அப்படியே சில பெண்களின் உள்ளம் அதை விரும்பினாலும் அந்த நேரத்தில் அவர்களின் உடல் அதற்கு ஏற்றதாக இராது. உடலும், உள்ளமும் ஏற்றதாக இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அது போன்ற ஒரு அருவருப்பான சூழ்நிலையில் ஒரு ஆண் கிளர்ச்சியடையவும் முடியாது. அதுவும் ஏற்பட்டு விடும் என்று வைத்துக் கொண்டாலும் மருத்துவ ரீதியாகக் கூடப் பல விளைவுகள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவனது மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டு அந்த உபாதையினால் அவளுடன் அவனால் உறவு கொள்ள இயலவில்லை என்றால் அவனது நிலை என்ன? சில பெண்கள் 15 நாட்கள் வரை கூட மாதவிடாய்த் தொல்லைக்கு ஆளாகி விடுவதுண்டு. இது போன்ற காலக் கட்டத்தில் மாதா மாதம் இப்படி ஒரு நிலையை அவன் எதிர் கொள்ளும் போது அவன் என்ன செய்வான்? இத்தகையோர் குறைந்த எண்ணிக்கையினர் தானே என்று அலட்சியப் படுத்துவதா?

இவர்களைப் போன்றவர்கள் தாம் அதிக அளவில் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். அழகும், இளமையும் கொண்ட மனைவியர் வீட்டிலிருந்தும் விபச்சாரத்தைச் சிலர் நாடிச் செல்லக் காரணம் இது தான். இயற்கையாக அவர்களுக்கு அமைந்திருக்கும் உணர்வுகளுக்குப் போதிய வடிகால் இல்லை. விபச்சாரத்தில் ஈடுபட்டுத் தங்கள் மனதையும், உடலையும் கெடுத்துக் கொள்வதை விட முறையாக இன்னுமொரு மனைவியை மணந்து அந்த இன்பத்தை அடைவதில் என்ன தவறு இருக்க முடியும்?

பலதார மணத்தை இவர்களைப் போன்றவர்களுக்கு அனுமதிப்பது இவர்களை மட்டும் செம்மைப்படுத்தவில்லை; இவர்களை நம்பியே தங்களின் தொழிலை நடத்துகின்ற ஒழுக்கம் கெட்ட பெண்களும் செம்மைப் படுத்தப்படுகிறார்கள். மாதவிடாய் மட்டுமின்றிக் கர்ப்ப காலம், பிரசவ காலம், மற்றும் பாலூட்டும் காலங்களில் இந்த உறவை நாடாத பெண்களும் உள்ளனர். இத்தகையவர்களை மனைவியாக அடைந்தவன் பல மாதங்கள் இந்த உறவுக்காக ஏங்கும் நிலைமையை அடைகிறான். எத்தனை மாதங்கள் ஆனாலும் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வோர் இருக்கத் தான் செய்கிறார்கள். எனினும் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாதவர்களும் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

இவ்வளவு நியாயமான காரணங்களினால் தான் பலதார மணத்தை ஆண்களுக்கு மட்டும் இஸ்லாம் அனுமதித்திருக்கின்றது. இஸ்லாம் அகில உலகுக்கும் பொதுவான வாழ்க்கைத் திட்டமாகவும், எல்லாத் தரப்பு மக்களுக்கும் சரியான தீர்வைக் காட்டும் பரந்த கண்ணோட்டமுடைய மார்க்கமாகவும் இருப்பதால் எல்லாக் காலத்திற்கும், எல்லாப் பகுதிகளுக்கும் ஏற்ற வகையில் சட்டங்களை வழங்கியுள்ளது.

பலதார மணம் ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டதற்கு ஏராளமான காரணங்களை நாம் கூறியுள்ளோம். இக்காரணங்களில் ஒன்றிரண்டு காரணங்கள் சிலருக்கு ஏற்புடையதல்ல என்று தோன்றலாம். அவர்களும் ஏற்கக் கூடிய காரணங்கள் அதன் பிறகும் எஞ்சியிருப்பதை அவர்கள் மறுக்க முடியாது.

மண வாழ்வைப் பெற்றுள்ள பெண்கள் இதில் திருப்தியடைய மாட்டார்கள்; இதற்கு ஒப்ப மாட்டார்கள்; தங்கள் வாழ்வைப் பங்கு வைக்க உடன்பட மாட்டார்கள்.

ஆனால், இந்தப் பரிகாரம் நாளை அவர்களுக்கே தேவைப்படும் போது இதன் அவசியத்தை உணர்வார்கள். வாழ்ந்து கொண்டிருந்த பெண் திடீரென விதவையாகி விட்டு வாழ்க்கையின் வசந்தங்களுக்காக ஏங்கும் பொழுது இதன் அவசியத்தை உணர்வாள்.

விதவையாயினும், கன்னியாயினும் மண வாழ்வு கிடைத்து விடும் என்ற உத்திரவாதம் பெற வேண்டுமானால், வசதியுள்ளவர்கள், நேர்மையாக நடக்கும் எண்ணமுள்ளவர்கள், உடல் வலிமையுள்ளவர்கள், தேவையுடையவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து இந்தப் பற்றாக்குறையை ஈடு செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை.

பெண்கள் கிடைக்கவில்லை’ என்ற அளவுக்கு மாறினால் மட்டுமே, வரதட்சணை, விபச்சாரம், மற்றும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் ஒழிய முடியும்.

பலதார மணத்தைத் தடை செய்தாலும் மனைவியைத் தவிர பிற பெண்களை நாடுவோர் கணிசமான எண்ணிக்கையில் இருக்கத் தான் செய்கின்றனர். எந்தச் சட்டங்களாலும் இவர்களைத் தடை செய்ய முடியவில்லை. இத்தகையோர் சட்டப்படி இன்னொருத்தியை மணந்து கொள்வது விபச்சாரத்தில் ஈடுபடுவதை விட எவ்விதத்திலும் தாழ்ந்தது அல்ல என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அழகிகள் கைது’ என்ற செய்திகள் இடம்பெறாத நாளே இல்லை என்ற அளவுக்கு பெண்கள் ஆண்களை வலை வீசித் தேடிக் கெடுக்கின்றனர். ஆனால் அழகன்கள் கைது’ என்ற ஒரு செய்தியையும் நாம் காண்பதில்லை.

பெண்கள் கடை வீதிகளிலும், பேருந்து நிலையங்களிலும், ஹோட்டல்களிலும், பொழுது போக்கும் இடங்களிலும் மானமிழந்து ஆண்களுக்கு அழைப்பு விடுகிறார்களே! அவர்களுக்கு ஒரு வாழ்வு கிடைத்திருந்தால் இந்த இழிவைத் தாமே தேடிக் கொள்வார்களா? என்பதையும் சிந்திக்க வேண்டும்.

பொறுப்பைச் சுமக்க வேண்டும்.

திருமணம் விபச்சாரம் போன்றது அல்ல. ‘ஒருத்தியை மணந்து கொண்டால் காலமெல்லாம் அவளுக்குரிய உணவு, உடை மற்றும் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும்; அவள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்காகவும் சம்பாதிக்க வேண்டும்’ என்பதை உணரும் போது ஒரு சதவிகிதம் பேர் கூட அதற்கு முன் வர மாட்டார்கள்.

பலதார மணம் தடை செய்யப்பட்டு விபச்சாரம் தடுக்கப்படாத போது பிற பெண்களை நாடுவோர் மிக அதிக அளவில் இருப்பார்கள்.

விபச்சாரத்தைத் தடுத்து பலதார மணத்தை அனுமதித்தால் அதை விட மிக மிகக் குறைந்த அளவு ஆண்கள் தாம் பிற பெண்களை நாடுவார்கள்.

காரணம் சில ரூபாய்களை வீசி எறிந்து விட்டால் போதும்! வேறு எந்தப் பொறுப்பும் கிடையாது எனும் போது பிற பெண்களை சர்வ சாதாரணமாக நாடுவார்கள்.

செய்யும் செயலுக்காக காலமெல்லாம் பொறுப்பு ஏற்க வேண்டும் எனும் போது பலமுறை யோசித்துத் தான் செய்வார்கள்.

எனவே பிற பெண்களை நாடுவோரின் எண்ணிக்கை பலதார மணத்தினால் பல மடங்கு குறையும். திருமணம் என்ற முறையில் இல்லாமல் எந்தப் பெண்ணுடனும் எந்த ஆணும் உறவு கொள்ளக் கூடாது என்று சட்டம் இயற்றிப் பார்க்கட்டும்! அப்போது புரிந்து கொள்வார்கள்.

இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். ஒருவனுக்கு இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்படுபவள் தன் பரிபூரண சம்மதத்துடன் தான் முன் வருகிறாள். சம்மதமின்றி அவளை யாரும் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட நிர்பந்திக்க முடியாது. அவ்வாறு நிர்பந்தம் செய்யும் திருமணங்களை இஸ்லாம் செல்லாததெனவும் அறிவிக்கிறது.

இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட முன்வருகிறாளே அவள் தான் இது பற்றிக் கவலைப்பட வேண்டும்.

எண்ணிக்கையை அதிகப்படுத்துவது இதன் நோக்கமா?

சமீப காலமாக, சிலர் எடுத்து வைக்கும் வினோதமான வாதத்தையும் நாம் கவனிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். பலதார மணத்தினால் முஸ்லிம்கள் அதிகமாகி நாம் சிறுபான்மையாவோம்; அதனால் பலதார மணத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். 1961-ஆம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்ட மக்கள் தொகைக் கணக்கின் படி இந்துக்கள் 36.6 கோடிப் பேர் இருந்தனர்.
முப்பது ஆண்டுகளுக்குப் பின் 1991 ஆம் ஆண்டு இந்திய அரசால் வெளியிடப்பட்ட மக்கள் தொகைக் கணக்கின் படி இந்துக்களின் எண்ணிக்கை 67.2 கோடியாகும்.

இந்தக் கணக்கின் படி முப்பது வருடங்களில் 100 இந்துக்கள் 183 இந்துக்களாக வளர்ந்துள்ளனர்.

இந்த வளர்ச்சியுடன் மதமாற்றத்தினால் இந்துக்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட குறைவையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முப்பது ஆண்டுகளில் இலட்சம் இலட்சமாக தலித் மக்கள் புத்த மதங்களைத் தழுவியுள்ளனர்.

முப்பது ஆண்டுகளில் சில மாநிலங்களில் கிறித்தவர்கள் பெரும்பான்மையாக மாறும் அளவுக்கு கிறித்தவ மதத்தை பல கோடிப்பேர் தழுவியுள்ளனர்.

நாடு முழுவதும் தினந்தோறும் பல நூறு பேர் இஸ்லாத்தையும் ஏற்றுள்ளனர். கிராமம் கிராமமாக இஸ்லாத்தை ஏற்கும் நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன.

பகுத்தறிவு இயக்கங்களின் எழுச்சியின் காரணமாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படிவத்தில் தங்களை எந்த மதத்தையும் சேராதவர்கள் என்று குறிப்பிடக் கூடிய இந்துக்களும் பெருகியுள்ளனர்.

இவ்வாறு மதம் மாறியவர்கள் அனைவரும் இந்துக்களாகப் பிறந்தவர்கள் தான். இந்துக்களாகப் பிறந்து விட்டு வேறு மதங்களுக்குச் சென்றவர்கள் தான்.

மாதத்திற்கு ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் மதம் மாறுவதாக இந்துத்துவ இயக்கங்கள் கவலை தெரிவிக்கின்றன. இதனால் நாடு முழுவதும் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கோருகின்றனர்.

மாதம் ஒரு லட்சம் இந்துக்கள் பௌத்தவர்களாகவும், கிறித்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும், மதம் சாராதவர்களாகவும் மாறுகிறார்கள் என்றால் வருடத்திற்கு 12 லட்சம் பேர் மதம் மாறுகின்றனர். 1961 முதல் 1991 வரை உள்ள முப்பது வருடங்களில் பல்வேறு மதங்களுக்கு மாறிய இந்துக்கள் 3.6 கோடியாவர்.

1961-ல் அதவாது 36.6 கோடியாக இருந்த இந்துக்கள் 67.2 + 3.6 = 70.8 என்ற கணக்கில் பெருகியுள்ளனர். அதாவது நூறு இந்துக்கள் முப்பது ஆண்டுகளில் 193 இந்துக்களாகப் பிறப்பின் அடிப்படையில் பெருகியுள்ளனர்.

இதைக் கவனத்தில் கொண்டு முஸ்லிம்களின் வளர்ச்சி விகிதத்தைக் காண்போம்.

1961-ல் இந்திய அரசு வெளியிட்ட மக்கள் தொகைக் கணக்கின் படி முஸ்லிம்கள் 4.6 கோடியாக இருந்தனர்.

முப்பது ஆண்டுகளுக்குப் பின் 1991ல் எடுக்கப்பட்ட கணக்கின் படி முஸ்லிம்களின் எண்ணிக்கை 9.5 கோடி.

நூறு இந்துக்கள் 193 இந்துக்களாகப் பிறப்பால் பெருகுகின்றனர் என்ற கணக்குப் படி முஸ்லிம்களின் பிறப்பு விகிதமும் இருந்தால் 4.6 கோடியாக இருந்த முஸ்லிம்கள் 8.87 கோடியாக இருக்க வேண்டும். இந்தக் கணக்கை விட 63 லட்சம் முஸ்லிம்கள் தான் அதிமாக உள்ளனர்.

அதாவது முப்பது ஆண்டுகளில் இந்துக்களின் வளர்ச்சி விகிதத்தை விட 63 லட்சம் பேர் அதிகம் என்றால் ஆண்டுக்கு இரண்டு லட்சம் ஆகிறது. இந்த எண்ணிக்கை அதிகரிப்பிற்குக் காரணம் பிற மதங்களிலிருந்து இஸ்லாத்தைத் தழுவுவோர் தான். ஆண்டுக்கு இரண்டு லட்சத்தை விட அதிகமாகவே முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாத்தைத் தழுவுகின்றனர்.

இந்த நாட்டில் முஸ்லிம்களின் கணக்கு ஜீரோவிலிருந்து தான் துவங்குகிறது. முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாத்தைத் தழுவும் காரணத்தினாலேயே முஸ்லிம்கள் இங்கே உருவானார்கள். இது காலம் காலமாகத் தொடர்ந்து நடக்கின்றது. எனவே முஸ்லிம்களாக மதம் மாறியவர்களைத் கழித்துப் பார்த்தால் இந்துக்கள் தமது மனைவியர் மூலம் எந்த அளவு மக்கள் தொகையைப் பெருக்குகிறார்களோ அதே கணக்குப் படி தான் முஸ்லிம்களும் மக்கள் தொகையைப் பெருக்குகிறார்கள். நான்கு மனைவியரைத் திருமணம் செய்வதால் இந்துக்களை விட முஸ்லிம்கள் அதிகம் வளர்ச்சியடைந்து விட்டார்கள் எனக் கூறுவது முற்றிலும் தவறாகும்.

மேலும் நடைமுறையில் முஸ்லிம்களை விட முஸ்லிமல்லாதவர்கள் தான் அதிக சதவிகிதத்தில் பலதார மணம் புரிந்துள்ளனர். இதை முன்னர் நாம் விளக்கியுள்ளோம்.

அதிக மனைவியரை மணந்து மக்கள் தொகையைப் பெருக்குகிறார்கள் என்று கூறுவதாக இருந்தால் முஸ்லிம்களை விட அதிக அளவு பலதார மணம் செய்துள்ள இந்துக்களுக்குத் தான் இந்தக் குற்றச்சாட்டு பொருந்தும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பலதார மணத்துக்கு நாம் எடுத்து வைத்த நியாயமான காரணங்களை அவர்கள் சிந்தித்தால் முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது இதன் நோக்கம் இல்லை என்பதை உணர்வார்கள்.

சட்டப்படி யாருக்கு தடை உள்ளதோ அவர்கள் அதிக அளவு பலதார மணம் செய்வதிலிருந்து தடைச் சட்டத்தால் பயன் ஏதும் ஏற்படவில்லை என்பதைச் சந்தேகமற அறியலாம்.

பலதார மணம் செய்வதுடன் சின்ன வீடு வைத்துக் கொண்டவர்களையும் கணக்கிட்டால் இந்தச் சதவிகிதம் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பலதார மணம் பெண்களுக்கில்லை:

இந்த வித்தியாசங்களையும், நியாயமான காரணங்களையும் முதுகுக்குப் பின்னால் தள்ளி விட்டு ஆணுக்கு அனுமதிப்பது போல் பெண்ணுக்கும் பலதார மணத்தை அனுமதிக்க வேண்டுமென்று சிலர் கூறுகின்றனர். இது ஏற்க முடியாத வாதமாகும். பெண்களுக்குப் பல கணவர்களை அனுமதிக்க நியாயமான ஒரு காரணமும் இல்லை. மாறாகப் பெண்ணுக்கும் இந்த அனுமதி வேண்டும் என்போரின் விருப்பப்படி அனுமதிப்பதனால் விபரீதங்களும், கேடுகளும் தான் ஏற்படும்.

ஒரு ஆண் நூறு பெண்களுடன் ஒரு ஆண்டு தனித்து விடப்பட்டால் அந்த நூறு பெண்களும் நூறு குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும்! ஒரு பெண் நூறு ஆண்களுடன் தனித்து விடப்பட்டால் அவளால் நூறு குழந்தைகளைப் பெற முடியுமா? ஒரு ஆணுக்குப் பல பெண்கள் மூலம் பத்துப் பிள்ளைகள் பிறந்தால் அந்தப் பத்துப் பிள்ளைகளின் தந்தை யார்? தாய் யார்? என்பதை அறிந்து கொள்ள முடியும்.

பல ஆண்களிடம் உறவு வைத்துள்ள ஒரு பெண் பெற்றெடுக்கும் ஒரு பிள்ளைக்கு ‘தாய் யார்?’ என்பது தான் தெரியுமே தவிர, தன் ‘தந்தை யார்?’ என்பதை அறிந்து கொள்ள முடியாது.

இந்த நிலையை விட அந்தக் குழந்தைக்கு வேறு கேவலம் எதுவுமிருக்க முடியாது. இது போல் தகப்பன் யார் என்று தெரியாமல் உருவாகக் கூடிய சந்ததிகள் உள்ளம் நொறுங்கி மனோ வியாதிக்கு ஆளாவார்கள்.

ஒரு ஆண் நான்கு மனைவிகள் மூலம் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தால் அந்த நான்கு குழந்தைகளையும் பராமரிக்கும் பொறுப்பை அவன் தலையில் சுமத்தி விடலாம். அந்தக் குழந்தைகளுக்கு ஆகும் செலவுகளைக் கொடுக்குமாறு அவனை நிர்பந்திக்க முடியும். ஆனால் ஒரு பெண் நான்கு ஆண்களுடன் கூடிப் பெற்றெடுக்கும் ஒரு குழந்தைக்கு இந்த உத்திரவாதம் அளிக்க முடியுமா? ஒவ்வொருவனும் என்னுடையதில்லை என்று மறுத்து விட்டால் எந்த அடிப்படையில் அவன் மீது பொறுப்பைச் சுமத்த முடியும்? அதற்குரிய செலவினங்களைக் கொடுக்குமாறு அவனை எப்படி நிர்பந்தப்படுத்த முடியும்? வளரப் போகும் அந்தக் குழந்தையின் எதிர்காலம் இருள் நிறைந்ததாக அல்லவா ஆகும்! அது போல் ஒவ்வொருவனும் அந்தக் குழந்தை தன்னுடையது என்று உரிமை கொண்டாடினால் அந்தக் குழந்தையைக் கூறு போட்டு ஆளுக்குக் கொஞ்சம் பிரித்துக் கொடுக்க முடியுமா?

ஒருவனுக்குப் பல மனைவியர் மூலம் பல நூறு குழந்தைகள் இருந்தாலும் அவன் இறந்த பின் பல நூறு குழந்தைகளுக்கும் தந்தை இன்னார் என்று தெரிவதால் வாரிசுகள் என்ற அடிப்படையில் அவனது சொத்தில் பங்கு கேட்க முடியும்.

பல ஆண்களை மணந்தவளின் கணவர்களில் எவர் இறந்தாலும், அவளது பிள்ளைகள் தந்தையின் சொத்து என்று உரிமை கொண்டாட வழியில்லாது போகும்.

இவ்வளவு வித்தியாசங்கள் இருப்பதனாலேயே எல்லாம் அறிந்த ஏக இறைவன் ஆண்களுக்கு மாத்திரம் இதை நிபந்தனைகளுடன் அனுமதித்திருக்கிறான். நீக்கிவிட முடியாத வித்தியாசங்கள் இருக்கும் வரை பலதார மணத்தை விமர்சனம் செய்பவர் புத்திசாலியாக இருக்க முடியாது.

ஆண்களுக்குப் பலதார மணத்தை அனுமதித்துப் பெண்களுக்கு மறுத்திட மிகமிக முக்கியமான மற்றொரு காரணமும் உண்டு.

பல மனைவியரைக் கட்டியவன் நினைத்த போது விரும்பிய மனைவியுடன் உடலுறவு கொள்ள முடியும்; ஒரு மனைவி அவள் விரும்பிய கணவனிடம் அவன் விரும்பாத போது உறவு கொள்ள இயலாது என்பதைச் சிந்தித்தால் ஆண்களுக்கு மட்டுமே பலதார மணத்தை அனுமதித்திருப்பதன் நியாயத்தை உணரலாம்.

திருமணத்துக்கு தயார் நிலையில் உள்ள ஆண்களும், பெண்களும் சமமான எண்ணிக்கையில் இருக்கும் போது தான் பலதார மணம் சாத்தியமாகும். அப்போது எந்தச் சட்டமும் போடாமலேயே பலதார மணம் தானாக நின்று விடும். முதல் தாரத்துக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கும் போது எந்தப் பெண் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட விரும்புவாள்?

அந்த நிலை ஏற்படும் வரை எந்தச் சட்டத்தினாலும் இதைத் தடுக்க முடியாது.

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கின்றது என்போரின் அடுத்த குற்றச்சாட்டு தலாக்’ குறித்ததாகும். அது பற்றியும் நாம் ஆராய்வோம்.

source : onlinepj.com

Related Posts

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

ரமளானின் அருளை நமதாக்குவோம்!

மனிதனை அழகிய படைப்பாக்கிய அல்லாஹ், மனிதன் மீது அளவுகடந்த அன்பும் இரக்கமும் கருணையும் கொண்டுள்ளான். இம்மையிலும் மறுமையிலும் மனிதன் வெற்றி பெற்றிட வேண்டும் என்பதற்காக, அதற்கு தேவையான இறை நேர்வழிகாட்டலையும் வகுத்தளித்திருக்கின்றான். குறிப்பாக, ரமளான் மாதத்திற்கென்று கூடுதல்…

நபிகளாரின் எளிமை!

நபிகளாரின் எளிமை!

உலகில் எத்தனையோ தலைவர்கள் தோன்றி மறைகிறார்கள். அவர்கள், மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் போதும், பொது மேடைகளில் பேசும் போதும் பல உதாரணங்களை சொல்லி எளிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். ஆனால் அவர்கள் தம்முடைய சொந்த வாழ்க்கையில்…

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

மறுமையில் வெற்றிபெற இம்மையில் நீதி செலுத்துவோம்!

அகில உலகைப் படைத்த இறைவன், மனிதப் படைப்புகளை பிற உயிரினங்களைவிட மேன்மையாக வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்களாகப் படைத்திருக்கின்றான். நீதி செலுத்துவதற்கும், சமத்துவம் பேணப்படுவதற்கும், எவ்வாறு வாழ்வியல் வழிகாட்டியாக கற்றுத் தந்திருக்கின்றானோ அதன் அடிப்படையில் மனித சமுதாயம் தங்களின்…

பிறர் நலன் நாடுவோம்!!!

பிறர் நலன் நாடுவோம்!!!

இஸ்லாம் என்பது இறை மார்க்கம். மனிதன் அமைதியாக வாழ வேண்டும்; நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அனைத்தும் அறிந்த ஏக இறைவனால் வழிமுறைகள் வகுக்கப்பட்ட மார்க்கம். இத்தகைய இஸ்லாமிய மார்க்கம், மனித சமுதாயம் எப்போதும் சிறப்பாக இயங்குவதற்குத்…

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

சமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்!

நல்லொழுக்கமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவோருக்கு சுய கட்டுப்பாடு அவசியமான ஒன்றாகும். நீரில்லா உலகை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ அதுபோல சுய கட்டுப்பாடின்றி நல்லொழுக்கமுள்ள வாழ்வைக் கற்பனை செய்ய முடியாது. சுய கட்டுப்பாடு என்பது ஒருவர் அவசியமற்ற…

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்!

ரபீஉல் அவ்வல் மாதம் பிறந்து விட்டால் மவ்லிது கச்சேரிகள் களை கட்ட ஆரம்பித்து விடுகின்றன. மஃரிப் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசல்களிலும் மற்றும் வீடுகளிலும் முதல் பத்து நாட்கள் சுப்ஹான மவ்லிதுகளை பக்திப் பரவசத்தோடு அதை நன்மை எனக்…