வேண்டாம் வெளிநாட்டு வாழ்க்கை!!!
இந்திய முஸ்லிம்கள் தங்களின் வாழ்வாதாரம் தேடி வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளும் அவல நிலை இன்றும் மாறியபடில்லை, இதில் குறிப்பாக கீழ் நிலைப்பணிகளுக்கு செல்லும் தொழிலார்களின் துயர நிலையோ சொல்லி மாளாது.
அது போன்ற வெளிநாட்டு வாழ்க்கையின் அவலங்களையும், அதன் பாதிப்புகளையும் கண்டு என்று மாறும் இந்த அவல நிலை என்ற குமுறல்களின் விடையை நோக்கி முஸ்லீம் சமுதாயத்தை உளமார நகர்த்துவதே இக் கட்டுரையின் தலையாகிய நோக்கம்…
வெளிநாட்டு வாழ் இந்திய தொழிலார்களை இரண்டு வகையாக பிரிக்கலாம், இதில் நன்கு படித்து தாங்கள் செல்லும் பணிகள் பற்றி தீர விசாரித்து தாங்கள் குடும்பத்தினருடன் நல்ல பணிகளுக்கு செல்வது ஒரு வகை, இம்முறையை மட்டுமே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்ப காலகட்டங்களில் இருந்து ஆதரித்து வந்தது..
இருந்த போதிலும் இதிலும் சிலர் நன்கு படித்திருந்தும் சரியான முறையில் தாங்கள் பணிகளை பற்றி தீர விசாரிக்காமல் வெளிநாட்டில் சென்று துன்பங்களை அனுவிப்பது முதல் வகை.
இரண்டாம் வகையினர் கல்வியில் பின்தங்கிய நிலையில்; கீழ் நிலை பணிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பல்வேறு துன்பங்களை அனுபவிக்கும் சகோதரர்கள் ஆவர்.
மேற்சொல்லப்பட்ட வெளிநாட்டுவாழ் தொழிலார்கள் அனுபவிக்கும் இன்னல்கள் மற்றும் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளும், தீர்வுகள் பற்றி விரிவாக காண்போம்.
முதல் வகை வெளிநாட்டுவாழ் தொழிலார்களுக்கான ஆலோசனைகளும், தீர்வுகளும்…
இவ்வகையில் சென்று சிக்கி கொள்பவர்களை பொறுத்தமட்டில் படித்த படிப்பிற்கு சரியான வேலை கிடைக்க வில்லை என்ற விரக்தியில் வெளிநாட்டு வேலையை நோக்கி அவசர, அவசரமாக அறிந்தும் அறியாமலும் சென்று சிக்கி கொள்பவர்களை அதிகம், எனவே படித்து விட்டு வெளிநாடு செல்பவர்கள் கீழ் காணும் துன்பங்களை அனுபவிக்க நேரிடுகின்றது.
பொறியியல் படிப்பு படித்தவர்களும் கூட சரியாக விசாரிக்காமல் ஒட்டகம் மேய்க்கும் பணிகளும், வீட்டு ட்ரைவர் மற்றும் வீட்டு பணிகளில் சென்று சிக்கி பல துயரங்களுக்கும் ஆளாவது வழமையாக நடக்கின்றது, இதில் பெரும்பாலானோர் அறிந்தும், அறியாதோராக சிக்கி கொள்ளும் சம்பவங்களும் நடக்கின்றது இதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் என்ன?
1) பட்டப்படிப்பு படித்து முடிப்பவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளும் வரை தாயகத்தில் தேவையான பயிற்சிகளை முதலில் பெற்றுக் கொள்ளவேண்டும், இதில் சம்மந்தப்பட்ட குடும்ப அங்கத்தவர்கள் அவசரப்படாமல் போதிய காலாவகாசமும், போதிய ஒத்துழைப்புக்களையும் வழங்கி சம்மந்தப்பட்ட துறையில் அனுபவம் பெரும் வண்ணம் ஆர்வமூட்ட வேண்டும்.
2) தாயகத்தில் நேர்முகத் தேர்வுக்கு செல்லும் பொழுதே ஆட்கள் தேர்வு செய்யும் சம்பந்தப்பட்ட நிறுவனம் (Recruitment Agency) பற்றி தீர விசாரித்துக் கொள்வது சிறந்தது மேலும் எந்த ஒரு சூழலிலும் சரியான பிடிமானம் இல்லாமல் கட்டணம் செலுத்துவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும்.
3) தகுந்த கல்வி மற்றும் அனுபவம் பெற்றவர்கள் ஏதோ பெயருக்கு வேலை கிடைத்தால் போதும், மாதம் லட்ச கணக்கில் சம்பாதிக்கலாம் என்று கண்ணை மூடிக்கொண்டு வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளாமல் தாங்கள் செல்லும் பணிகள் குறித்து தீர விசாரித்து கொள்ள வேண்டும், இதில் மேற்கொண்டு விபரங்கள் தேவையெனில் தாங்கள் அருகில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை, மாவட்ட சகோதர்களை அணுகினால் சம்மந்தப்பட்ட வெளிநாட்டு மண்டலங்களை மாநில தலைமை மூலம் அணுகி உரிய விளக்கங்களை பெற்று தருவார்கள்.
4) இதில் தங்களின் வேலை பற்றிய விசா , ஒப்பந்தங்கள் மற்றும் பணிகள் குறித்த ஏனைய அனைத்து ஆவணங்களையும் துறை சார்ந்த அது பற்றி நன்கு விபரம் தெரிந்தவர்கள் மூலம் சரிபார்த்துக் கொள்வதும் அவசியமான ஓன்று.
5) இப்படி கல்வியில் இருந்து அனைத்தையும் சரிவர செய்து முடித்து விட்டு அறிந்து கொண்டே குடும்ப சூழல் என்ற ஒன்றை காரணத்தை கூறி வெளிநாடுகளில் வீட்டு ட்ரைவர் மற்றும் வீட்டு பணிகளில் சென்று சிரமப்படாமல் சற்று நிதானமாக தாயகத்தில் பொறுமை காத்து சரியான பணிகளை தேர்வு செய்ய முனைய வேண்டும், இதற்க்கு மேலும் பணிகள் சமந்தமான உதவிகள் தேவைப்பட்டால் சரியான வேலைவாய்ப்பு தகவல்களை தினமும் அலச வேண்டும், (Local & International Employment news) .
இரண்டாம் வகை வெளிநாட்டுவாழ் தொழிலார்களுக்கான ஆலோசனைகளும், தீர்வுகளும்…
இரண்டாம் வகை வெளிநாட்டுவாழ் தொழிலார்களை பொறுத்தமட்டில் கல்வியில் பின்தங்கிய நிலையில் வீட்டு வேலை, வீடுகளில் ஓட்டுநர் (ஹவுஸ் டிரைவர்) மற்றும் கால்நடைகள் பராமரிக்கும் பணி, வீட்டு பணிப்பெண்கள், துப்பரவு பணிகளுக்கு என மிக குறைந்த ஊதியத்திற்கு அழைத்து செல்லப்பட்டு சொல்லிலா துன்பங்களுக்கு ஆளாக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.
மேல்குறிப்பிட்டு உள்ள பணிகள் மற்றும் இன்ன பிற குறைந்த ஊதியத்தில் பணிகளுக்கு அயல்நாடு செல்வதை விட உள்நாட்டில் தகுதிக்கேற்ப வேலை தேடி கொள்வதே மிகவும் சாலச்சிறந்தது.
இருப்பினும் எவற்றையும் பொறுப்படுத்தாமல் செல்பவர்கள் மேல் குறிப்பிடபட்டுள்ள ஆலோசனை 2,3 மற்றும் 4- னை முதலில் மனதில் ஆழ்த்திக் கொள்ளவும்.
கீழ் நிலை பணிகளுக்கு அழைத்து செல்லப்படுவார்கள் பெரும்பாலும் அறிந்தவர்கள் மூலம் வீசா பெறப்பட்டு ஏமாற்றப்படுகின்றனர், இதில் சிலர் அறிந்தே சிக்கலில் மாட்டி விடுவதும், ஒரு சிலர் அறியாமல் மாட்டி விடுவதும் வழமையாக உள்ளது.
எனவே கீழ் நிலை பணிக்கு செல்பவர்கள் தங்கள் பணிக்கு செல்லும் வசிப்பிடம், பணியின் தன்மைகள் மற்றும் முதலாளிகள் பற்றி தீர விசாரித்து விட்டு செல்லவும்.
இன்னும் அறுதியிட்டு சொல்லப்போனால் வீட்டு வேலை, வீடுகளில் ஓட்டுநர் (ஹவுஸ் டிரைவர்) மற்றும் கால்நடைகள் பராமரிக்கும் (மொய்க்கும்) பணி, வீட்டு பணிப்பெண்கள், துப்பரவு பணிகளுக்கு அறவே செல்லாமல், வேறு வகையான அலுவலக பணியாளர் (ஆபீஸ் பாய், டீ பாய்) அல்லது இன்ன பிற சிரியவகை அலுவலகங்கள் பணிக்கு செல்வது ஓர் அளவிலான பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.
மேலும் இது போன்ற கீழ் நிலை பணிகளில் சென்று சிக்கி தவிப்பவர்கள் எக்காரணம் கொண்டும் தனது முதலாளி (ஸ்பான்ஸர் – கபில்) இடம் இருந்து தப்பித்து ஓட முயற்சி செய்து வேறுவிதமான தீர்க்க முடியாத பிரச்சனைகளில் சென்று சிக்கிக்கொள்ளாமல், தாங்கள் பணிக்கு செல்லும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உங்களின் பிரச்சனைகளை தீர்க்க முனையுங்கள் மேலும் கூடுதல் சட்ட உதவிகள் மற்றும் ஆலோசனைகளுக்கு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் அலலது நமது ஜமாத்தின் மண்டலங்களை அணுகி தீர்வு பெற்றுக் கொள்ளலாம்.
எது எப்படி இருப்பினும் வெளிநாட்டில் சென்று வேலை பார்ப்பது என்பது ஒருபோதும் நிரந்தர தீர்வாகாது காரணம் தற்போது பெரும்பான்மையான நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களை பணியமர்த்துவதில் முனைப்பு காட்டி வருவதால் என்னேரமும் வேலைவாய்ப்பை இழந்தது விட்டு தாயகத்திற்கு திருப்பி அனுப்படலாம், எனவே ஆரம்பத்தில் சிரமங்கள் இருந்தாலும் உள் நாட்டில் படிப்பிற்கேற்ற, தகுதிக்கேற்ற வேலையமர்த்திக் கொள்வதே ஆக சிறந்தது.
மேலும் உள்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு சமந்தமான தகவல்கள், உதவிகள் மற்றும் ஆலோசனைகள் தேவைப்பட்டால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மாணவர் அணி முகநூல் பக்கத்தில் சென்று பெற்றுக் கொள்ளலாம். பார்க்க:- https://www.facebook.com/
சமுதாய நலன் கருதி வெளிடுவோர் (தொகுப்பு)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
ரியாத் மண்டலம்.