விஸ்வரூபம் திரைப்படத்தை முஸ்லிம்கள் எதிர்த்ததற்கும், இப்போது வெளியாகியுள்ள மெர்சல் படத்தை பாஜகவினர் எதிர்ப்பதற்கும் என்ன வித்தியாசம்?

விஸ்வரூபம் திரைப்படத்தை முஸ்லிம்கள் எதிர்த்ததற்கும், இப்போது வெளியாகியுள்ள மெர்சல் படத்தை பாஜகவினர் எதிர்ப்பதற்கும் என்ன வித்தியாசம்?
– ஆரோக்கியநாதன், தாம்பரம்.
இரண்டுமே கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்ற வாதம் பரவலாக முன்வைக்கப்படுகிறது.
கருத்து சுதந்திரத்தைப் பறிக்கக் கூடாது என்பது உண்மைதான். ஆனால் கருத்து சுதந்திரம் என்பது எல்லைக்கு உட்பட்டதாகும்.
ஆள்வோர் வகுக்கும் சட்டங்கள், அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்கள், அடக்குமுறைகள் ஆகியவற்றைக் கண்டிப்பது கருத்து சுதந்திரம் என்றால் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஏனெனில் மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசின் உண்மையான உரிமையாளர்கள் மக்கள் தான். இதனால் அரசு நாசகார திட்டங்கள் போட்டாலோ, நாட்டை அழிவுப்பாதைக்குக் கொண்டு சென்றாலோ அதைத் தட்டிக் கேட்க உண்மை எஜமானர்களான மக்களுக்கு உரிமை உண்டு. இது தான் கருத்து சுதந்திரம் என்பது.
அதுபோல் விபச்சாரம், மது, சூதாட்டம் போன்ற தீமைகளை தக்க சான்றுகளுடன் மக்களுக்கு விளக்கி வாதங்களை வைத்தால் அது கருத்து சுதந்திரம் எனலாம். மக்கள் செய்யத் தவறிய நன்மைகளை எடுத்துக் காட்டி ஆர்வமூட்டும் வாதங்களை முன்வைத்தால் அது கருத்து சுதந்திரம் எனலாம்.
ஆனால் ஒரு மதம் குறித்தும், அந்த மதத்தினர் புனிதமாகக் கருதுபவை குறித்தும், அவர்களின் நம்பிக்கை குறித்தும், அவர்களின் வரலாறு குறித்தும், அந்த மதத்தின் புனிதர்களைக் குறித்தும் மற்றவர்கள் தவறாக செய்யும் விமர்சனம் கருத்து சுதந்திரத்தில் வராது. அது போல் ஒரு சாதியினரை இழிவாகச் சித்தரிக்கும் வகையில் மற்ற சாதியினர் செய்யும் விமர்சனமும் கருத்து சுதந்திரத்தில் வராது.
அப்படி கருத்து சொல்வதாக இருந்தால் சம்மந்தப்பட்டவர்களின் மனம் புண்படாமல் கண்ணியமான முறையில் கேள்விகள் எழுப்பலாம்.
இந்த அடிப்படையில் தான் மெர்சல் படத்துக்கான எதிர்ப்பையும், விஸ்வரூபம் படத்துக்கான எதிர்ப்பையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.
இதைச் சில உதாரணங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம்.
பாஜகவை எதிர்த்து மற்ற கட்சிகள் பொதுக்கூட்டம் போட அனுமதி கேட்டால் காவல்துறை அனுமதி வழங்கும். மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கூட்டம் போட அனுமதி கேட்டால்கூட எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும். தரக்குறைவான முறையில் கருத்தைச் சொல்லக் கூடாது என்ற நிபந்தனையுடன் இந்த அனுமதி வழங்கப்படும்.
ஆனால் இந்து மதத்தின் கேடுகளை அம்பலப்படுத்த போகிறோம்; அதற்கு அனுமதி வேண்டும் என்று முஸ்லிம்கள் கேட்டால், இஸ்லாம் மதத்தின் கேடுகளை அம்பலப்படுத்தப் போகிறோம் அதற்கு அனுமதி வேண்டும் என்று இந்துக்கள் அனுமதி கேட்டால் அனுமதி தர மாட்டார்கள்.
பிரதமரையே கண்டித்து நடத்தும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளித்து விட்டு, ஒரு மதத்தினரைப் புண்படுத்தும் கூட்டத்துக்கு அனுமதி மறுக்க என்ன காரணம்?
முந்தையது கருத்து சுதந்திரம் தொடர்பானது; மற்றொன்று கலவரம் ஏற்படுத்தும் நோக்கத்திலானது என்பதுதான் இதற்குக் காரணம்.
அரசியல் ரீதியாகச் சொல்லும் கருத்துக்களால் சட்டம் ஒழுங்கு ஏற்படாது.
குறிப்பிட்ட மதத்தையும், மதத்தினரையும், சாதியினரையும் இழிவுபடுத்தும் விதமாகச் சித்தரிப்பது சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்தும்.
மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி வரி பற்றி சிறிய விமர்சனம் இடம் பெற்றுள்ளது. இது அரசுக்கு எதிராகக் குடிமகன் செய்யும் விமர்சனத்தில் சேரும். இதைவிட அதிகமாக பொதுக்கூட்டங்களில் ஜிஎஸ்டி வரியை எதிர்த்து பல தலைவர்கள் கருத்துக் கூறியுள்ளனர். பாஜக பெருந்தலைகளே கருத்துக் கூறியுள்ளனர். பொதுக்கூட்டத்திலும் கூட காரசாரமாக விமர்சனம் செய்யப்படுகிறது. அனைத்து குடிமக்களுக்கும் உரிமை உள்ள இந்த விஷயம் சினிமாக்காரர்களுக்கு மட்டும் மறுக்கப்பட முடியாது.
ஆனால் விஸ்வரூபம் படம் இந்த வகையான கருத்துச் சுதந்திரத்தில் அடங்குமா? நிச்சயம் அடங்காது.
தமிழகத்தில் விஜயகாந்த், விஜய், அர்ஜுன் உள்ளிட்ட பல நடிகர்கள் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகத் தொடர்ந்து சித்தரித்து வந்தனர். முஸ்லிமல்லாத மக்கள் துவக்கத்தில் கதையாக இதை எடுத்துக் கொண்டனர். இது போல் தொடர்ந்து எடுக்கப்பட்ட எல்லாப் படங்களிலும் இதே கருத்தை மையப்படுத்திய போது கதை என்ற நிலையைத் தாண்டி முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள், தேசவிரோதிகள் என்ற கருத்து படிப்படியாக முஸ்லிமல்லாதவர்களின் உள்ளங்களில் பதிய ஆரம்பித்தது.
இதனால் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு கிடைக்கவில்லை. முஸ்லிமல்லாதவர்களின் நிறுவனத்தில் வேலைகள் கிடைப்பதில்லை. பள்ளிக் கூடத்தில் பயிலும் முஸ்லிம் சிறுவர் சிறுமிகள் கூட அவர்களின் மதம் காரணமாக ஒதுக்கப்பட்டனர். மனதால் துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இப்படி முஸ்லிம்களுக்கு எதிரான பொதுக்கருத்தை உண்டாக்குவதே இவர்களின் நோக்கம் என்பது உறுதியானது. இது எல்லை மீறிப்போன போது இதனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் உள்ளுக்குள் குமுறினார்கள். இந்த நேரத்தில் தான் விஸ்வரூபம் திரைப்படம் வந்தது.
இப்படத்தில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டியது மட்டுமின்றி இஸ்லாம் மதமும் கேலிக்கூத்தாக்கப்பட்டது.
முல்லா உமர் பாத்திரத்தில் நடித்தவன் கோவை, மதுரை ஆகிய ஊர்களில் தங்கி இருந்ததாகப் பேசும் வசனம் அமைத்தார்கள். தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் தாலிபான்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள். அவர்களுடன் தமிழக முஸ்லிம்களுக்கு தொடர்பு உண்டு என்ற பொய்யை இது விதைத்தது. இது கருத்து சுதந்திரமா?
குர்ஆனை ஓதிவிட்டு கழுத்தை அறுப்பதும், குண்டு வைப்பதற்கு முன்னரும், அறுத்த பின்னரும் தொழுவதாகக் காட்டுவதும், முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லுங்கள் என்ற வசனத்தை ஓட விடுவதும் இஸ்லாம் மதத்தின் நம்பிக்கையைப் புண்படுத்துவதா? கருத்து சுதந்திரமா?
இரண்டு லட்சம் பெண்களையும், குழந்தைகளையும் அமெரிக்க ராணுவம் கொன்று குவித்ததை உலகமே அறியும். ஆனால் ஒரு குழந்தையைத் தவறுதலாகக் கொலை செய்து விட்டு அதற்காக அமெரிக்க ராணுவ வீரன் வருந்துவது போல் காட்டுவதும், அமெரிக்க ராணுவம் பெண்களையும், குழந்தைகளையும் கொல்ல மாட்டார்கள் என்று நற்சான்று அளிப்பதும், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுமா, கருத்து சுதந்திரமா?
இவர்கள் படம் எடுத்து பணம் பார்த்து விட்டு அடுத்த படம் தயாரிக்கும் வேளையில் இறங்கி விடுவார்கள். ஆனால் இதனால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட ரணத்துக்கு என்ன பதில்?
திரும்பத் திரும்ப இந்த நச்சுக் கருத்தை விதைத்து அதிகமான இந்துக்களை முஸ்லிம்களுக்குப் பகைவர்களாக்கினார்கள். இதனால் கொதித்துப் போன முஸ்லிம்கள் விஸ்வரூபம் படத்தை எதிர்த்தார்கள்.
இதுவும் மெர்சல் படத்துக்கான எதிர்ப்பும் ஒன்றா?
இது கமலஹாசனுக்கு மட்டுமான எதிர்ப்பு அல்ல. தொடர்ந்து இது போன்ற கருத்தை விதைத்து முஸ்லிம்களை தேச விரோதிகளாக சித்தரித்த விஜயகாந்த், விஜய், அர்ஜுன் உள்ளிட்ட அனைவருக்கும் எதிரானதே அந்த எதிர்ப்பு.
ஒரு தடவை திருடும் போது சாதாரணமாக எச்சரிப்பார்கள். இரண்டாம் முறையும் திருடும் போது இலேசாகத் தட்டுவார்கள். மூன்றாம் முறை திருடும் போது இழுத்துப் போட்டு சாத்துவார்கள். இந்த அடி மூன்றாவது திருட்டுக்கு மட்டுமானது அல்ல. மூன்றுக்கும் சேர்த்து அளிக்கப்பட்ட பதிலடி தான். முஸ்லிம்களின் உணர்வுகளைத் தொடர்ந்து காயப்படுத்தி வரும் அனைத்து கூத்தாடிகளுக்கும் எதிரானதே விஸ்வரூபம் படத்துக்கான எதிர்ப்பு.
முஸ்லிம்கள் இதனால் எப்படியெல்லாம் பாதிக்கப் படுகிறார்கள், தனிமைப்படுத்தப் படுகிறார்கள் என்பதை முஸ்லிம்களின் உணர்வுகளின் அடிப்படையில் புரிந்து கொண்ட இயக்குனர் மணிவண்ணன் கூட அழுத்தமாகப் பதிவு செய்தார்.
துப்பாக்கி என்ற படத்தில் பெட்டிக்கடைக்காரன், ஸ்திரீ போடுபவன், சைக்கிள் பஞ்சர் பார்ப்பவன் உள்ளிட்ட முஸ்லிம்களைக் கூட நம்பாதீர்கள்! அவர்கள் ஸ்லீப்பர் செல்கள் என்று நடிகர் விஜய் பதிய வைத்தார். ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் சந்தேகப்படுங்கள் என்று அவர் துப்பாக்கி படத்தில் சித்தரித்த போது கடும் கண்டனத்தை முஸ்லிம்கள் பதிவு செய்தனர். அது ஆறுவதற்குள் விஸ்வரூபம் வேறு வகையில் முஸ்லிம்களை இழிவுபடுத்தியதால்தான் கடும் எதிர்ப்பைக் காட்டியாக வேண்டும் என்ற நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டார்கள்.
விஸ்வரூபம் உள்ளிட்ட பல திரைப்படங்களால் சிறுபான்மைச் சமுதாயமான முஸ்லிம்கள் முற்றிலும் ஒரங்கட்டப்பட்டு அவர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படுவதை உணராமல் கருத்து சுதந்திரப் போராளிகள் முஸ்லிம்களைத் திட்டித் தீர்த்தார்கள். இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான போக்கு என்று வசைபாடினார்கள்.
ஆனால் மெய்யாகவே கருத்து சுதந்திரத்துக்கு எதிராக மெர்சல் படக்குழுவினரை பாஜக மிரட்டும் போது கருத்து சுதந்திரப் போராளிகள் பலரைக் காணவில்லை. பாரதிராஜா உள்ளிட்டவர்களும் மதவெறியின் காரணமாகவே முஸ்லிம்களுக்கு எதிரான நிலையை அப்போது எடுத்தார்கள்; கருத்து சுதந்திரத்துக்காக அல்ல என்பது இப்போது அம்பலமாகி விட்டது.
ஒரு விஷமக் கருத்தால் பாதிக்கப்படும் போது முஸ்லிம்கள் மட்டும் எதிர் வினையாற்றவில்லை. இப்படி தன்னைப் பாதிக்கும் வகையில் விஷமக் கருத்தை விதைத்த போது ஒவ்வொரு சமுதாயமும் எதிர்வினையாற்றினார்கள். அப்போதெல்லாம் கருத்துச் சுதந்திரப் போராளிகள் வாய் திறக்க மாட்டார்கள்.
நாடார் சமுதாயம், தேவர் சமுதாயம், வன்னிய சமுதாயம், தலித் சமுதாயம், நரிக்குறவர் சமுதாயம், கிறித்தவ சமுதாயம் உள்ளிட்ட பலரும் மண்டைக் கனம் கொண்ட பேனா பிடித்தவர்களால் பாதிக்கப்பட்டார்கள். அதற்காகக் கொந்தளித்தும் உள்ளனர்.
பல திரைப்படங்கள் அவர்களின் போராட்டம் காரணமாக பணிந்த வரலாறு உண்டு.
நான் எதையும் கொளுத்திப் போடுவேன் என்ற மமதை கொண்ட விரல் விட்டு எண்ணும் சிலர் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கலவரம் உண்டாக்க முயல்வது கருத்து சுதந்திரத்தில் அடங்காது.
நாட்டில் உள்ள அனைவரும் ஆடை அணியாமல் நிர்வாணமாகத் திரியுங்கள் என்று ஒருவன் கருத்து சொன்னால் அது கருத்து சுதந்திரமா? அனைவரும் சின்ன வீடு வைத்துக் கொள்ளுங்கள் என்று ஒருவன் பிரச்சாரம் செய்தால் மானமுள்ள மக்கள் அடித்து உதைக்கத்தான் செய்வார்கள். பொது அமைதிக்கு எதிராகக் கூறப்படும் எதுவும் கருத்து சுதந்திரமாகாது. இதுதான் கருத்து சுதந்திரம் என்றால் இழுத்துப்போட்டு அடிப்பது, அடிப்பவனின் சுதந்திரம் என்று ஆகிவிடும்.
கருத்து சுதந்திரம் வேறு! கலவரம் உண்டாக்குவது வேறு! நாலு கிறுக்கன்கள் நினைத்ததையெல்லாம் எழுதுவேன்; படமாக்குவேன் என்று துணிந்தால் அது எந்த சமுதாயத்துக்கு எதிராக இருந்தாலும் அவர்களை அடக்கி வைக்க வேண்டும். நாலு பேரை விட சமுதாய நலன் முக்கியம் என்பதை உணரவேண்டும்.
குறிப்பு: கருத்துச் சுதந்திரம் பற்றி மனநல மருத்துவர் திருநாவுக்கரசு அவர்கள் தினமணி நாளேட்டில் அளித்த இலக்கணத்தைக் கீழே தருகிறோம்
ஒரு நிகழ்வு அல்லது நபர் பற்றிய எண்ணம், அபிப்ராயம் மற்றும் மதிப்பீடு ஆகியவைகளைத் தான், கருத்து என்று சொல்கிறோம். ஒருவரைப்பற்றி எந்தவிதமான கருத்தையும் மனதில் கொள்ள, அனைவருக்கும் உரிமை உண்டு. அதே நேரம், அக்கருத்தை பகிர்ந்து கொள்ள, வெளிப்படுத்த உரிமை உண்டா என்று கேட்டால், முழு உரிமை இல்லை.
ஆனால், கருத்தை தெரிவிக்க, வெளிப்படுத்த, விமர்சிக்க, கட்டுப்பாடற்ற உரிமை இல்லை. இதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். கருத்துச் சுதந்திரம் என்றாலும் அல்லது வேறு எந்த வகை சுதந்திரம் என்றாலும், அதற்கு எல்லையும் கட்டுப்பாடும் உண்டு.
ஒருவரது கருத்தால், உடல் பொருள் அல்லது மானம் மரியாதைக்கோ பங்கம் ஏற்பட்டால், அதற்குப் பெயர் கருத்துச் சுதந்திரம் அல்ல.
இதுதான் நல்லது, இதுதான் கெட்டது என்று கூறி, அதற்கான வாதங்களை எடுத்து வைத்தால், அது கருத்து சுதந்திரம் எனலாம்.
தனிப்பட்ட எந்த ஒரு கருத்தையும், தம் மனதில் வைத்துக் கொள்ள எப்படி உரிமை உள்ளதோ, அதுபோல் மாறுபட்ட கருத்தை வைத்துக் கொள்ள அனைவருக்கும் சுதந்திரம் உண்டு. அதேசமயம், விமர்சிக்கும்போதும், வெளிப்படுத்தும்போதும், அதனால் ஏற்படும் விளைவுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
எந்த விதமான விபரீதங்களையும், சங்கடங்களையும் தனி நபருக்கோ, சமுதாயத்திற்கோ ஏற்படுத்தக் கூடாது. எனவே, கட்டுப்பாடற்ற கருத்துச் சுதந்திரம் என்றுமே, யாருக்குமே கிடையாது என்பது தான் நிதர்சனமான உண்மை.
அதேசமயம், மாற்றங்கள் ஏற்பட, தீர்வுகள் உறுதிபட, விமர்சனங்கள் அவசியம் தேவை. எனவே பொறுப்பான கருத்துச் சுதந்திரம் அவசியம் தேவை; பொறுப்பற்ற கருத்துச் சுதந்திரம் தேவையில்லை.
– மா. திருநாவுக்கரசு,
மனநல மருத்துவர்,
மனநலம் கிளினிக், சென்னை.