ரமளான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் வழியில் நோன்பு நோற்பதும் நடைமுறையில் உள்ள பித்அத்துகளும்.
ரமளான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் வழியில் நோன்பு நோற்பதும் நடைமுறையில் உள்ள பித்அத்துகளும்.
நிய்யத் ஒரு விளக்கம்
இன்று எல்லா வணக்கங்களிலும் இனம் காண முடியாத அளவுக்கு பித்அத்துக்கள் நுழைந்து விட்டதைப் போன்று இந்த நோன்பு எனும் வணக்கத்திலும் நுழைந்து விட்டன. இதற்கு எடுத்துக்காட்டு தான் நிய்யத்.
நவைத்து ஸவ்மகதின் அன்அதாயி ஃபர்ழி ரமளான ஹாதிஸிஸ்ஸனதி லில்லாஹித் தஆலா
“இந்த வருடத்தின் ரமளான் மாதத்தின் ஃபர்ளான நோன்பை அதாவாக நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன் அல்லாஹ்வுக்காக” என்கின்றனர். பிறைக் கணக்குப்படி எப்போது பிறையைப் பார்க்கின்றோமோ அப்போதே அந்த நாள் ஆரம்பமாகி விடுகின்றது. இப்படியிருக்க நாளை பிடிக்க என்று கூறுவது எப்படிப் பொருத்தமாகும்?. நிய்யத் என்றால் எண்ணுதல், தீர்மானித்தல் என்று பொருள். இது உள்ளம் சம்பந்தப்பட்ட விஷயம். உடல் சம்பந்தப்பட்டது அல்ல. இத்தகைய நிய்யத்தை “செய்கிறேன்” என்று கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
உளூ, தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களில் நிய்யத் என்ற பெயரில் வாயால் கூறப்படுவது மார்க்கத்தில் புதிதாக நுழைக்கப்பட்ட பித்அத் ஆகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 3243
ஸஹர் நேரம்
நிய்யத் என்ற பெயரில் சில வாசகங்களைக் கூறுவதோடு நிற்காமல், நிய்யத் செய்து விட்டால் எதையும் சாப்பிடக் கூடாது என்றும் கூறுகின்றனர். நிய்யத் செய்தல் என்பதே இல்லை எனும் போது நிய்யத் செய்து விட்டால் சாப்பிடக் கூடாது என்று தடை போடுவது எந்த விதத்திலும் சரியாகாது.
வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! (அல்குர்ஆன்2:187)
சுப்ஹ் நேரம் வரும் வரை சாப்பிடலாம் என்பதை இந்த வசனம் கூறுகின்றது. இதற்கு விளக்கமாக வரும் ஹதீஸ்களும் சுப்ஹ் நேரம் வரை ஸஹர் உணவு உண்ணலாம் என்பதை வலியுறுத்துகின்றன.
பிலால் (ரலி) அவர்கள் (ஃபஜ்ருக்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இப்னு உம்மி மக்தூம் (ரலி) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள். பருகுங்கள். ஏனெனில் அவர் தாம் ஃபஜ்ரு நேரம் வந்ததும் பாங்கு சொல்கின்றார்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1918, 1919
ஸஹர் நேரத்தைத் தாமதப்படுத்தி நோன்பு துறப்பதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் நீடித்துள்ளனர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: அஹ்மத்
மேற்கண்ட ஹதீஸ் ஸஹரைத் தாமதப்படுத்த வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதால் தாமப்படுத்தி உண்ணலாம்.
நோன்பு துறத்தல்
சூரியன் மறைந்து இந்தத் திசையிலிருந்து இரவு முன்னோக்கி வந்து, அந்தத் திசையிலிருந்து பகல் பின்னோக்கிப் போனால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி),நூல்: புகாரி 1954
நோன்பை நிறைவு செய்வதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), நூல்: புகாரி 1957
சூரியன் மறைந்தவுடன் நோன்பை நிறைவு செய்ய வேண்டும் என்பதைக் கூறும் ஹதீஸ்கள் ஏராளமாக இடம் பெற்றுள்ளன. ஆனால் இன்று நடைமுறையில் பேணுதல் என்ற பெயரில் சூரிய மறைவு நேரத்திலிருந்து 5 அல்லது பத்து நிமிடங்கள் வரை தாமதமாக நோன்பு துறக்கின்றனர். தற்போது வெளியிடப்படும் ஆயிரக்கணக்கான நோன்பு அட்டைகள், பள்ளிவாசல்களில் குறிக்கப்படும் நோன்பு துறக்கும் நேரம் அனைத்தும் நபிவழிக்கு மாற்றமானவையே என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நோன்பை முறிக்கும் காரியங்கள்
உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல் ஆகிய காரியங்கள் தான் நோன்பின் நேரமான ஃபஜ்ரிலிருந்து சூரியன் மறையும் வரை மார்க்கத்தில் தடுக்கப்பட்டவை ஆகும்.
வேண்டுமென்றே இக்காரியங்களை யாரேனும் செய்தால், ஒரு அடிமையை உரிமை விடுதல் அல்லது இரண்டு மாதங்கள் தொடர்ந்து நோன்பு நோற்றல் அல்லது 60 ஏழைகளுக்கு உணவழித்தல் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்ய வேண்டும். (பார்க்க புகாரி 1936)
இவை தவிர பல்வேறு காரியங்கள் நோன்பை முறிக்கக் கூடியவை என்ற பெயரில் மக்களிடம் நடைமுறையில் உள்ளன.
1. குழந்தைகளை முத்தமிடுதல், 2. இரத்தக் காயங்கள் ஏற்படுதல், 3. எச்சிலை (சளியை) விழுங்குதல், 4. முடி வெட்டுதல், 5. வாசனை சோப்பு போடுதல், 6. நறுமணம் பூசுதல், 7. வாந்தி எடுத்தல், 8. நோன்பு நேரத்தில் தாமாக ஸ்கலிதம் ஏற்படுதல், 9. உணவை நாவால் ருசி பார்த்து உமிழ்தல், 10. பற்பசை அல்லது பல்பொடியைக் கொண்டு பல் துலக்குதல், 11. மருத்துவத்திற்காக ரத்தம் வழங்குதல், 12. ஆற்றில் முங்கிக் குளித்தல், 13. காது, மூக்கு வழியாக தண்ணீர் உள்ளே செல்லுதல், 14. நோன்பு துறந்த பின் ஓதும் துஆவைக் கூறுதல், 15. நோய் நிவாரணத்திற்காக ஊசி போட்டுக் கொள்ளுதல், 16. கண், காது போன்றவற்றுக்கு மருந்து போடுதல் போன்ற செயல்களால் நோன்பு முறியாது.
தவறான நம்பிக்கைள்
யாராவது இறந்து விட்டால் இறந்தவரின் குடும்பத்தவர்கள் வலுக்கட்டாயமாக நோன்பை முறித்து விடுகின்றனர். இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. இவ்வாறு வேண்டுமென்றே நோன்பை முறித்தால் மேலே நாம் கூறியுள்ள பரிகாரங்களைச் செய்ய வேண்டும். இல்லையேல் அவர் மறுமையில் அல்லாஹ்வின் தண்டனையை ஏற்றாக வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் பேரீச்சம்பழம் அல்லது தண்ணீர் கொண்டு நோன்பு துறப்பதை வலியுறுத்தியுள்ளார்கள். ஆனால் இதற்கு மாற்றமாக உப்பைக் கொண்டு நோன்பு துறக்கும் வழக்கம் உள்ளது. இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில் நோன்பு நோற்று, பித்அத்தான காரியங்களையும் மூட நம்பிக்கைகளையும் விட்டு விலகி அல்லாஹ்வின் நல்லருளைப் பெறுவோமாக!
download செய்ய இங்கே கிளிக் செய்யவும்